(Reading time: 45 - 90 minutes)

வாடகை கார் ஒன்றில் ஏறி பவியின் இருப்பிடன் நோக்கிச் சென்றான் வெங்கட். காரின் முன் பக்கம் டிரைவர் அருகில் அவனும் பின் சீட்டில் ஹேமாவும் அமர்ந்திருக்க கார் விரைந்தது.

பவியின் வீடு. வியர்த்தது வெங்கட்டுக்கு. காரிலிருந்து இறங்கி கதவைத்தட்டியவுடன் முன்பின் தெரியாத ஒருவர் வந்து கதவைத் திறக்க குழம்பிப்போனான் வெங்கட். அவருக்கு தமிழ் தெரியவில்லை. ஹிந்தியில் பவித்ராவைப் பற்றிக்கேட்க. .

ஓ. . டாகடர் பவித்ராவா? அவங்க சொந்தமா மகப்பேறு மருத்தவமனை வெச்சுட்டாங்க. . அந்த ஹாஸ்பிடல் இருக்கும் இடத்தைச் சொல்லி  அது அமைந்திருக்கும் லேண்ட் மார்க்கையும் சொல்ல அந்த இடம் கார் டிரைவருக்கு தெரிந்திருக்க கார் பவித்ராவின் ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தது.

டிரைவர் சார். . இன்னும் ஹாஸ்பிடல் எவ்வளவு தூரம் இருக்கு? என வெங்கட் கேட்க. .

இதோ லெஃப்ட் திரும்பினா டாக்டர் பவித்ராவோட ஹேமா ஹாஸ்பிடல் வந்துடும் சார். . .  

என்னது ஹேமா ஹாஸ்பிடலா. . அவங்க பேரு பவித்ரா தானே. . ஏன் ஹேமான்னு பேரு வெச்சுருக்காங்க. . அவங்க கல்யாணம் ஆனவங்களா ஒருவேள அவங்க பொண்ணு பேர் ஹேமாவா இருக்குமோ? . .

பவித்ராவைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலில் அவசரமாய்க் கேட்டன் வெங்கட்.

இல்ல சார் அவங்க இன்னும் கல்யானம் பண்ணிக்கல. .  எனக்கு டாக்டர ரொம்ப நல்லா தெரியும் சார். .  அவங்கள நாங்கூட ஒரு தடவ கேட்டுருக்கேன். . ஹேமான்றது அவங்க ஃப்ரண்டோட பேராம். அவங்க நினைவா வெச்சுருக்கரதா சொன்னாங்க. .

பின் சீட்டிலிருந்து ஹேமா விசும்பும் சப்தம் கேட்டது. .

காரை இடது பக்க வளைவில் ஒடித்துத் திருப்பினார் டிரைவர்.  அதி வேகமாக வந்த வேன் ஒன்று கண்மூடி கண் திறப்பதற்குள் கார் மீது மோதியது. அடுத்த நொடி காருக்குளிருந்து வெளியே வீசப்பட்டான் வெங்கட்.

அதிகமான போக்குவரத்து மிகுந்த சாலை என்பதால் வேனை ஒட்டிவந்த வாகனம் ஒன்று கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வந்ததால் கீழே கிடந்த வெங்கட்டின் மீது ஏறி இறங்கியது. ரத்த வெள்ளம் சூழ நொடிப் பொழுதில் வெங்கட்டின் மூச்சு அடங்கியது.

பின் சீட்டில் அமர்ந்திருந்த ஹேமாவின் தலை காரின் கதவுக் கண்ணாடியில் மோத கண்ணாடி உடைந்து அதன் கூர்மையான துண்டுகள் தலைக்குள் ஆழமாக இறங்கின. மூர்ச்சியானாள் ஹேமா. டிரைவரின் நிலை படு மோசமாயிற்று.

வெங்கட்டின் உடலை ஆம்புலன்ஸ் அள்ளிக்கொண்டு போக ஹேமா அருகிலிருந்த பவித்ராவின் ஹேமா ஹாஸ்பிடலுக்கு தூக்கிச் செல்லப்ப்ட்டாள்.

தாயாகப்போகும் ஒரு பெண்ணை பரிசோதித்துக்கொண்டிருந்த டாக்டர் பவித்ராவை. .

