(Reading time: 22 - 43 minutes)

 

ப்பொழுது +2 படித்து கொண்டிருந்தாள் பானு.

கெமிஸ்ட்ரி டியூஷன் முடிந்து சைக்கிள் ஓட்டி வந்தவளை மறித்து.. அவள் சைக்கிள் ஹேன்ட் பாரை பற்றி நிறுத்தினான் அந்த வினோத் - அவளது பள்ளி சீனியர் மாணவன் - இப்பொழுது கல்லூரி முதலாண்டு!

“நானும் நாலு வருஷமா உன்னை சுத்தி சுத்தி வர்றேன்! பதில் சொல்லாமலே இருக்க?”

‘ஆயிரம் முறை சொல்லிட்டேனே முடியாதுன்னு! காலேஜ்க்கு போன பிறகும் விடாம துரத்துறானே’, என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டவள்,

“விடுங்க அண்ணா! நான் வீட்டுக்கு போகணும்”, கிட்டத்தட்ட அழுது விடுவது போல பானு கெஞ்ச,

“எத்தனை தடவை சொல்றது அண்ணா அண்ணான்னு கூப்பிடாதே! உன் புருஷனாக போறவன் நான்!”, கர்ஜித்தான் அவன்.

“ப்ளீஸ் விடுங்க அண்ணா! நான் படிக்க போகணும்.. நாளைக்கு டெஸ்ட் இருக்கு!”, மீண்டும் அவள் கெஞ்ச,

“என்ன திரும்ப திரும்ப அண்ணான்னு சொல்றே? அப்போ உனக்கு புருஷனா வேற எவனையாவது பார்த்து வைச்சிட்டியா?”

திகைத்தாள் அந்த பெண். விட்டால் இன்னும் கொச்சையாக பேசுவான்! கெஞ்சி பலனில்லை என்று எண்ணி,

“உன்னை மாதிரி பொறுக்கியை அண்ணான்னு சொல்றதே பெரிசு! கையை எடு! எங்கப்பாகிட்ட சொன்னா நடக்கிறதே வேற!!”,

மிரட்டிய சமயம், அவளைத் தொடர்ந்து வந்த அவள் பள்ளி நண்பனை அவளைப் பார்த்து விட,

“வீட்டுக்கு போகலையா பானு”, சற்றே சைக்கிளின் வேகத்தை குறைத்து அவளை நெருங்க, தன்னை காப்பாற்ற வந்த ஆபந்தவனாக தோன்றியது அவளுக்கு! முகம் மலர்ந்தவள் வேக வேகமாக,

“இருடா.. இதோ வந்துடுறேன்”, வினோத்தின் கையைத் தட்டி விட்டு சைக்கிளில் பறந்தாள் பானு..

அவளின் இந்த சிறு செயல், வினோத்தை  வெறி பிடித்த ராட்சனாய் மாற்றும் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவரை சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்த அவன் நண்பன் வினோத்தை நோக்கி வர, அவனிடம்,

“நாய் மாதிரி பின்னாலே அலையுறேன்! என்ன திமிர் இருந்தா அவ  அப்பாகிட்ட சொல்லுவேங்கிறா!”, என்று புலம்ப..

“டேய்.. உன்னை அலைய விட்டுட்டு கூட படிக்கிறவனோட சுத்துறாடா! அழகா இருக்கிறாளே அந்த திமிர்!!”, என்று எறியும் தீயில் எண்ணெய்யை ஊற்றினான் அவன் நண்பன், கூடவே சிறிது கஞ்சாவையும்..

அன்றே பானு வினோத் விசயத்தை சொல்ல வீட்டிற்கு வந்த பொழுது, அவள் வருகைக்காக காத்திருந்த அவள் அம்மாவை கண்டதும் அப்படியே மனதிற்குள் போட்டு விட்டாள். ஐந்து நிமிட தாமதத்திற்கே புலம்ப ஆரம்பித்து இருந்தார் அவள் அன்னை.

“அவுட்டர்ல இருக்கு ட்யூஷன் சார் வீடு! வீட்டில் இருந்து படிச்சா போதாதா! நீ வர்ற வரைக்கும் பயந்துகிட்டே இருக்க வேண்டியிருக்கு!”,

“கெமிஸ்ட்ரி டியூஷன் அந்த சார் தான் சூப்பரா சொல்லித் தருவார். நிறைய ஸ்கோர் பண்ண முடியும்”,

என்று பதிலளித்தாள்! உண்மையும் அது தான்! மருத்துவத்தில் நுழைய வேண்டும் என்பது அவளுக்கும், அவள் தந்தைக்கும் பெரிய கனவு!

அதனால், எப்பொழுதாவது விடுமுறைக்கு ஊருக்கு வரும் வினோத் பெரிதாக தெரியவில்லை!  இன்னும் மூணே மூணு மாசம்! பல்லை கடிச்சு சமாளிச்சிடலாம் என்று தான் நினைத்திருந்தாள்.

அந்த மூன்று மாதத்தில் தன் நண்பனை துணையோடு ட்யூஷன் வகுப்பிற்கு சென்றாள். ஒரு நாள் அவனுக்கு உடம்பு சரியில்லை என்று வரவில்லை.. சரியாக அன்று அவளை வழியில் மடக்கினான் வினோத். இவன் எங்கிருந்து முளைத்தான் என்று இவள் யோசிக்கும் முன்னே,

“ட்ரெஸ்சை மாத்திறது போல ஆளை மாத்திகிட்டு இருப்பியா? அழகா இருக்கோம்ங்கிற நினைப்பு? இதோ பாரு!  என்னோட முதல் காதலும் நீ தான்! ஒரே காதலும் நீ தான்! இனி அவன் உன் கூட வந்தான் உயிரோடவே இருக்க மாட்டான்!”,

என்று வெறியுடன் மிரட்ட.. நடு நடுங்கி போனாள் பானு!

தந்தை கோபக்காரர்.. வினோத் வீட்டில் போய் பிரச்சனை செய்வாரே என்று மனதும் வயதும் முதிர் பெறா பருவத்தில் அந்த பூமனம் நடந்ததை யாரிடமும் சொல்லாது மறைத்தது. மாறாக ட்யூஷன் செல்வதையே நிறுத்தி விட்டாள். அதன் பின், தனியே எங்கும் செல்வதையும் தவிர்த்தும் விட்டாள்.

பள்ளி விடுமுறையில் கூட வீட்டிற்குள்ளே கழித்த பொழுது, +2 பரீட்சை முடிவுகள் வெளி வந்தது. பானு எல்லா பாடத்திலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்க..

அதிலும் அவளுக்கு படிக்க  சிரமமாக இருந்த கெமிஸ்ட்ரி பாடத்தில் முதல் மதிப்பெண் என்றதும், சந்தோஷ கழிப்பில், தன்  ட்யூஷன் வாத்தியாரிடம் அதை  சொல்லி விட வேண்டும் என்று ஆர்வத்தில் கிடு கிடுவென தன் சைக்கிளை கிளப்பி பறந்தாள் அவர் வீட்டிற்கு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.