(Reading time: 45 - 90 minutes)

கும்பகோணம் அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த பவிக்கு பம்பாய் போன்ற பெரு நகரத்தின் பரபரப்பும், அந்த மக்களின் பாஷையும், பழக்க வழக்கமும் பிடிபடவுமில்லை, பிடிக்கவுமில்லை. சதா ஹேமாவின் நினைப்பாகவே இருந்தது. குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டி இவளை அழைத்து வந்தவர்கள் மிகவும் நல்லவர்களாகவே இருந்தார்கள். சித்தியின் திட்டும் கொடுமையும் இங்கில்லை.

குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் நேரம் தவிற மீதி நேரத்தில் பள்ளிப் பாடங்களைப் படிக்க அனுமதித்தார்கள்.

பவி பம்பாய்க்கு வந்து இரண்டு வருடம் ஆகியிருக்கும். அந்த வீட்டோடு ