(Reading time: 45 - 90 minutes)

ண்ணீர் ஊற்றாமல் பத்துப் பாத்திரங்களெல்லாம் வறண்டு கிடந்தன. சூளைப் பாத்திரம் கிடந்தது கிணற்றடியில். அடுப்பில் உறிக்காமட்டை, வரட்டி, கொட்டங்கச்சி வைத்து எரித்ததால் பாத்திரங்களின் அடியில் பிடித்திருந்த கரி போவேனா என்று அடம் பிடித்தது. பவித்ராவின் பிஞ்சுக்கைகள் பாத்திரங்களைத் தேய்த்துத் தேய்த்து சோர்ந்து போயின. மதியம் சாப்பிட்ட அரை வயிற்றுச் சாப்பாடு ஜீரணமாகி பசிக்க ஆரம்பித்தது. ஏதாவது தின்று காபி குடித்தால் எப்படியிருக்கும்? ஆசைப்பட்டால். . கிடைத்துவிடுமா? தாய் இருந்தால் தருவாள்? வேறு யார் தருவார்? தாயில்லா குழந்தைக்கு பெற்ற தகப்பன் கூட தாயாதிதானோ?

அப்படியில்லாவிட்டால் பெற்ற அப்பாவாவது தன்னிடம் அன்பாய் இருப்பாரே? அவரும் சித்தி சொல்லே மந்திரம் என்றல்லவா இருக்கிறார். பாத்திரங்களைப் பார்த்துப் பார்த்து அலம்பிக் கவிழ்த்தாள் பவித்ரா. இல்லாவிட்டால் அதற்கும் என்னடி பாத்ரம் தேச்சிருக்க. . இப்பிடியா தேப்ப. . கரியே போலயே. .

சோத்துப்பருக்க அப்பிடியே இருக்கு. . மூணு வேளயும் மூக்குப்புடிக்கக் கொட்டிக்கல. . நன்னா தேக்கமுடியாத கையில கட்ட மொளச்சுடுத்தா. . நொண்டி பொணமே. . ஒங்கைய ஒடச்சு கடியடுப்புல வெக்க. . நீ ஒழின்சாதான் நிம்மதி. . இந்த வார்த்தைகளைத் தவிற்க பாத்திரங்களைப் பார்த்துப் பார்த்து அலம்பிக்கவிழ்த்தாள்.

டொக். . டொக். . கொல்லைக் கதவு மெலிதாய் தட்டப்படும் ஓசை. யாராக இருக்கும் என்ற யோசனையோடு போய்க்கதவை திறந்தவள் ஒரு கையில் டம்ப்ளரில் காபியோடும் இன்னொரு கையில் இரண்டு பஜ்ஜியோடும் ஹேமா நிற்க. .

என்னடி இது ஹேமா. . ?

ஏய் பேச நேரமில்ல. . இந்தா இந்த பஜ்ஜிய தின்னு இந்த காபிய குடிடி. .

ஏய். . ஹேமா. . எதுக்குடி. . இதெல்லாம். .

ஏய் இவளே. . ஒழுங்கு மரியாதயா இத தின்னு காபிய குடிச்சிடு. . ஒங்க சித்தி வந்துடப்போறா. . வலியால நீ அழுத அழுகைக்கு நிச்சயமா ஒனக்கு தலைய வலிக்கும். . எங்கம்மாகிட்ட சொல்லி ஒனக்கு இதெல்லாம் வாங்கிண்டு வந்தேன். . . . தின்னுடி. .

மறுக்க முடியவில்லை . பஜ்ஜியை மென்று விழுங்கியபோது பசித்த வயிறுக்கு இதமாய் இருந்தது.

சூடாய்க் காபி தொண்டையில் இறங்கியபோது தலைவலி தன்னைவிட்டு நீங்கியதுபோல் இருந்தது பவிக்கு.

ஹேமூ. . நான் ஒனக்கு என்னடி செய்யப்போறேன் இதுக்கெல்லாம். . ?