டாக்டர். . டாக்டர். . நிறைமாத கர்பிணிப் பெண் ஆக்சிடென்ட்ல அடிபட்டு. . அவங்கள நம்ம ஹாஸ்பிடலுக்கு தூக்கிக்கிட்டு வந்திருக்காங்க. . எமெர்ஜென்சி கேஸ். . மயக்கமா இருக்காங்க. . என்ன செய்யிறது டாக்டர். . .

நர்ஸ் ஒருவர் ஓடிவந்து சொல்ல. . பரபரப்பானார் டாக்டர் பவித்ரா.

அவங்கள ஒடனே ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு போங்க. இதோ வரேன்.

தியேட்டருக்குள் போவதற்குமுன் மேலும் இரு மருத்துவர்களுக்கு உதவிக்கு வரும்படி சொல்லிவிட்டு தியேட்டருக்குள் நுழைந்தார்.

டாக்டர் இதோ ஆக்சிடென்ட்ல அடிபட்டவங்க நர்ஸ் கைகாட்ட அந்தப் பெண்னை நோக்கி முடிந்தவரை  வேகமாக கால்களைச் சாய்த்து சாய்த்து நடந்தார் பவித்ரா.

முகமெங்கும் ரத்தம் வழிந்து மூடியிருக்க மயங்கிக்கிடந்தாள் ஹேமா. உதவிக்குக்கூப்பிட்ட மருத்துவர்கள் இருவரும் வந்தாகிவிட்டது. நர்ஸ் ஒருவர் ஹேமாவின் முகத்தில் வ்ழிந்து கிடந்த ரத்தத்தை துடைத்து முடிக்கவும் பவித்ரா ஹேமாவின் அருகில் செல்லவும் சரியாக இருந்தது.

அருகில் சென்று முகம் பார்க்க அதிர்ந்து போனார் பவித்ரா. மறக்கக்கூடிய முகமா அது மனதில் படிந்துள்ள முகமல்லவா . . .

ஹேமா. . நீயா. என்று. . . தான் ஒரு மருத்துவர் சுற்றி நர்ஸ்களும் உதவிக்கு வந்திருக்கும் டாக்டர்களும் நிற்கிறார்கள் என்பதை மறந்து கத்தினார் டாக்டர் பவித்ரா.

அடுத்து பரபரப்பாய் மற்ற மருத்துவர்களின் உதவியோடு இயங்க ஆரம்பித்தார். தலையில் நுழைந்திருந்த கண்ணாடிகள் அகற்றப்பட்டன. ஆனாலும் ஹேமாவின் நாடித்துடிப்பு இறங்க ஆரம்பித்தது. வயிற்றுக் குழந்தையை வெளியே எடுக்க வேண்டிய அவசிய அவசரம். அதற்கான முனைப்போடு இயங்க ஆரம்பித்தார் டாக்டர் பவித்ரா. .

ஆபரேஷன் செய்யப்பட்டு ஹேமாவின் கருப்பையிலிருந்து பவிராவின் கையால் வெளியே எடுக்கப்பட்டது அந்த அழகான. .  ஹேமாவின் ஜெராக்ஸ்ஸாய் இருந்த பெண்குழந்தை.  தன் குழந்தையின் முதல் குரலைக் கேட்கக்கூட இல்லமல் மூச்சை நிறுத்திக்கொண்டாள் ஹேமா. தேடிவந்த தோழியின் முகத்தையோ, பெற்றடுத்த குழந்தையின் முகத்தையோ பார்க்காமலேயே போய்ச் சேர்ந்த தோழியின் முகத்தின் மீது முகம் வைத்துக் கதறினார் டாக்டர் பவித்ரா.

விபத்தை நேரில் பார்த்த சிலரிடமிருந்து காரில் வந்த பென்ணின் கணவர் விபத்தில் இறந்து விட்டதாகவும் அவரின் உடல் அரசாங்க மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் விபரமறிந்த பவித்ரா தன் தோழியின் கணவருக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்வேண்டியது தனது கடமை என்  எண்ணி உடலை வாங்க மருத்துவமனை சென்றார். அங்கே பேரிடி ஒன்று காத்திருப்பது அவருக்குத் தெரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.