போலிசும் ஆம்புலன்சும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வந்தன. ஆம்புலன்சில் வந்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார். பாஸ்கரன் செத்துவிட்டிருந்தான்.
போலீசில் வாக்கு மூலம் எடுத்தார்கள். இரத்தத்தின் மாதிரியும் விந்துவின் மாதிரியும் எடுத்துக் கொண்டார்கள். உடலை சவப் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு போனார்கள். பத்மாவை போலிஸ் காரில் ஏற்றி நிலையத்தில் தடுத்து வைத்தார்கள். சேகரன் வர மறுத்து விட ராஜி மட்டும் உடன் போய் அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு வந்தாள்.
சேகரன் கொதித்தான். "கொலைகாரி, குடும்பத்தை அழித்த நாசகாரி" என்று இரவு முழுக்கக் கத்தினான். அவனோடு அவன் அம்மாவும் சேர்ந்து கொண்டு கத்தினாள். பாஸ்கரன் என்ன செய்தான் என்பது பற்றி இருவரும் பேசவில்லை. ராஜி பிள்ளைகளை அணைத்துக் கொண்டு இரவு முழுக்க ஒடுங்கிப் போயிருந்தாள். போலிஸ் லாக்கப்பில் நடுங்கிச் சுருண்டுப் போயிருக்கும் அந்தப் பனிரெண்டு வயது பெண்ணின் உருவமே நினைவுக்கு வந்து அவளை வதைத்தது.
சவச்சடங்குகள் முடிந்து கொதிப்புக் கொஞ்சம் தணிந்திருந்த ஒரு காலையில் கணவனிடம் கேட்டாள் ராஜி: "ஏங்க! பத்மாவுக்கு லாயர் ஏதாச்சும் ஏற்பாடு பண்ண வேணாமா?"
தணிந்திருந்தவன் மீண்டும் கிளர்ந்து எழுந்தான். "என்ன ராஜி பேசிற? எதுக்கு லாயர்? அந்தச் சனியன நானே தூக்கில போடுவேன்! இதுக்கு லாயர் வேற கேக்குதா?"
"ஏற்பாடு பண்ணாம எப்படிங்க?"
"என் தம்பிய கொன்னவளுக்கு நானே லாயர் ஏற்பாடு பண்றதா? ஊர் சிரிக்காது? மூடு வாய!"
ஊர் ஏன் சிரிக்கும் என ராஜிக்கு விளங்கவில்லை. ஆனால் வாயை மூடிக் கொண்டாள். இங்கு தனது பேச்சு எடுபடாது என விளங்கிக் கொண்டாள்.
பிற்பகலில் தனக்குத் தெரிந்த தொழிற்சாலை மேலாளர் மூலமாக ஒரு வழக்கறிஞரைப் பார்த்துப் பேசினாள். மூர்த்தி என்ற அந்த இளம் வழக்கறிஞர் அக்கறையாகக் கேட்டு