போகப் போக அது பெரும்பாலும் சேகரனின் தம்பி பாஸ்கரனைப் பற்றியதுதான் என அவள் ஊகித்துக் கொண்டாள். பனிரெண்டு பதின்மூன்று வயதில் அவன் உடல் பெருத்திருந்தான். முரடனாக இருந்தான். அவன் ராஜியிடம் அதிகம் பேசுவதில்லை. பள்ளிக்கூடம் போய் வந்து கொண்டிருந்தான். வீட்டில் அதிகம் தங்குவதில்லை. மாலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே எங்காவது போய்விடுவான்.
ராஜி வேலைக்குப் போக ஆரம்பித்திருந்தாள். பக்கத்திலேயே ஒரு தொழிற்சாலையில் அவளுக்கு அசெம்பிளி லைனில் மேற்பார்வையாளர் வேலை கிடைத்திருந்தது.. சில சமயம் ஷி·ப்டில் வேலை செய்ய வேண்டியிருந்தது. கஷ்டமாக இருந்தாலும் ஒரு கம்பெனியில் கணக்கு அலுவல் பார்த்து வந்த சேகரனுக்கு நிகரான வருமானம் வந்ததால் வேலை பிடித்திருந்தது.
அப்படி வெளியில் போக வர இருந்த போதுதான் பாஸ்கரனைப் பற்றி அவள் கேள்விப்பட ஆரம்பித்தாள். அவன் எடுத்ததெற்கெல்லாம் மற்ற பையன்களுடன் சண்டை பிடிப்பது, எப்பொழுதும் நண்பர்கள் இல்லாமல் தனியாகவே சுற்றுவது, போதைப் பொருள் பழக்கம் இருக்குமோ என்ற வதந்திகள், அவன் பெண்களைப் பார்த்து இளிப்பது எல்லாம் கேள்விப் பட்டாள்.
ஆனால் எதையும் வீட்டில் சொல்ல முடியாது. அந்தப் பேச்சை எடுத்தால் "உனக்கென்ன, விடு! பொம்பிளகளுக்கு வேற வேல கெடையாது!" என்பான் சேகரன்.
வீட்டுக்கும் அவனைப் பற்றி அடிக்கடி முறையீடுகள் வந்து கொண்டிருந்தன. பள்ளிக் கூடத்தில் சண்டை போட்டு வருவான். திருட்டு பற்றிய முறையீடுகளும் வந்தன. ஆனால் முறையீடு பண்ண வந்தவர்களை சேகரனும் அவன் தாயும் முரட்டுத் தனமாகத் திட்டி அனுப்பினார்கள். இரவில் தாயின் அறையில் மூவரும் சேர்ந்து பேசுவார்கள். சில சமயம் பாஸ்கரனை சேகரன் அடிப்பான். பாஸ்கரன் திரும்பிச் சண்டை போடுவான். மாமியார் பாஸ்கரனை அணைத்துக் கொண்டு சேகரனோடு சண்டை போடுவாள்.
இந்த விஷயங்களில் அவர்கள் ராஜியை ஒரு நாளும் நெருங்க விடுவதில்லை. ராஜி பாஸ்கரனைப் பற்றிக் கேட்க முனைந்த நாட்களில் சேகரன் அவள் வாயை அடைத்து