விடுவான். ராஜி அந்த வீட்டில் வாழ்ந்து இரண்டு குழந்தைகளையும் பெற்றுவிட்ட இந்த மூன்று ஆண்டுகளில் அந்தக் குடும்பத்தில் யாரிடமும் அவளால் நெருங்க முடியவில்லை. பாஸ்கரனின் முரட்டுத் தனத்தை மறைப்பதற்காகவே தன்னை இப்படி அந்நியமாக வைத்திருக்கிறார்கள் என்று அவளுக்குத் தெரிந்தது. ஆனால் ஏன் என்று புரியவில்லை.
ராஜிக்கு இது விசித்திரமாக இருந்தது. அவள் கலகலவென சிரித்துப் பேசுகின்ற குடும்பத்திலிருந்து வந்தவள். தந்தையை இளவயதில் இழந்துவிட்ட குடும்பம். ஆனால் தன்னையும் தன் தங்கை பத்மாவையும் அவள் தாய் அன்பாகத்தான் வளர்த்தாள்.
சேகரனின் குடும்பத்தில் அவர்களுக்கிடையே நெருக்கமும் தற்காப்பு உணர்வும் அதிகமாக இருந்தன. ஆனால் மனம் விட்டுப் பேசுகின்ற திறப்பு இல்லை. ராஜி அதற்குள் நுழைந்து நிலைமையைத் தளர்த்தலாம் என்று முயன்றாள். கொஞ்சம் சுதந்திரக் காற்றை ஓடவிடலாம் என்று நினைத்தாள். ஆனால் அவள் நெருங்க நினைத்தால் அவர்கள் இறுக்கம் இன்னும் கூடியது. "நீயேன் இதிலெல்லாம் போய் தலையிட்ற? அம்மா எல்லாம் கவனிச்சிக்குவாங்க!" என்று அவளை உறுதியாகக் கதவிற்கு வெளியே நிறுத்தி வைத்தான் சேகரன்.
இந்த நிலையில்தான் பத்மாவுடன் தனித்து வாழ்ந்து கொண்டிருந்த ராஜியின் அம்மா ஒரு நாள் நெஞ்சைப் பிடித்துப் படுத்தவள் அடுத்த நாள் போய்விட்டாள். அம்மாவை சவவண்டியில் அனுப்பிவிட்டு உட்கார்ந்த போதுதான் பத்மாவின் நிலைமை என்ன என்ற பெரிய கேள்வி வந்து நின்றது. பத்மாவுக்கு அப்போதுதான் பனிரெண்டு வயது நடந்து கொண்டிருந்தது.
அவளை வைத்துக் கொள்ளும் நெருங்கிய உறவினர் யாரும் இல்லை. தான்தான் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ரகசியங்கள் நிறைந்திருக்கும் அந்த வீட்டிலா? எல்லோரும் மனதுக்குள் பூட்டுப் போட்டுக் கொண்டிருக்கும் அந்த வீட்டிலா? ராஜிக்கு அதில் கொஞ்சமும் மகிழ்ச்சியில்லை.
ஆனால் வேறு வழியில்லை. அம்மாவின் வீட்டைப் பூட்டிவிட்டு பத்மாவைக் கையோடு அழைத்துக் கொண்டு வந்து விட்டாள். புகுந்த வீடு புதியவள் வரவால் இருப்புக் கொள்ளாமல் திணறியது. சேகரன் அவளை மிரட்டினான். "இது என்ன ராஜி! வேற எங்காவது கொண்டு விடு ஒன் தங்கச்சிய! இந்தச் சின்ன வீட்டில எங்க இடம் இருக்கு?" என்றான்.