இப்போ இல்லை நிறைய வருஷமா இது நடக்குதாம்... ஒன்னோ இரண்டோ குழந்தை வேற இருக்காம்... இன்னைக்கு அங்கே ஒரே சண்டைன்னு கவிதா சொன்னா...”
“...”
“பின்னே இவள் இப்படி இருந்தா அவன் வேற என்ன செய்வான்? அவனை மட்டும் குறை சொல்லி என்ன பிரயோஜனம்?”
சௌபர்ணிகாவிற்கு மேலே கேட்க பிடிக்கவில்லை...
“சரி சித்தி நான் ரூமுக்கு போறேன் எனக்கு தலை வலிக்குது...”
“போய் முகம் கழுவிட்டு வா, நான் சூடா காபி போட்டு தரேன்... அந்த கஸ்தூரி முகமே சரி இல்லைன்னு கவிதா சொன்னாள்... ஒருவேளை மனசு ஒடைஞ்சு தற்கொலை ஏதாவது செஞ்சுப்பாளோ என்னவோ... அப்பார்ட்மென்ட்டில் வாழ்ந்தா இதெல்லாம் ஒரு பிரச்சனை...”
சௌபர்ணிகாவிற்கு திடுக்கென்றிருந்தது... கஸ்தூரிக்கு பெற்றோர் இல்லை... சொந்தம் என்று இருந்தது கணவன் குமரன் மட்டும் தான்... கஸ்தூரிக்கு குமரன் மீது இருந்த அலாதி அன்பும் அவளுக்கு தெரியும்...
கோமதியின் பேச்சினால் ஏற்பட்ட கலக்கத்தினால் தயக்கத்துடன் கஸ்தூரியின் மொபைல் எண்ணுக்கு போன் செய்தாள். அந்த பக்கம் ரிங் போனதே தவிர, எடுக்க படவில்லை...
நேராக சென்று பார்க்கலாமா... என்று அவள் யோசிக்கும் போதே,
“நான் சொன்னேன் தானே சௌபி, கட்டாயம் அந்த பொம்பளை ஏதோ செஞ்சுக்கிட்டான்னு தான் நினைக்கிறேன்... வேலைக்காரி வந்து கதவை தட்டினால் சத்தமே இல்லையாம்...”
சௌபர்ணிகா மனம் மேலும் கலங்கியது... மீண்டும் கஸ்தூரிக்கு போன் செய்தாள்... ஆனால் அழைப்பு எடுக்கப்படவில்லை... நேராக சென்று பேசவும் அவளுக்கு தயக்கமாக இருந்தது...