சிரிப்பு மறைந்தது. அவன் முகம் சுரீர் என்று மாறியது. அவளைக் கொஞ்சம் முறைத்தவாறிருந்தான். புயலின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தன. "என்னாவாம்?" என்றான் மொட்டையாக.
"அவளுக்கு அடுத்த மாசம் விடுதலை கொடுக்கிறாங்களாம்!"
டிவிக்கு முகம் திருப்பினான். அது கடுகடுவென்று ஆகிவிட்டிருந்தது. அவன் மனம் அந்தப் படத்தில் இப்போது இல்லை என்பது தெளிவாகிவிட்டது. ஒன்றும் கேட்கவில்லை. கேட்டால் இந்தப் பேச்சு வளரும் என்பதால் கேட்காமலேயே முடித்து விடவேண்டும் என்று நினைத்தான் போலிருக்கிறது.
இரண்டு நிமிட மௌனத்தை ராஜேஸ்வரி கலைத்தாள்: "வந்து அழச்சிட்டுப் போ அக்கான்னு கேட்டிருக்கா!"
இன்னுமொரு நிமிடம் கடுகடுவென்று இருந்தான். அப்புறம் முகம் திருப்பிக் கேட்டான்: "சரி, கேட்டா, நீ என்ன பண்ணப் போற?"
பயந்து தயங்கிச் சொன்னாள்: "போய் அழச்சிக்கிட்டு வரலான்னுதான் இருக்கேன்!"
அவன் குரல் ஓங்கியது. கத்தினான். "ஏன் ராஜி, பைத்தியமா ஒனக்கு? சுத்தமா முட்டாளாயிட்டியா? இப்படி நெனச்சிக்கூடப் பாக்கலாமா?"
"ஏங் கத்திறிங்க? புள்ளங்க முளிச்சிக்கப் போறாங்க!" என்றாள்.
"ஆகா, புள்ளங்க மேல மகா அக்கறை உள்ளவதான் நீ! அதுனாலதான் ஒரு கொலைகாரப் பேய கொண்டாந்து ஊட்டுக்குள்ள வச்சிக்கிறேங்கிற! நாளக்கி உன் புள்ளங்களயும் குத்தி கொல பண்ணிட்டு போவட்டும்னு!"
"அநியாயமாப் பேசாதிங்க! அவ அப்படிப் பட்டவ இல்ல!"