"என்ன எல்லாரும் ஏய்ச்சிட்டாங்கப்பா. கம்பெனி மீட்டிங் நடந்தது. என்ன நீக்கிட்டானுங்க. நான் போட்ட முதல் என்னடா ஆச்சின்னு கேள்வி கேட்டதுக்குத் தூக்கி வெளிய எறிஞ்சிட்டானுங்க!"
"அப்பிடியா?"
"பத்து வருஷத்துக்கு முந்தி சின்னதா பத்தாயிரம் மொதல் போட்டு கம்பெனி ஆரம்பிச்சோம். நானும் சண்முகமும். கஷ்டப்பட்டு ஒழச்சோம். இப்ப ரெண்டு மில்லியன் டர்ன் ஓவர்"
"அப்படின்னா?"
"ரெண்டு மில்லியன் பணம் பொரளுது. என்ஜினியரிங் புரடக்ட்ஸ். கம்பெனி வளர்ந்தவொண்ண ஒருத்தன் வந்தான். தொரைன்னு. பிளடி பாஸ்டர்ட். கோடிக்கணக்கா பணம் பொரட்ட வடூயிருக்குன்னான். கவர்மென்ட் கான்ட்ரேக்ட் வாக்கிக் குடுக்கிறேன், எனக்கு டத்தோவைத் தெரியும்னான். பூமிபுத்ரா பார்ட்னர் வச்சிக்குவோம்னான். அவன் பேச்ச நம்பி மொதல் இல்லாமலேயே அவனைச் சேர்த்தோம். அப்புறம் சண்முகம் சொன்னான் "இந்தத் தொர நல்லவன் இல்ல பாஸ்கரன். ரொம்ப சூழ்ச்சிக்காரன். அவன விட்டுடு"ன்னு. ஆனா தொர பணத்தாச காட்டி என்னை அவன் பக்கம் திருப்பிட்டான். கம்பெனில நஷ்டம்னு கணக்குத் தயாரிச்சி சண்முகத்த கழட்டி விட்டுட்டோம். அப்புறம்தான் பாஸ்கரன் என்ட் தொரைன்னு கம்பெனி பேர மாத்தினோம். இப்ப என்னையே ஓட்டாண்டி ஆக்கிட்டான்பா"
கொஞ்சம் குடித்தான். பரிமாறிக் கொண்டார்கள்.
"சண்முகத்துக்கு நான் பண்ணின துரோகத்துக்கு தண்டன கெடச்சுப் போச்சு! பேங்கில கடன் வாங்கச் சொன்னான். வாங்கி கம்பெனில போட்டேன். அதில என்ன மாட்டிட்டு அவன் தப்பிச்சிட்டான். கம்பெனி அவனோடதாப் போச்சி. கடன் என்னோடதாப் போச்சி!"
"எவ்வளவு கடன்?"
"ஒரு மில்லியன்"