"அவ ஒரு கொலைகாரப் பேய்!" இதுவரை மறைந்து நின்றிருந்த மாமியார் முன்னுக்கு வந்து கத்தினாள். "ஒரு சாதாரண பொண்ணா இருந்தா ஒரு கத்தி எடுத்து ரத்தத்துக்கு பயப்படாம கொத்து கொத்துன்னு கொத்த முடியுமா? உன்னாலியும் என்னாலியும் முடியுமா" என்று கேட்டாள்.
ராஜி அவளை முறைத்தாள். "முடியும் அத்தை! ஏன் முடியாம? இப்ப நீங்க வார்த்தைகளால அவள நாய் பேய்னு கொத்தல? போன ஒரு வருஷமா அவள மனசுக்குள்ளியே நீங்க கொத்தல? அப்படித்தான்"
மாமியார் அதிர்ந்து நின்றாள். ராஜி தேநீரைத் தூக்கி உதட்டருகே கொண்டு உறிஞ்ச முயன்றாள். உதடுகள் துடித்தன. தொண்டை அடைத்திருந்தது. குடிக்க முடியவில்லை.
சேகரன் அறைக் கதவை ஓங்கிக் குத்தினான். "ஓக்கே! நீ ரொம்ப தலைக்கு மேல போயிட்ட! இப்படியே விட்டா முடியாது. நீ உன் தங்கச்சிய இந்த வீட்டுக்குள்ள கொண்டு வர முடியாது. இது என்னோட கட்டளை!"
கொஞ்சம் குரல் இறங்கிச் சொன்னாள்: "இதோ பாருங்க! கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க! அவளுக்கு வேற யார் இருக்கா? எங்க போவா? வேற வழியே இல்ல!" என்றாள்.
"வேற வழி இல்லியா? இருக்குடி. நீ இந்த வீட்ட விட்டு வெளியே போய் அவளோட குடும்பம் நடத்து. நீ அவளோட தொடர்பு வச்சிக்கிறதுன்னா நம்ம உறவு அறுந்து போகும். நானும் நீயும் கணவன் - மனைவி இல்ல!"
கோப்பையைக் கீழே வைத்தாள். "சரி" என்றாள்.
சேகரன் அதிர்ந்தான். "என்ன சரி?"
"அதான் ஒவ்வொரு முறையும் உறவு அறுந்து போகும்னு மிரட்டிக்கிட்டே இருக்கிங்கள! அவ்வளவு சுலபமா அறுத்துட முடியும்னா அறுத்துக்கத் தயார்! என் தங்கச்சிய நானே தனியா வச்சி காப்பாத்திறேன்"