(Reading time: 25 - 49 minutes)

யிர் போகும் வலியை விட.. உயிரை இழந்து விடுவோமோ என்ற வலி தான் அதிகமாம் எங்கோ படித்தது அநியாயத்திற்கு அவன் நினைவுக்கு வர ...

வேதனையுடன் அந்த ஆபரேஷன் தியேட்டரை வெறிக்கும் பொழுது.. உள்ளேயிருந்து வந்தாள் ஒரு செவிலி. அவள் பின்னே ரசி!!! அவன் ரசி!

‘இவள் எங்கே இங்கே?’, இவன் திகைக்க...

இத்தனை நேர ஆத்திரமும், கோபமும் நிமிடத்தில் அழிந்தே போனது.. அவள் சோர்ந்த முகத்தைக் கண்டதும்!

‘உன் பொக்கிஷம் ஏதாவது வாலன்டரி ஒர்க்ன்னு வந்திருப்பா’,  உள்மனம் சொல்ல வேகமாக அவளை நோக்கி நடக்க...

சுற்றி அத்தனை பேர் இருந்தாலும் தன்னவனை சட்டென்று கண்டு கொண்டவளின் கண்களிலும் திகைப்பு.

அவளுடன் வந்த செவிலியை நோக்கி விரைந்தனர் ராஜனின் குடும்ப உறுப்பினர்.

“ஆபரேஷன் இன்னும் முடியலைம்மா... இவங்ககிட்ட இருந்து ரத்தம் ஏத்தியிருக்கு! ஆபரேஷன் முடிஞ்சதும் டாக்டர் வந்து சொல்லுவார்”, என்று அவர் சொன்னது தான் தாமதம்..

அந்த சூழ்நிலைக்கு பொருத்தமின்றி இவன் முகத்தில் அரும்பியது புன்னகை.

‘அவங்களே டென்ஷன்ல இருக்காங்க.. நீங்க சிரிக்கிறீங்க’, இவள் விழிகள் அவனை அதட்டும் பொழுது, ரஞ்சிதம் இவளருகில் வந்து,

“இளவரசி, நீ தான் ரத்தம் கொடுக்க வந்ததா? அப்போ பார்க்கிங் லாட்டிலே பார்த்தது உன்னைத் தானோ!!” என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பும் பொழுதே  இருவரையும் நெருங்கி விட்டிருந்தான் சின்ன கண்ணன்.

அவர் கேட்ட விதத்தில் இளவரசி சங்கடமாக உணர்ந்தாள்.

“இவளா தான் இருக்கும்! யாருக்கும் உதவி செய்றதுன்னா முதல் ஆளா நிற்பாளே! ”, என்றான் தன்னவளை தாய் தவறாக எண்ணக் கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வில் முந்திக் கொண்டு சொன்னான்.

அதற்குள் ராஜனின் குடும்பத்தினர் அவளை அணுகி  நன்றி சொல்ல.. அதே சமயம் மருந்து கவருடன் வந்தான் அவளை பைக்கில் அழைத்து வந்தவன். செவிலியிடம் அதை கொடுத்து விட்டு, ராஜனின் நிலையை விசாரித்து விட்டு இவளருகில் வந்தவன்,

“இந்த உதவியை மறக்கவே மாட்டேன் இளவரசி! உங்களுக்கு லேட் ஆகிடுச்சே! கிளம்புங்க நான் ட்ராப் செய்துடுறேன்”, என்று சொல்ல..

சட்டென்று இடைபுகுந்த ரஞ்சிதம்,

“வேண்டாங்க! நாங்க பார்த்துக்கிறோம் இளவரசியை”, என்றவர், தன் மகனிடம் திரும்பி,

“டேய் அவளை போய் முதல்ல வீட்டில் விட்டுட்டு வா”, என்றார் கட்டளையாய்.

‘அன்னை கோபத்தில் இருக்கிறாரோ?’, அவர் மன ஓட்டத்தை கணிக்க முடியவில்லை.

‘வீட்டில் போய் அம்மாவை சமாதானபடுத்திக் கொள்ளலாம்’, என்று எண்ணிக் கொண்டே அவளை அழைத்து கொண்டு வண்டியை எடுக்க சென்றவனிடம் ,

“ரஞ்சி மிஸ்க்கு என் மேல கோபமோ?”, நடந்த படியே கேட்டவளின்  குரலில் கவலை ஒலித்தது.

“இன்னும் ரஞ்சி மிஸ்ஸோட நாலு சி கிளாஸ் ஸ்டூடன்ட் மாதிரியே பேசுறே!”,

என்று சிரித்தாலும்.... அதை சொல்லி முடிப்பதற்குள் அவள் கரத்தை பற்றி இருந்தான்..

‘நான் இருக்கிறேன்’, என்பதை சொல்லாமல் சொல்லியது... அந்த கரம் பற்றல்.. 

அந்த கணத்தில், அவள் கலக்கம் மறைந்து போனது போல தோன்றியது. அவன் தோளில் சாய்ந்து நடக்க ஆசை வந்தாலும்.. சுற்றி இருந்த சூழலும்.... நாணமும் அதை செய்ய விடாது தடுக்க...

அவனை நிமிர்ந்தும் பார்க்காமல், “தேங்க்ஸ்”, மென்குரலில் சொன்னதில் இருந்த காதலை உணராமல் போவானா அவன்! அவள் அருகாமையை ரசித்த படி வந்தவனுக்கு,

‘என்னவளை சந்தேகபட்டு விட்டோமே’, என்று மனக் குன்றல் வர... தான் நினைத்ததை அவளிடம் சொல்லி விட்டு மன்னிப்பு கேட்டு விடலாமா என்று தோன்றியது. அதை அவன் தன்மானம் தடுக்க அமைதியாக வந்தான்.

அவன் பைக்கில் பயணத்தை ஆரம்பித்த பின்னும் சிறிது நேரம் மவுனமே ஆட்சி செய்தது.. பட்டும் படாமல் நடக்கும் ஸ்பரிச உரசலை இருவரும் ரசித்த படி வர.. இப்பொழுது இளவரசியே பேச ஆரம்பித்தாள்.

“நான் பெங்களூர்ல தான் காலேஜ் படிச்சேன் சின்னா. அங்கே உள்ள கல்ச்சர்ல பாய்ஸ்  கூட பைக்ல போறது ஒரு விஷயமாவே இருக்காது! நல்லா பழக்கமான பசங்கன்னா யோசித்தது கிடையாது”.
”ஆனால், இன்னைக்கு அந்த அவசரத்திலும்... அந்த கலீக் நல்ல மனுஷன்னு தெரிஞ்சிருந்தும்.. இன்னொருத்தர் பைக்ல ஏற ஏனோ மனசு ஒப்பலை சின்னா”

என்று சொன்னதும்.. அவனையுமறியாமல் அவன் கண்கள் ரியர் வியூ கண்ணாடியில் தெரிந்த தன்னவளை உரசியது..

அதை கவனித்தவளாய்..

“உங்களுக்கு வேணா இது பெரிய விஷயமா இருக்காது! ஆனா, எனக்கு எப்படி தெரியுமா இருந்தது?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.