ஆரம்பிச்சுட்டயா. . ? போடி இவளே நீ என் சினேகிதிடி. . . . நமக்குள்ள நான் செஞ்சா நீ செய்யணும் நீ செஞ்சா நான் செய்யணும்ன்னு எதுவும் கெடயாதுடி. . . இனிமே இப்பிடில்லாம் பொலம்பாத. . . . நீதான் நான் நாந்தான் நீ. . போதுமா. . ?

பத்துவயது ஹேமா பெரிய மனுஷிபோல் சொன்ன வார்த்தைகள் அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் உண்மையாகிப்போகுமோ?  அந்த இறைவனுக்குத்தான் தெரியும்.

பவி. . வாசல்ல ஒங்க சித்திகூட வம்புக்காரி அம்புஜம் மாமி பேசின்றுக்கா. . அந்தமாமி என்னத்தக் கொளுத்திப் போடப்போறாளோன்னு பயமாருக்குடி. . சரிடி. . அம்மா கூப்படறா. . நாம்போறேன். .

பாத்திரங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சமையலறைக்குள் கொண்டுவைத்தாள் பவி. மணி ஆறாகியிருக்கும் சாமிண்ட வெளக்கேத்தி வெச்சுட்டா வேல முடிஞ்சிது. அப்பரம் படிக்க ஒக்காரலாம் என்ற நினைப்போடு சாமி மாடத்து விளைக்கை ஏற்றிவிட்டு வாசல் மாடத்திலும் ஒரு விளைக்கைக்கொண்டு வைத்துவிட்டு படிக்கலாமென்று புத்தக மூட்டையை எடுத்தபோதுதான் அதன் கைப்பிடி அறுந்து போனது நினைவுக்கு வந்தது. இனிமே நாளை காலைலதான் இத தெக்க முடியும். வெளெக்கேத்தி வெச்சப்பரம் தெச்சா அவ்வளவுதான். . சித்தியின் வாயில் பூந்து புறப்பட முடியாது என்ற எண்ணத்தில் வீட்டுப்பாட நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்தபோதுதான் வாசல் ரேழியில் அப்பாவின் செருப்பு சப்தம் கேட்டது.

அப்பாவோடுகூடவே அம்புஜம் மாமியோடு பேச்சை முடித்துக்கொண்டு உள்ளே னுழைந்த சித்தியியின் முகத்தைப் பார்த்த பவிக்கு சித்தியின் முகத்தில் ஒரு மலர்ச்சி இருப்பது தெரிந்தது.

அப்பா கால் கை அலம்பி வீபூதி இட்டுக்கொண்டு சந்தியாவந்தனம் செய்ய ஆரம்பித்தார். அதுவரை பொறுமையாய் இருந்த சித்தி அவர் சந்தியாவந்தனம் செய்து முடித்து எழுந்ததும்

ஏன்னா. . போய்ட்டு வந்த காரியம் என்ன ஆச்சு. . ?

என்ன ஆகும். . நமெக்கெல்லாம் நல்ல காலம் அவ்வளவு சீக்கிரம் வந்துடுமா என்ன. . ?

ஏந்தான் இப்பிடி அலுத்துக்கறேளோ? நல்ல காலம் வரணுன்னு இருந்தா தானா வந்து ஆத்துக் கதவ தட்டாதா?

ம். . ம். . வரும். . வரும். . வந்து கதவ தட்டுமாக்கும். .

ஆமான்னா. . நம்மாத்துக்கு நல்ல காலம் வந்தாச்சு. .

அதென்னடி. . நல்ல காலம் நம்மாத்துக்கு. . .

சொல்றேன். . சொல்றேன். . நீங்க வர்ரச்சே நா அம்புஜம் மாமிகூட பேசிண்ட்ருந்தேனே பாத்தேளோனோ. .

ஆமா. . பேசிண்ட்ருந்த. .

அந்த மாமியாத்துக்கு அவா சொந்தக்காரா வந்துருக்காளாம். .

அதுக்கென்ன. . ?

சொல்லிண்டுதானே இருக்கேன். . அதுக்குள்ள அவசரமா. ?

சொல்லு. .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.