(Reading time: 22 - 43 minutes)

வள் நடை வேகம் கூட்டவும்.. அதற்கு ஏற்றாற் போல பின்னால் வந்த காலடி சத்தமும்...

இதயம் எகிறி குதிக்க ஆரம்பிக்க... இப்பொழுது ஓட்டம் எடுத்திருந்தாள்.. அவள் வேகத்திற்கு இணையாக... பல காலடி சத்தங்கள் தன்னை தொடர்வதை இப்போழுது தான் கூர்ந்து கவனித்தாள்.. ஆக, தன்னைத் தொடர்வது ஒருவர் அல்ல பலர்!!!!

அதி வேகமாக ஓட ஆரம்பித்தவளுக்கு... மூச்சிரைத்த சமயம், உரைத்தது அவள் மூளைக்கு..

‘போதுமடி பயந்தது.. வலி அறியாதவன் தான் பயந்து ஓடுவான்! நீ பார்க்காத வலியா?? நிமிர்ந்து நில்!!! எதிரி வந்தால் எதிர்த்து நில்!!’

புதிதாக உத்வேகம் பொங்க, பயம் பஸ்பமானது.. மூளை முழுவீச்சில் துரிதமாக செயல்பட்டது.. தற்காப்பிற்காக கழுத்தில் மாட்டியிருந்த பெப்பர் ஸ்ப்ரே நினைவுக்கு வர... கையில் எடுத்தவள் சற்றே ஓட்டத்தை குறைத்தாள்..

தன்னைத் தொடர்ந்து வந்தவர்கள் நெருங்கும் சமயம்... அவர்கள் மீது  சரமாரியாக அந்த பெப்பர் ஸ்ப்ரேயை அடித்து விட்டு ஓட்டம் பிடித்தாள்..

துரத்தி வந்தவர்கள் கண்கள் காந்தல் எடுக்க.. வலியில் துடித்த படி பின்வாங்கினாலும்.. இன்னும் அவளை ஒரு காலடி சத்தம் தொடர்ந்து வருவதை செவிப் புலன் உணர்ந்து எச்சரித்த அதே சமயம்.. கால் பிசகியது.. ஓட முடியாமல் தடுமாறினாள்..

இனி ஓட முடியாது என்று பிசகிய கால் வேதனையில் கெஞ்ச.. துரத்தி வருபவன் மீது அந்த ஸ்ப்ரேயை அடித்து விட்டு தப்பித்து விடலாம் என்று  கண்ணிமைக்கும் நேரத்திற்குள் முடிவெடுத்து அவள் திரும்பவதற்குள் அவள் கையை அசைக்க கூட முடியாது பற்றியிருந்தான் அவளைத் துரத்தி வந்தவன்...

“எவ்வளவு தைரியமிருந்தா எங்க மேலேயே பெப்பர் ஸ்ப்ரே அடிப்பே”, என்று  அந்த ஸ்ப்ரேயை தூக்கி எரிந்தவன் மாணவர் தலைவன் வினயன் என்பதை அவள் கண்டு கொண்ட அதே சமயம், அவன் கரம் அவளை நோக்கி அதி வேகத்தில் நீண்டது..

பளார்!!!!

பானுவிற்கு செவி ஜவ்வு கிழிவது போன்ற வலி! அவன் அடித்த வேகத்தில் தரையில்  விழுந்தாள்... வலி உயிர் போக... இனி போராட தெம்பில்லை என்று உடல் நோக, தன்னை வேட்டையாட நெருங்குபவனை எதிர்க்க முடியாமல் பலவீனமாகிப் போனேனே துடித்தவளுக்கு அழுகை கூட வற்றி போனது!

ந்து ஆண்டுகளுக்கு பிறகு...

அன்று பட்டமளிப்பு விழா...

பானு ஐந்தாண்டு பட்ட படிப்பை முடித்திருந்தாள். தங்க பதக்கமும், பி.ஏ. பி.எல். பட்ட சான்றிதலையும் பெற்றுக் கொள்ள மேடையேறியவளை அரங்கமே அதிரப் பார்த்தது! அந்த ஒருவனைத் தவிர்த்து...

“இன்னும் எத்தனை பேரு இருக்கீங்க? இந்த உடம்புல இருக்கிற மிச்ச மீதியையும் எடுக்க...? உங்களை மாதிரி எங்களுக்கும் எலும்பும், சதையும் தானேடா இருக்கு! பிணந்தின்னி கழுகுகளா! பொம்பளையா பிறந்ததை தவிர என்னடா தப்பு பண்ணேன்?”

“இந்த பாழாப் போன உடம்பு போனாலும்...  என் உயிர் போகாதுடா! என்னை மாதிரி உள்ளவங்களுக்காக போராடணுமே! அவங்க குரலா நான் இருக்கணுமே! அதுக்கு தானே லா காலேஜ்க்கு வந்திருக்கேன்!”

மிகவும் சிரமப்பட்டு பேசிய பானு இவன் கண்களில் வந்து நின்றாள். இப்பொழுதும்  கூட அவள் பேசியதை நினைக்கும் பொழுது அவன் உடல் அவமானத்தில் கூசியது!!!

அவனையும் அறியாமல் கண்கள் கலங்கியது!

பானுவிற்கு பதக்கத்தையும், பட்டத்தையும் கொடுத்தவர் கண்களை கவனித்தாள்... அவர் கண்களில் வியப்பு! பரிதாபம் இல்லை! இதைத் தானே எதிர்பார்த்திருந்தாள் அவள்!

வெற்றிப் புன்னகையுடன் மேடையில் இருந்து இறங்கியவள், தன்னையே கண்ணீர் மல்க பார்த்த பெற்றோர்களிடம் வந்தாள். பட்டத்தை தந்தையின் கையில் திணித்தவள்.. பதக்கத்தை தாயிற்கு அணிவித்து மகிழ்ந்து விட்டு, அருகில் இருக்கும் இருக்கையில் அமரப் போக... அப்பொழுது தான் கவனித்தாள்...

தன் மீதே பார்வை பதித்த படி பின் இருக்கையில் அமர்ந்திருந்தவனை!

‘இவன் இங்கே எங்கே?’, திகைப்புடன் அவனைப் பார்த்த படியே இருக்கையில் அமர்ந்தவளுக்கு அவன் கலங்கிய கண்களும் தெரிந்தது...

‘ஏற்கனவே என்னை முழுமையாக பார்த்தவன் தானே நீ!!! ஏன் கலங்குகிறாய்?’,

அவள் பார்வையை புரிந்து கொண்டானோ? கைக்குட்டையால் முகத்தை துடைத்து விட்டு இன்னும் தன் மீதிருந்த திகைத்த பார்வையை அகற்றாமல் இருப்பவளைக் கண்டு நகைத்த படியே அவள் கண்களைப் பார்த்து,

“சுட்டும் சுடர் விழி தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ”, ஐந்து ஆண்டுகள் கழித்து அவளிடம் பேச வாய் திறந்தவன், உதிர்த்த முதல் வாக்கியத்தைக் கேட்டதும்...

‘சுட்டும் விழியா? சுடும் என்ற வார்த்தை கூட எரிகிறேதே... !’, உள்ளம் ஒரு புறம் ஓலமிட நினைவுகள் பின்னோக்கி சென்றன பானுவிற்கு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.