(Reading time: 45 - 90 minutes)

வெங்கட்டின் உடல் அடையாளம் காண்பிக்கப்பட்டபோது அதிர்ந்து அப்படியே சிலையாக நின்றார் பவித்ரா.

இதெப்படி. . இதெப்படி. . நடக்க முடியும். . ?  ஹேமாவின் கணவன் வெங்கட்டா?  வெங்கட் எப்படி ஹேமாவைத் திருமணம் செய்திருக்கமுடியும்? அடுக்கடுக்கான கேள்விகள். விடை அறியமுடியாமல் தவித்தார் பவித்ரா.

விடையளிக்கக்கூடிய இருவருமே இறந்துவிட்ட நிலையில் யாரிடம் சென்று கேட்பது? விபத்துக்குள்ளான காரிலிருந்து கிடைத்த ஹேமா மற்றும் வெங்கட்டின் உடமைகள் பவித்ராவிடம் காவல் துறையால் ஒப்படைக்கப்பட்டது. பவித்ராவின் சந்தேகங்களுக்கான விடைகள் ஹேமாவின் உடமையில் ஒரு நீண்ட கடிதமாய் காத்திருந்து ஓர் நாள் பவித்ராவின் கண்களில் பட்டபோது வெங்கட்டின் தியாகம் புரிந்து போயிற்று.

எல்லாம் முடிந்தது. உயிர்த்தோழி ஹேமாவும் வெங்கட்டும் புகைப்படமாகி பவித்ராவின் வீட்டுச் சுவற்றில் நிற்க. . தன் ஆருயித் தோழி பெற்றெடுத்த குழந்தையைத் தானே வளர்க்க சட்டவழிமுறைகளையெல்லாம் பின்பற்றி குழந்தையையை தனது உரியையாய் ஆக்கிக்கொண்டு குழந்தையைத் தன் கைகளில் ஏந்திய நிமிடம் மடை திறந்த வெள்ளமென அவரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

ஹேமூ. . ஹேமூ. . இத பார்டி. . இவ ஒன் குழந்தடி. . ஹேமூ. . நீ எதுக்காகடி பம்பாய்க்கு வந்த என்ன பாக்க வந்தீன்னா என்ன பாக்கக்கூட இல்லாம ஏண்டி போய்ட்ட. . நீ பெத்த கொழந்தயக்கூட பாக்காம போக ஒனெக்கென்னடி அவசரம். . ஒன்ன பாக்கணுன்னு நான் தவிச்ச தவிப்ப தினம் தினம் நான் அழுத அழுகை ஒனக்குத் தெரியுமா ஹேமூ. . இப்பிடி என்னையும் நீ பெத்த குழந்தையையு அனாதையா விட்டுட்டுப் போய்ட்டியேடி. . ஹேமூ நீ பெத்த ஒன்னோட இந்த கொழந்தக்கு இனிமே நான் தாயா இருப்பேண்டி. . நீ அடிக்கடி சொல்லுவேல்ல. . நாந்தாண்டி நீ நீதாண்டி நான்னு. . அது எவ்வளவு சத்தியமான வார்த்தடி. . ஆமாண்டி இனிமே நீயே நானா இருப்பேன். . இவளோட தாயா இனிமே நான் இருப்பேண்டி. . இவ நீ எனக்குக்கொடுத்த வரம். . எனக்குக்கொடுத்த பொக்கிஷம். . நீ பொக்கிஷமா எனக்குக்கொடுத்திருக்கிற இவளுக்கு பொக்கிஷான்னு பேர் வைக்கிரேண்டி. .

என்று சொல்லிக்கொண்டே ஹேமாவின் புகைப்படத்தின் முன் குழந்தையைக் கைகளில் ஏந்தியபடி சென்றார்.

ஹேமூ. . பொக்கிஷங்கிற பேரு ஒனக்குப் பிடிச்சிருக்கா. . பாரேன் இவள ஒன்னமாதிரியே எவ்வளவு அழகா இருக்கா. . பாத்தியா. . பாத்தியா. . என்றபடி படமாய் நிற்கும் ஹேமாவின் முகத்தருகே குழந்தையை நீட்டினார் பவித்ரா. படத்திலிருந்த தனது தோழி புன்னகைப்பது போல் இருந்தது அவருக்கு.

உண்மையில் பவித்ரா தன்னைப் பெற்ற தாய் இல்லை என்பது அறியாமலேயே வளர்ந்தாள் பொக்கிஷா. .

ஆனாலும் தினம்தினம் அம்மா  தனது தோழியின் புகைப்படத்தை ஒரு நிமிடமாவது வணங்கச் சொல்வது ஏன் என்பதன் காரணம் மட்டும் பொக்கிஷாவுக்குப் புரியாமல் இருந்தது. தன் தோழியின் மீது தாய் வைத்திருக்கும் நட்பின் ஆழமே அதற்கான காரணம்போலும் என நினைத்தாள். பவித்ராவின் உயிராய் ஆகிப் போனாள் பொக்கிஷா.

