"தயார்தான்!"
"போய் எங்க இருப்ப?"
"இதோ மூணாவது வீட்டில பார்வதி அத்தை இருக்காங்க. அவங்க ரூம் தர்ரன்னு சொல்றாங்க. அங்கயே இருந்துக்குவோம் நானும் பத்மாவும்!"
அவன் கண்களில் தணல் பறக்க முறைத்தான். மாமியாரும் முறைத்தாள். இருவரின் பார்வைத் தீக்கதிர்கள் மத்தியில் ராஜி தனது தேநீரை மெதுவாக உறிஞ்ச ஆரம்பித்திருந்தாள்.
*** *** ***
கொஞ்ச நேரம் கழித்து மாமியார் திடுதிடுவென்று அந்த பார்வதி அத்தை வீட்டுக்குப் போவது தெரிந்தது. ராஜி பின்னாலேயே போனாள்.
"எங்க வீட்டு மருமகளுக்கு இங்க ரூம் கொடுக்கப் போறிங்களா?" என்று சத்தமாகக் கேட்டாள் மாமி.
பார்வதி அத்தை ஏன் இந்த இருட்டு நேரத்தில் இந்த அம்மாள் சத்தம் போடுகிறாள் என்று புரியாமல் மேலும் கீழும் பார்த்து அமைதியாகச் சொன்னாள்: "ஒரு ரூம் காலியா இருக்கு, அதுக்கு யாராவது ஆள் பார்த்துக் குடுன்னு நாந்தான் ராஜிக்குச் சொல்லியிருந்தேன்!"
"அவ யாரக் குடி வைக்கப் போறா தெரியுமா?"
ராஜியைக் குழப்பமாகப் பார்த்தாள் பார்வதி மாமி. "எனக்கு சொல்லலிய அம்மா. யார்னு சொல்லலிய!"
"நான் சொல்றேன். அவ தங்கச்சி, அந்தக் கொலைகாரப் பிசாசு விடுதலை ஆகி வர்ராளாம். அவளக் கொண்டாந்து குடி வைக்கப் போறாளாம்!"