ஒரு கணம் மௌனம் கனத்தது. மாமியார் முன்னே வந்தாள். "என்னடி பேசிற? ஒரு குற்றவாளிச் சிறுக்கிக்காக குடும்பத்த விட்டுப் போறேங்கிறியா?"
"அவ குற்றவாளிச் சிறுக்கி இல்ல. என் தங்கச்சி. குடும்பத்த விட்டு நான் போகல. நீங்கதான் வெரட்டுறிங்க!"
"சம்பாரிக்கிறோம்கிற திமிரா?" என்றான் சேகரன்.
"ஏன் இருக்கக்கூடாது? உங்களுக்கு சம்பாதிக்கிற திமிர் இருக்கும்போது உங்களுக்கு சமமா சம்பாதிக்கிற எனக்கு இருக்கக்கூடாதா?"
"உன்ன..." சீறிக் கொண்டு முன்னால் வந்து முஷ்டியை முறுக்கி ஓங்கினான். முகத்துக்கு முன்னால் வந்ததும் முஷ்டி அப்படியே உறைந்து நின்றது.
கையை இறக்கிக் கொஞ்சம் அப்புறம் இப்புறம் நடந்தான். மூச்சிரைத்தான். "அப்ப வீட்டவிட்டு வெளியே போயிடுவ?"
"ஆமா!" என்றாள்.
"அப்ப புள்ளைங்க?"
"உங்க இஷ்டம். நீங்களே வச்சிக்கலாம். வேண்டான்னா என்னோட அனுப்பலாம்!"
"புள்ளங்கள ஒருகாலும் ஒன்னோட அனுப்பி அந்த கொலைகாரியோட வாழ வைக்க மாட்டேன்!"
"சரி!"
"புள்ளங்கள விட்டுப் போக நீ தயாரா?"