இந்தியாவில் மருத்துவம் படித்து மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்ற பொக்கிஷா ஐந்துவருடப் படிப்பை முடித்துவிட்டு இன்று வரப்போகிறாள். அதனால்தான் காலையிலிருந்தே பரபரப்பாக இருந்த டாக்டர் பவித்ரா கடந்த கால நினைவுகளில் மூழ்கிப்போக

அம்மா. . அம்மா. . என அழைக்கும் குரல் கேட்டு சுய நினைவுக்குத் திரும்பினார்.

எதிரே கார் டிரைவர் மாதவன். . அம்மா. . ஏர்போர்ட்டுக்கு கெளம்பட்டுமாம்மா. . சின்னம்மா வர ஃப்ளைட்டு டாண்ணு பண்ணண்டு மணிக்கெல்லாம் வந்துடும். . இப்பவே பதிணொண்ணாச்சு. .

கிளம்புங்க. . கிளம்புங்க. . மாதவன். . ஜாக்கிரதையா கார பத்திரமா பாத்து ஓட்டிக்கிட்டு வாங்க. .

சரிங்கம்மா. . விடைபெற்றுக் கிளம்பிப்போனார் டிரைவர்.

வித்ராவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. . . உள்ளே சென்று ஹேமாவின் புகைபடத்தைப் பார்ப்பதும் வாசலுக்கு செல்வதுமாய். . அலைபாய்ந்தார். நிமிடங்கள் கரைந்தன.

மணி ஒரு மணியைத் தொட்டது. வாசலில் கார் வந்து நிற்கும் சப்தமும் காரின் கதவு திறக்கப்பட்டு மூடும் சப்தமும் கேட்டது.  

அம்மா. . அம்மா என்று கத்திக்கொண்டே  ஓடிவரும் காலடி சப்தம். . . பொக்கிஷாதான். .

இதோ வந்துட்டா. . என் மகள். . மனம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது. எப்படித்தான் சாய்த்து சாய்த்து நடந்து தோழியின் புகைப்படத்தின் அருகில்அவ்வளவு விரைவாகச்  சென்றாரோ. . தோழி ஹேமாவின் படத்தின் அருகே சென்று இவர் நிற்பதற்கும். .

அம்மா. . அம்மா என்று கத்திக்கொண்டே ஓடிவந்த பொக்கிஷா அம்மா ஹாலில் இல்லாதது கண்டு நிச்சயம் தோழியின் படத்தின் அருகேதான் நிற்பார் என்ற யூகத்தில் அவ்விடம் நோக்கி ஓட இரு கைகளையும் விரித்தபடி நின்றிருந்த பவித்ராவின் கைகளில் அம்மா என்றபடி அடைக்கலமானாள் பொக்கிஷா. .

பொக்கிஷா என் கண்ணே. . . வாய்விட்டுக் கத்தி மகளை இறுக அணைத்துக்கொண்டார் டாக்டர் பவித்ரா. அவர் கண்கள் புகைபடத்திலிருந்த தன் உயிர்த் தோழி ஹேமாவின் கண்களைப் பார்த்தன.

ஹேமா. . ஹேமூ. . பாத்தியா. . ஒம் பொண்ணு. . இல்ல. .  இல்ல. .  நம்ம பொண்ணு. . மருத்துவ மேல்படிப்பு படிச்சிட்டு அமெரிக்காலேந்து வந்துட்டா. . பாத்தியா. . ஒனக்கு சந்தோஷம்தானே. . எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடி. . அப்ப உனக்கும் சந்தோஷமாதாண்டி இருக்கும் ஹேமூ. . . ஏன்னா நீதாண்டி நான் நாந்தாண்டி நீ. . .

மனதிற்குள் தன் தோழியோடு பேசிய டாக்டர் பவித்ராவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.  அது நிச்சயம் ஆனந்தக் கண்ணீராகத்தான் இருக்கும்.

பெற்றவர்கள் தாம் பெற்ற பிள்ளைகள் மீது வைக்கும் பாசம் மிக உயர்வானதுதான். ஆனாலும் பெற்ற பிள்ளைகள் தமக்கு வயதான காலத்தில் கஞ்சி ஊற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு கூடிய சுயனலம் பெற்றவர்களுக்குக்  கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். அதில் தப்பொன்றுமில்லை. கணவன் மனைவியிடத்திலும் மனைவி கணவனிடத்திலும் வைக்கும் பாசம் புனிதமானது என்றாலும் இருவரிடத்திலும் உடல் சார்ந்த எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் சுயனலமோ, எதிர்பார்ப்போ இல்லாத ஒன்று உண்டென்றால் அது பொய்யில்லாத உண்மையான நட்பு மட்டுமே. . .

நட்பு கலப்படமில்லாத பாலைப் போன்றது, கங்கை நீர்போல் புனிதமனது.  வாழ்வில் உண்மையான நண்பனோ, நண்பியோ யாருக்காவது கிடைத்திருப்பின் அவர்கள் நிச்சயம் கொடுத்து வைத்தவர்கள்.

 

This is entry #23 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு

எழுத்தாளர் - தங்கமணி சுவாமினாதன்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.