(Reading time: 27 - 53 minutes)

“இல்லை, வேண்டாம். நீங்க மால்க்கு எதிர்ல இருக்கிற காஃபி ஷாப்கு வந்திருங்க.”

“சரி” என அப்பாவியாய் பதில் கூறினாள் வாசுகி. இவர்களின் திட்டத்தை அவள் அறியவில்லை.

காஃபி ஷாப்பை நெருங்குகையில் தான் கவனித்தாள் வாசுகி. முகுந்தனும் சுகௌரியும் அமர்ந்து ஏதோ தீவிரமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். பார்த்ததும் அவள் கால்கள் உள்ளே செல்ல மறுத்தது.

பின்னே? அது அவளே போட்டுக்கொண்ட எல்லைக்கோடு அல்லவா? வேறு யாராவது செய்யாதே என்று கூறியிருந்தால் கூட, செய்தால் என்ன தவறு என்று தோன்றி இருக்கும். கதவை விட்டு நீங்கி சுவரோரம் சாய்ந்தாள். மீண்டும் ஒரு முறை எட்டிப் பார்த்தாள். அவனது சிரிப்பு அவளை ஈர்த்தது. அதே நேரம் அவள் அலைபேசியும் அலறியது; சுகௌரி தான்.

தைரியத்தை துணை கொண்டு உள்ளே சென்றாள்.

படபடப்பை வெளிக்காட்டாமல் இருவருடனும் பேசத் தொடங்கினாள். இவனுக்கு சிரிக்கவே தெரியாதா என்று வாசுகி நினைத்தது அவனுக்கு தெரிந்தது போல நடந்து கொண்டான். வேலை விஷயங்களில் ஆரம்பித்து ஏதேதோ பேசினர். ஒரு தருணத்தில் நிசப்தம் நிலவியது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் முகுந்தனும் வாசுகியுமே பேசிக்கொண்டிருந்தனர். சுகௌரி அவர்களின் பொருத்தத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

“நான் எதுக்கு வந்தேன்னு கேட்கவே மாட்டீங்களா வாசுகி?”

அமைதியாக தலையை குனிந்து கொண்டாள்.

“ம்ம்ம்?”

“நீங்களே சொல்லுங்களேன்.” அமைதியாக கூறினாள்.

“நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கண்ஃபெஸ் பன்னனும். நான் உங்கள கல்யாணம் பன்னிக்கனும்னு ஆசைப் படறேன். எனக்கு உங்ககிட்ட எப்படி கேட்கறதுனு தெரியல. அதனால உங்க அம்மா அப்பா கிட்ட பேசிட்டேன். கீர்த்தனா அக்காக்கு கூட தெரியும். அவங்க சொல்லிருக்க மாட்டாங்கனு நெனைக்கிறேன்.”

பேசிவிட்டு அவளது பதிலுக்கு காத்திருந்தான். சுகௌரி, வாசுகி இருவர் முகத்திலும் வெவ்வேறு உணர்ச்சிகள்.

“கல்யாணமா? பேசிட்டயா?” ஆச்சரியப்பட்டாள் சுகௌரி.

வாசுகி எதுவும் பேசவில்லை. திடுக்கிட்டுப் போயிருந்தாள். அவள் மெதுவாக குனிந்த தலையை நிமிர்த்தினாள். கண்களின் ஓரம் கண்ணீர். அதை பார்த்ததும் துடித்துவிட்டான் முகுந்தன்.

“சுகி, ப்ளீஸ்.. அழாதீங்க.. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். ப்ளீஸ்… எனக்கு கஷ்டமா இருக்கு.”

“உங்களுக்கு எப்படி முகுந்த்…. எப்படி இதெல்லாம் தெரியும்?”

சுகௌரிக்கு எதுவும் புரியவில்லை. இருவர் பேசுவதையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள்.

தில் பெரிய ரகசியம் எதுவும் இல்லை. முகுந்தன் பேசிய வார்த்தைகள், அப்படியே ஒரு துளி மாற்றமும் இல்லாமல் வாசுகி ஜெயந்த்திடம் பேசிய வார்த்தைகள்.

பழைய நினைவுகள் அவள் கண் முன் தோன்றின.

கீர்த்தனா அக்காவுடன் வேலை செய்த நாட்கள்…

அவர் விளையாட்டாக ஜெயந்த்தை கல்யாணம் செய்துக்கோ என்று சொல்ல எதுவுமே யோசிக்காமல் சரி என்று வாசுகி கூறியது…

ஆறு மாதம் ஆன பின்னர் இது பற்றி யாருமே நினைக்காத போது வாசுகியே கீர்த்தனாவிடம் பேசியது…

திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் ஏன் தோன்றியது என்று பல நாட்கள் யோசித்தது…

ஆனாலும் நண்பர்கள் போலவே ஜெயந்த்திடம் பேசி பழகியது…

ஒரு நாள் ஜெயந்த்திடம் இது பற்றி கூறிய போது அவன் இவளை வேதனைப்படுத்தாமல் மறுத்தது…

இது காதலே அல்ல என்று அனிதா அவளை சமாதானப்படுத்தியது…

ஒரு வழியாக நிகழ்காலத்திற்கு வந்தாள்.

“எனக்கு எல்லாம் தெரியும். லெட் மி எக்ஸ்ப்லெய்ன்.” சற்று முன்னே நகர்ந்து வாசுகிக்கு அருகில் வந்தான். அவள் அந்த அருகாமையில் சற்று சமாதானமாகினாள்.

“நான் உங்கள மொதமொதலா கீர்த்தனா அக்கா கல்யாணத்துல தான் பார்த்தேன். ஆனா அப்போ எந்த எண்ணமும் வரல. ஜெயந்த் பர்த்டே அன்னிக்கு சர்ப்ரைஸ் கால் பன்னி அவன சந்தோஷப்படுத்தினீங்களே அப்போ தான் எனக்கு நீங்க யாருனு தெரிஞ்சுக்கனும்னு ஆர்வம் வந்துச்சு. அப்றமா ஜெயந்த்தோட வாட்ஸஆப், போன் கால்ஸ் அதபத்தி எல்லாம் நான் விசாரிப்பேன்.”

மௌணமாக கவனித்துக் கொண்டிருந்தாள் வாசுகி.

“ஜெயந்த் உங்கள கல்யாணம் பன்னிக்க நோ சொன்னப்போ எனக்கு வானத்துல பறக்கிற மாதிரி இருந்துச்சு. சாரி, உங்கள ஹர்ட் பன்ன நெனைக்கல. என்னோட ஃபீளிங்க்ஸ சொல்றேன். அப்புறமா நான் ஒரு நிமிஷம் கூட வெய்ட் பன்னல. அப்போவே ஜெயந்த் கிட்ட உங்கள எனக்கு புடிச்சிருக்குனு சொல்லிட்டேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.