(Reading time: 45 - 90 minutes)

ய். . என்னடிது எல்லாம் ஒனக்குதாண்டி. எடுத்துக்கோ. . .  எனக்கு ரெண்டு போறும். . ஒனக்குதானேடி இது ரொம்பப் புடிக்கும். . தான் ரெண்டை மட்டும் எடுத்துக்கொண்டு பொட்டலத்தை பவியிடம் கொடுத்தாள் ஹேமா.

ஹேமூ. . நீதான் எவ்வளவு ஒசத்தியான ஃப்ரெண்டுடி எனக்கு. . எப்பவுமே நீதாண்டி எனக்கு எல்லாம் தர. .  ஆனா நான் ஒனக்கு ஒண்ணுமே கொடுத்ததில்லயேடி. .  வார்த்தைகள் சரியாய் வராமல் விசும்பினாள் பவி.

சரி சரி போருண்டி. . கெளம்பு இப்பவே லேட்டாயிடுத்து. . இன்னும் நேரமானா ஒங்க சித்தி காளியாட்டம் ஆடுவா. . வாடி ஆத்துக்குப் போலாம். . பவியின் புத்த மூட்டையை எடுத்துக்கொண்டு பவியின் கரம் பிடித்து தூக்கிவிட்டாள் ஹேமா. தோழியின் தோளைப் பிடித்துக்கொண்டு விந்திவிந்தி வலியோடு நடக்க ஆரம்பிதாள் பவி.

ஹேமாவின் வீடு பவியின் வீட்டுக்கு முதல் வீடு என்பதால் ஏய் பாத்துடி. . பத்ரமா உள்ள போ. . அடிபட்ட எடத்துலெல்லாம் மஞ்சளும் தேங்கா எண்ணையும் தடவு. . என்ன சரியா. . ? நான் வரேண்டி என்று சொல்லிவிட்டு தன் வீட்டிற்குள் நுழைந்தாள் ஹேமா.

ம்க்கூம். . மஞ்சளாவது எண்ணையாவது? உள்ள போனாத்தானே தெரியும்? இடியா, மழையா, புயலா? எது காத்திருக்கிறதோ என்று நினைத்தவாறே பயத்தோடு வீட்டுக்குள் நுழைந்தாள் பவித்ரா. பயத்தில் தலை வலிக்க ஆரம்பித்தது.

மூன்று வயது மகனை மடியில் வைத்தபடி கயிற்றை இழுத்து இழுத்து ஊஞ்சலின் வேகத்தை அதிகப் படுத்தியபடி அமர்ந்திருந்தாள் சுப்பு. . சுப்புலட்சுமி. அவளின் கோபத்தை ஊஞ்சலின் ஆட்டம் எடுத்துக் காட்டியது.

பயத்தோடும் அடிபட்ட வலியோடும் திடீரென வந்த தலைவலியோடும் உள்ளே நுழைந்த பவித்ராவுக்கு சித்தி கோபத்தோடு ஊஞ்சல் ஆடுவதைப் பார்த்ததும் கூடுதல் பயத்தால் உடல் நடுங்க ஆரம்பித்தது.

புத்தக மூட்டையை கூடத்து சுவற்றின் மீது சாய்த்து வைத்துவிட்டு கிணற்றடிக்குச் செல்ல யத்தனிதவளை

