(Reading time: 45 - 90 minutes)

ஜொரமுமில்ல ஒண்ணுமில்ல. . அவ இனிமேவே ஸ்கூலுக்கு வரமாட்டா. . அவ பம்பாய்க்குப் போகப்போரா. .

என்ன மாமி சொல்றேள் பவி பம்பாய்க்கு போகப்போறாளா. . ? அதிர்ச்சியோடு ஹேமா ஓ என்று கத்தி அழுது கொண்டே  தன் வீட்டிற்குள் ஓடினாள்.

ஏய். . ஒன்னத்தாண்டி. . ஆத்த பாத்துக்கோ. . அம்புஜம் மாமியாத்துக்குப்போய் நீ பம்பாய்க்கு வரதா சொல்லிட்டு வரேன். ஒனக்கும் சேத்து அவா டிக்கெட் வாங்கணுமோல்யோ? சொல்லிக்கொண்டே பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வெளியே போனாள் சுப்பு.

ஆத்து வாசலில் அழுதுகொண்டு நின்றிருந்த ஹேமா பவியின் சித்தி அகன்றதும் பவியைப் பார்க்க ஓடினாள்.

பவீ. . பவீ. . என்னடி ஆச்சு. . ? ஒங்க சித்தி நீ பம்பாய்க்கு போகப்போரதா சொல்ராளே. . நெஜமாவாடி. . நெஜமாவே. . நீ பம்பாய்க்குப் போறியா. . பவி என்ன விட்டுட்டு நீ போகப்போறியா. . நீ இல்லாம நான் எப்பிடிடி இருப்பேன்? இனிமே நான் யாரோட பேசுவேன். . யாரோட வெளயாடுவேன். பவி பவி நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடி. . போகாதடி பவி. . என்ன விட்டுப் போகாதடி பவி. . ஏண்டி பதிலே சொல்லாம இருக்க. . பேசுடி. . பேசுடி பவி. . கதறி அழுதபடி தன் தோளைப் பிடித்து உலுக்கிய தோழியின் கதறல் பவித்ராவை மீட்டுவந்தது. ஹேமூ. .

நான் என்னடி செய்வேன் ஹேமூ என்றபடி தோழியின் மடியில் முகம் புதைத்து அழுதாள் பவித்ரா. ஹேமூ. . எனக்கு பயமா இருக்குடி. . பயமா இருக்கு. . நான் பம்பாய்க்கெல்லா போமாட்டேண்டி. . ஆனா எங்க சித்தி போய்த்தான் ஆகணுன்னு சொல்றாடி. . எங்கப்பா, சித்தி, தம்பி எல்லாரையும் விட்டுட்டுகூட போவேன். ஆனா ஒன்ன விட்டுட்டு என்னால போகமுடியாது ஹேமூ. . எனக்கு படிக்கணும். . நிறைய படிக்கணும். . ஆனா நான் பம்பாய்க்கு போய் கொழந்தய பாத்துக்கணுமாம். . படிக்கெல்லாம் முடியாதாம். . . ஸ்கூலுக்கு போகாம. . நீயும் இல்லாம நான் எப்பிடிடி இருப்பேன்? செத்துப்போலாம் போல இருக்குடி. .

வாடி ரெண்டு பேருமா செத்துப்போயிடுவோம் பவி. . . . . ஆனா எப்பிடி செத்துப் போரதுன்னு தெரிலயே. . சொல்லிய தோழியைக் கட்டிக்கொண்டாள் பவித்ரா.

நட்பால் இணைந்த அந்த இரண்டு பிஞ்சுகளும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழும் அந்தக்காட்சியைக் கண்டால் கல் நெஞ்சமும் கரைந்து போகும்.

ருவாரம் ஓடியேவிட்டது. வாசலில் மாட்டு வண்டி வந்து நிற்க. .

பவி ஏய். . வண்டி வந்தாச்சு கெளம்பு. .

அவரப்படுத்தினாள் சுப்பு. அப்பா தகரப் பெட்டி ஒன்றை எடுத்து வர மனம் முழுதும் கனத்துப்போனவளாய் யாரிடமும் ஒற்றை வார்த்தைகூட சொல்லிக்கொள்ளாமல் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள் பவித்ரா.

அழுதழுது  முகம் வீங்கிப்போய் வீட்டு வாசலில் தன்னைவிட்டுப் பிரியப்போகும் தோழியையே பார்த்துக்கொண்டு நிற்கும் ஹேமாவைக்கூட பார்க்காமல் வண்டியில் தலை குனிந்து அமர்ந்திருந்தாள் பவி.

எங்கே அவளைப் பார்த்தால் அதற்குமேல் வண்டியில் உட்காராமல் இறங்கிவிடுவோமோ என்ற பயத்தால் ஹமாவைப் பார்ப்பதை தவிர்த்தாள் பவி.

வண்டி கும்பகோணம் ரயிலடியை நோக்கிக் கிளம்பியது. வண்டிமாடுகள் வேகமாக நடையைபோட பவிக்கும் ஹேமாவுக்குமான இடைவெளி. .  பிரிவின் தூரம். . கொஞ்சம் கொஞ்சமாகக் கூட அரம்பித்தது.

ஹேமாவைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது பவிக்கு. ஆனாலும் மிகவும் கஷ்டப்பட்டு மனதை அடக்கிக்கொண்டாள்.

பவீ. . பவீ. . பவீ. . ஹேமாவின் கத்தல். . அதற்கு மேல் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் திரும்பிப்பார்த்தாள்.

ஹேமா வண்டியைத் துரத்திக்கொண்டு ஓடிவருவது தெரிந்தது. வண்டிக்காரன் மாடுகளைக் கொஞ்சம் அடக்க வண்டி நின்றது. ஓடிவந்த ஹேமா

பவீ . . இந்தா இத வெச்சுக்கோ. . என் நியாபகம் வரும்போதெல்லாம் இத தொறந்து பாரு. . என்ன மறந்துடாதடி பவி. . நானும் ஒன்ன மறக்க மாட்டேன். . பவியின் கைபிடித்து கொண்டுவந்திருந்த பொருளை திணித்துவிட்டு திரும்பிப்பாராமல் ஓடினாள் ஹேமா.

வண்டி கிளம்பியது.

ஹேமா தனது கையில் திணித்துச் சென்றது ஒரு தகர பெருங்காய டப்பா என்பதை அப்பொதுதான் பார்த்தாள் பவி. மஞ்சள் கலரில் இருந்த அந்த பெருங்காய டப்பாவின் மூடியில் கறுப்பு நிறத்தில் ரெயில் எஞ்சின் படம் தீட்டப்பட்டிருந்தது. கடைகளில் கட்டிப் பெருங்காயத்தை வைத்து விற்பார்கள். இப்போது அதில் ஹேமா என்ன வைத்திருக்கிறாளோ. . ஆனால் பவிக்கு அதைத் திறந்து பார்க்க எண்ணம் இல்லை. அதை அந்த தகரப் பெருங்காய டப்பாவை அப்படியே நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள் பவித்ரா.

ஹேமூ. . என்று அவள் வாய் முணுமுணுத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.