(Reading time: 45 - 90 minutes)

ன்னிடம் அன்பு காட்ட அங்கே யார் இருக்கிறார்கள்? பாவம் குழந்தை பள்ளிக்கூடம் விட்டு வந்திருக்கிறாளே அவளுக்கு தின்பதற்கும் குடிப்பதற்கும் ஏதாவது கொடுப்போமே என்று நினைத்து வாஞ்சையோடு கொடுக்க யார் இருக்கிறார்கள்? தாயா இருக்கிறாள் அணைத்து முத்தம் கொடுக்க? சித்தி என்ற பெயரில் ஒரு பேயை அல்லவா அப்பா அழைத்து வந்திருக்கிறார். வீட்டிற்குப்போனதும் சித்தி படுத்தப்போகும் பாட்டை எண்ணி பயமாக இருந்தது பவிக்கு. ஆனாலும் அவளின் குழந்தை மனது சட்டென அந்த பயத்தைப் புறம் தள்ளிவிட்டு வேறொன்றுக்கு ஆசைப்பட்டது. அவளின் நெடுனாள் ஆசையை வெறிச்சோடிக்கிடந்த அந்தத் தெரு செய்யும்படி தூண்டியது.

ஆம் தனது வயதையொத்த பிள்ளைகள் தெருவில் சப்தமிட்டுக்கொண்டே வேகமாய் ஓடுவதையும் கல்லாமண்ணா விளையாடுவதையும் கண்ணாமூச்சி விளையாடுவதையும் ஏக்கத்தோடு பார்த்துப்பார்த்து ஒருனாளாவது வேகமாய் ஓடிப்பார்க்கவேண்டும் என்ற ஏக்கம் இப்போது அவளை ஓடிப்பார்க்கத் தூண்டியது. சட்டென ஓட ஆரம்பித்தாள் பவித்ரா. ஆனால் சப்தமிடாமல் மௌனமாக ஓடினாள்.  கால்களைச் சாய்த்துச் சாய்த்து ஓடுவது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது.  மூச்சு வாங்கியது.  இருதயம் வேகமாக அடித்துக்கொண்டது.  ஆனாலும் ஓடும் ஆசை விடவில்லை. தையாதக்கா என்று பவித்ரா ஓடும் வேளையிலா ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொண்டு நாய்க்கூட்டமொன்று அந்தத் தெருவுக்குள் நுழைய வேண்டும்? இவளைப் பார்த்து அந்த நாய்களும் அவற்றைப் பார்த்து இவளும் பயந்துபோக நாய்கள் சண்டையிலிருந்து விலகி ஆளுக்கொன்றாய் நாலா பக்கமும் சிதறி ஓடின.

ஏற்கனவே தாறுமாறாய் ஓடிய பவித்ரா பயமும் சேர்ந்து கொள்ளவே எக்குத்தப்பாய்க் காலைவைத்து குப்புற அடித்துத் தெருவில் விழுந்தாள். புத்தக மூட்டை கைப்பிடி அறுந்து கொஞ்ச தூரம் போய் விழுந்தது. வலது கால் முழங்காலில் நல்ல அடி. இடது கால் கணுக்காலில் சிராய்த்து தோல் வழன்றது . .

ஐயோ. . அம்மா. . ஆ. .  வலிக்குதே கத்தினாள் பவி. சட்டென எழுந்திருக்க முடியவில்லை. கத்தியபடி குப்புறக்கிடந்த பவியின் தோள்களை ஆதரவாய் இரண்டு கரங்கள் பற்றின. பற்றிய அக்கரங்கள்  பவிக்கு வாழ்க்கை முழுதுக்கும் ஆதரவாய் இருக்குமோ?  அது ஆண்டவன் மட்டுமே அறிந்த ஒன்று.

பவீ. . விழுந்துட்டயா? கேட்டபடியே பவியின் இரண்டு அக்குள்களிலும் கைவைத்து மெள்ளத் தூக்கிவிட்டாள் ஹேமா.

