(Reading time: 45 - 90 minutes)

வெங்கெட். . உன்னைப்பார்க்கும் வாய்ப்பை மீண்டும் கொடுத்த சாமிக்குதாண்டா நான் நன்றி சொல்லணும். .

சொன்னவர் மௌனமானார்.

தத்தாவையே பார்த்துக்கொண்டிருந்தான் வெங்கட். எப்பேற்பட்ட மனிதர் தாத்தா. நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற தாத்தா தன் வாழ்னாள் முழுவதுமே சத்தியத்தையும், உண்மையையும் கடைபிடித்து வருபவர்.

இவை இரண்டினையுமே தன் உயிர் மூச்சாய்க் கொண்டவர். தாத்தாவைபற்றிய சிந்தனையில் இருந்தவனின் நினைப்பில் தன்னைப் பெற்றவனின் நினைவு எழுந்தது. அப்பா. . தந்தையை நினைக்கும்போதே கசப்பாய் இருந்தது. எப்பேற்பட்ட உயர்ந்த மனிதர் தாத்தா. . அவருக்கு அப்பாவைப்போல் ஒரு மகன். . குடியும் கூத்தியுமாக கெட்டழிந்து திரிந்த தன் அப்பாவோடு போராடிப்போராடியே மாண்டுபோன தாய். . தாய் இறந்த பிறகு தன்னை தனி ஆளாய் இருந்து தாத்தா  வளர்த்து ஆளாக்கி மருத்துவம் படிக்கவைத்து. . நினைவுகளில் மூழ்கிப்போனான் வெங்கட்.

வெங்கடேசா. . தாத்தா அழைக்கும் குரல் கேட்டு சட்டென சுய நினைக்கு வந்தான் வெங்கட்.

ம். . தாத்தா. .

வெங்கட். . . நடக்ககூடாதது நடந்து போச்சு. . ஆமாம். . நாம் பெத்த புள்ள அதான் உங்கப்பா. . செஞ்ச காரியத்தால இந்த வயசுல நான் படர பாடு. . . துண்டால் கண்களைத் துடைத்துக்கொண்டார். அவர் குரல் உடைந்து போயிருந்தது.

தாத்தா. .

ஆமா. . உன் குடிகார அப்பா குடிச்சுட்டு கண்ணு மண்ணு தெரியாம கார ஓட்டி ஒரு இருபத்ரெண்டு இருவத் மூணு வயசு பொண்ணோட அம்மா அப்பாவ கொன்னுட்டான். அவன நானே ஜெயிலுக்கு அனுப்பிட்டேன். இது பத்தி ஒனக்கு நான் தெரிவிக்காம இருந்துட்டேன். காரணம் உனக்கு உன் அப்பா ஜெயில்ல இருந்தாலும் வெளீல இருந்தாலும் ஒண்ணுதான்னு நினைகிறவன் நீ. . . அதுலயும் தப்பு ஒண்ணும் இல்ல. ஒரு தந்தையா ஒனக்கு அவன் ஒண்ணுமே செய்யல. அதுனாலயே ஒனக்கு இது பத்தி தெரிவிக்கல.

அதிர்ந்து போனான் வெங்கட். அப்பா ஜெயிலுக்குப் போன செய்தி கேட்டதால் அல்ல. சொந்தப் பிள்ளையையே ஜெயிலுக்கு அனுப்பிய உறுதி கண்டே வியந்தான் அதிர்ந்தான்.

இந்த அதிர்ச்சி என்ன. . ? வேறொரு அதிச்சி தனக்குக் காத்திருப்பது பாவம் அவனுக்குத் தெரியவில்லை.

தாத்தா. . .

வெங்கட். . நான் ஒன்ன எதுக்குக் வரச்சொன்னேன்னா. . .

சொல்லுங்கோ தாத்தா. .

வெங்கட். . நான் உன்னிடம் ஒண்ண யாசிக்கிறேன். . கொடுப்பியா. . நான் கேட்பதைச் செய்வியா. . ?

என்ன தாத்தா இது. . நான் நீங்க வளர்த்த பிள்ளை. . ஒங்க பேரன். . என்னிடம் நீங்க யாசிப்பதா. . என்னை அன்னியம் ஆக்காதீங்கோ தாத்தா. .

சற்று மௌனமாய் இருந்தவர். . சமையல் உள் பக்கம் முகத்தைத் திருப்பி. . ஹேமா. . இங்க வாம்மா. .

வெளியே வந்த பெண்ணை வியப்போடு பார்த்தான் வெங்கட். கிட்டத்தட்ட பவியின் வயதிருக்கும் என நினைத்தான். ஆனால் வந்த பெண் பவியின் உயிர்த் தோழி ஹேமாதான் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்?

வெங்கட். . இந்தப் பொண்ணு பேரு ஹேமா. . கும்பகோணம் கிட்டேந்து இந்த மாயவரத்துக்கு வந்த குடும்பம் இவளோடது. இவளோட அப்பா அம்மா மேலதான் உங்கப்பன் கார ஏத்திக் கொன்னுட்டான். அனாதையாயிட்ட இவ எங்க போருதுன்னு தவிச்சப்ப நாந்தான் இவள நம்மாத்துக்கு அழைசிண்டு வந்தேன். உங்கப்பாவாலதான் இவ அனாதையானா. அதுனால அதுக்கு பிராயச்சித்தமா இந்த பொண்ணுக்கு ஏதாவது செய்யணும்ன்னு நெனெச்சேன். . .

ஐயோ ஆண்டவனே. . . இதென்ன பாவம். . இதென்ன கொடுமை. . . ஹேமாவைப்பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டான். . சாரி. . சாரி. . எங்கப்பா பண்ணின பாவத்துக்கு உங்ககிட்ட மன்னிப்பு கேக்கறேன். .

மௌனமாய் நின்றாள் ஹேமா. .

வெங்கட். . . ஒன்னக் கேக்காமலேயே நான் ஒரு முடிவு செஞ்சிருக்கேன். .

என்ன தாத்தா அது. ?

வெங்கட். . நீ இந்த பொண்ண கல்யாணம் செஞ்சிக்கணும். . அதுவும் இப்பவே. .

தாத்தாவின் வார்த்தைகள் இடியாய் இறங்கியது வெங்கட்டின் தலையில். . அரண்டான். .  மருண்டான் வெலவெலத்தான். . வியர்த்துப்போனான். . தலை சுற்றியது அவனுக்கு. .

தத்தா தாத்தா என்று கத்தினானேயொழிய அவனால் பேச முடியவில்லை.

வேண்டாம் தாத்தா வேண்டாம் இந்த திருமணம் என்று சொல்ல நினைத்தவன். . திடீரென தாத்தாவின் கையும் காலும் வெடுக் வெடுக்கென இழுத்துக்கொள்வதைப்பார்த்து அவர் அருகே ஓடினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.