"அப்பிடியா? எனக்குத் தெரியாதே" பார்வதி மாமியின் குழப்பம் மேலும் அதிகமானது.
"அவளோட இவளும் வந்து இங்கயே இருக்கப் போறாளாம்!"
"அப்படியா ராஜி?" என்று திகைத்துக் கேட்டாள் பார்வதி அத்தை.
ராஜி பேசாமல் இருந்தாள்.
"ஏம்மா அப்படி? ஏன் ராஜி உங்க வீட்டவிட்டு இங்க வந்து இருக்கணும்?" என்று கேட்டாள் பார்வதி அத்தை.
"ஏன்னா, கொலைகாரிக்கு எங்க ஊட்ல எடம் இல்லன்னு சொன்னோம். அவள கூட்டிக்கிட்டு வந்தா எங்க ஊட்ல ஒனக்கும் இடம் இல்லன்னு சொன்னோம்! அதினால புள்ளங்களயும் புருஷனையும் விட்டுட்டு இங்க வந்து இருப்பாளாம்!"
"அப்படியா ராஜி?" பார்வதி அத்தையின் திகைப்பும் குழப்பமும் உச்சத்துக்குப் போயிருந்தன. ராஜி பேசாமல் இருந்தாள்.
"எத்தன கொளுப்பு நெஞ்சளுத்தம் பாத்திங்களா ஒரு பொம்பிளைக்கு? நீங்க எடம் கொடுப்பிங்கிளா? ஒரு கொலகாரிய வீட்டில வச்சிக்குவிங்களா?" மாமியார் கத்தினாள்.
பார்வதி அத்தை மாமியாரை நேராகப் பார்த்தாள். "உங்க மகன் கற்பழிச்சதினால வெட்டிட்டுப் போன சின்னப் பொண்ணப் பத்திதான சொல்றிங்க? நல்லா வந்து இருக்கட்டும். தன்னுடைய மானத்த காத்துக்கத்தான செஞ்சா? அதில என்னா தப்பு?"
மாமியார் அதிர்ச்சி அடைந்து நின்றாள். அப்புறம் கத்தினாள்: "என்னா தப்பா? நாளக்கி உங்களயும் அரிவாள எடுத்து வெட்ட மாட்டான்னு என்ன நிச்சயம்?"
"என்ன ஏன் வெட்டிறா? நான் என்ன அவளக் கீழத் தள்ளி கற்பழிக்கப் போறேனா?"