பவியைத் தூக்கி உட்காரவைத்தாளேயொழிய அவளை அவ்வளவு எளிதாய் தூக்கி நிறுத்த முடியவில்லை. காரணம் ஹேமா பவியின் வயதையொத்தவள். பவியுடன் ஒரே வகுப்பில் படிக்கும் பக்கத்து வீட்டுப்பெண். இருவரும் சம வயது ஒரே தெரு அக்கம்பக்கத்து வீடு ஒரே பள்ளி. இது போதாதா இருவருக்குமிடையே நட்பு வளர? அந்த சின்ன இதயங்கள் இரண்டிலும் நட்பு எனும் சினேகிதம் ஆலம் விருட்சமாய் வளர்ந்து விழுதுகள் பரப்பியிருந்தது. இவளின்றி அவளில்லை அவளின்றி இவளில்லை எனும் அளவுக்கு வேறூன்றியிருந்தது.

ஹேமாவும் பத்து வயதேயான சிறுமி என்பதால் பவியைத் தூக்கிவிடும் அளவுக்கு அவளிடம் பலமில்லை.

மெதுமெதுவாய் ஹேமாவின் கைபிடித்து தோள் பிடித்து எழுந்து நின்றாள் பவி.  

பவி வா. . வசந்தா மாமியாத்து கொறட்டுல சித்த நாழி ஒக்காந்துக்கோ என்றபடி தோழியின் கைபிடித்து நடத்தி அழைத்துவந்து குறட்டில் உட்கார வைத்துவிட்டு தூரமாய்க் கிடந்த பவியின் புத்தக மூட்டையைக் கொண்டுவந்து பவியின் அருகே வைத்தாள் ஹேமா.

பவி ரொம்ப வலிக்கரதா?

ஆமாண்டி ஹேமூ. . வலி தாங்கல. . பாரேன். . முழங்கை சிராய்ப்பையும்முழங்கால் மற்றும் கணுக்கால் சிராய்ப்புகளையும் காட்டினாள் பவி. கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.  

ஹேமாவின் கண்களிலும் கண்ணீர் எட்டிப்பார்த்தது. குனிந்து பவியின் முழங்கை முழங்கால் கணுக்கால் என அடிபட்டுத் தோல் வயண்டு போயிருந்த இடங்களில் இதமாய் ஊதிவிட்டாள் ஹேமா. மனம் தோழியின் வலிகண்டு துவண்டு போயிற்று.

பவி. . இதோ பாரேன். . இடுப்பில் செருகியிருந்த காகிதப்பொட்டலத்தை எடுத்துப் பிரித்தாள் ஹேமா.

என்னடி அது ஹேமூ. . ?

ஏய். . இங்க பாரு. . என்னன்னு பாரு. . டொட்டொடைங். . ஒனக்குப்பிடிச்ச கமர்க்கட். .

ஏய் ஏதுடி. . காசு. . இத வாங்க. . ?

பவி. . இன்னிக்கு எங்க மாமா ஊர்லேந்து வந்தா. அதான் நான் காலைல ஸ்கூலுக்கு வரல. ஊருக்குப் போகும்போது எங்க மாமா எனக்கு அரேணா காசு குடுத்தாடி. . ரெண்டு ஓட்ட கால்ணா. . அந்த காசுக்குதாண்டி ஒனக்குப் புடிக்குமேன்னு இந்த கமர்கட்ட வாங்கினேன். . இந்தா தின்னுடி..

பொட்டலத்தில் ஆழந்த பழுப்பு நிறத்தில் உருண்டை உருண்டையாக நிறைய கமர்கட்டுகள் பவியைப் பார்த்துச் சிரித்தன.

அதைப் பார்த்த கணத்தில் வலிகூட பவிக்கு மறந்து போயிற்று. ஆசையாய் பொட்டலத்திலிருந்து இரண்டு கமர்கட்டை எடுத்தாள். .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.