இரண்டு சாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்.
விந்துப் பரிசோதனையில் பத்மாவின் தொடையில் இருந்தது பாஸ்கரனின் விந்துதான் என உறுதிப் படுத்தப் பட்டிருந்தது. சவத்தின் முதுகிலிருந்த கீறல்கள் பத்மாவின் நக அமைப்புக்குச் சரியாக இருந்தன. மற்ற காயங்களும் தொடைச்சிராய்ப்புகளும் பத்மா தனியறையில் நீதிபதிக்குச் சொன்ன விவரங்களோடு ஒத்திருந்தன.
"இது தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தினால் உணர்ச்சி மேலீட்டால் ஓர் இளம் பெண் செய்த கொலை என இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இது தற்காப்புக்காகச் செய்யப்பட்ட கொலை அல்ல. சம்பவம் நடந்து முடிந்த சில மணி நேரத்துக்குப் பிறகு செய்யப்பட்டுள்ளதால் திட்டமிட்ட கொலை என்றே கருத வேண்டியுள்ளது. இதில் மூர்க்கம் உள்ளது. இது குற்றமே. ஆனால் இந்தக் குற்றம் நடந்த எல்லாச் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு இந்தக் குற்றவாளி இரண்டு ஆண்டுகள் இளங் குற்றவாளிகள் நிலையத்தில் வைக்கப்பட்டு போதனை புகட்டப்படவேண்டும் என நீதிமன்றம் தண்டனை விதிக்கிறது."
பத்மா "அக்கா" என்று அலறியவாறே போனாள். ராஜியால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழ மட்டுமே முடிந்தது.
வழக்கறிஞரைப் பார்த்து நன்றி சொன்னாள் ராஜி. "என்னால செய்ய முடிஞ்சது அவ்வளவுதாம்மா!" என்றார் அவர். வழக்கறிஞரின் இந்தத் தற்காப்பு இல்லை யென்றால் பத்மா ஐந்து முதல் ஏழாண்டுகள் சிறைக்குச் சென்றிருக்கலாம் என்பதை ராஜி அறிந்து வைத்திருந்தாள்.
"உங்களுக்கு எவ்வளவு ·பீஸ்னு நீங்க சொல்லியே!" என்று ராஜி கேட்டாள்.
மூர்த்தி யோசித்தார். "நீங்க இவ்வளவு தைரியமா உங்க புருஷன எதிர்த்து நியாயத்தை நிலைநாட்ட சாட்சியம் சொன்னதே எனக்கு மகிழ்ச்சி! இதுக்கு மேலும் உங்க புருஷனக் கோபப் படுத்தாம நீங்க எவ்வளவு பணம் எனக்குத் தரமுடியும், சொல்லுங்க!"
"என் தனி சேமிப்பா ஒரு ஆயிரம் ரிங்கிட் வச்சிருக்கேன்! அவ்வளவுதான்"