ஏய். . நில்லுடி. . ஏண்டி இவ்வளவு நேரம். . பள்ளிக்குடம் விட்டு பசங்களெல்லாம் அப்பவே போய்ட்டாங்க. . ஒனக்கு மட்டும் ஏண்டி இவ்வளவு நேரம்? ஊர சுத்திட்டு ஒழிஞ்சாப்பல வரியா? சனியம் புடிச்ச நாயே. . எங்கடி இவ்வளவு நேரம் பராக்கு பாத்துண்டு நின்ன. . பத்து வயசுக்கே அலையுறயா? எல்லாம் என் தலையெழுத்து. . ஒன்ன என் தலையில கட்டிட்டு ஒன்ன பெத்தவ போய்ச் சேந்துட்டா. . போரதுதான் போனாளே ஒன்னயும் கூடவே கொண்டு போய்ருக்கக் கூடாது. . ? மூணு வேளையும் வடிச்சுக் கொட்ட நான் ஒத்தி இருக்கேனோன்னோ நீ ஏன் அலைய மாட்ட? வரட்டும் இந்த மனுஷர் இன்னி ஒண்ணுல்ல ரெண்டு பாத்துடறேன். . . போடி. .  போ அப்பிடியே மயங்கி மயங்கி நிக்கற. . சமைக்கருள்ள பாத்திரமும் பண்டமும் அப்பிடியே தேக்காம கெடக்கு. ஏதுடா ஆத்துல பத்து கெடக்குமே தேக்கணுமே. . சீக்கிரமே ஆத்துக்குப் போவோன்னு இல்லாம இப்பிடி ஆடி அசஞ்சு வர. . பெரிய படிப்பு. . படிச்சு கலெக்டராகப் போற பாரு. . . சீந்த ஆளில்லாத அனாத நாயே. .

சித்தியின் நாக்கிலிருந்து வெளிவரும் அக்கினி வார்த்தைகளை அதற்கு மேல் கேட்க முடியாமல் மனம் துவண்டது. சமையல் அறைக்குள் நுழைந்த பவிக்கு கீழே விழுந்ததால் ஏற்பட்ட வலிகூட இப்போது தெரியவில்லை. சித்தியின் அக்னி வார்த்தைகளால் மனதில் ஏற்பட்ட ரணம்தான் அதிக வலியைக் கொடுத்தது.

அம்மா. . அம்மா. . ஏம்மா என்ன விட்டுட்டு நீமட்டும் சாமிண்ட போன . . என்னயும் ஒன்னோட கூட்டிண்டு போயிருக்கலாமோனோ. . முகத்தைக் கூட பார்த்தறியாத தாயிடம் முறையிட்ட பவித்ராவின் கண்களிலிருந்து கண்ணீர் இறங்கி கன்னங்களை நனைத்தது. சத்தமாய் அழவேண்டும் போல் இருந்தது. ஆனால் அது முடியாது. அழவும் சுதந்திரம் இல்லை. அடக்கி அடக்கி அழுததால் தலை விண் விண்ணென்று தெறித்தது. . சூடாய்க் காபி குடித்தால் தேவலாம்போல் இருந்தது. ஆனால் யார் தருவார்கள்?

பளிக்கூடத்துல கிளாஸ்ல பத்மினி, ராஜி, ப்ரேமா சகுந்தலா எல்லாரும் ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொள்வது நினைவில் வந்தது.

ஏய். . சக்கு. . சாயந்தரம் ஸ்கூல்விட்டு ஆத்துக்குப் போனஒடனேயே எங்கம்மா எனக்கு முறுக்கோ, தட்டையோ தேங்கோழலோ இல்லாட்டி எதாவது திங்க குடுப்பா. . அப்பரம் ஓவல்டின் குடிக்கக் குடுப்பாளே. . ஒக்காத்துல. . ?

ஆமாண்டி இவளே. . எங்காத்துலயும்தான் எல்லாம் குடுப்பா. . நான் ஸ்கூல்விட்டுப் போனதுமே எங்கம்மா என்ன தூக்கிவெச்சுண்டு கொஞ்சுவா. . முத்தம் குடுப்பா. .

ஆமாண்டி. . ஆமாண்டி. . என்று பவித்ராவையும் ஹேமாவையும் தவிர க்ளாஸில் இருக்கு எல்லா சிறுமிகளும் இந்தக் கூற்றை ஆமோதிப்பார்கள்.

ஹேமா வீட்டிலும் இது நடக்கும். ஆனாலும் பவித்ராவின் ஏக்கமான முகம் பார்த்து தன் வீட்டிலும் தனது அம்மா தன்னைத் தூக்கிக் கொஞ்சுவதையும் ஸ்கூல் விட்டுத் திரும்பியதும் தனக்குத் தின்னவும் குடிக்கவும் ஏதாவது தருவாள் என்பதையும் சொல்லுவதைத் தவிர்த்து விடுவாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.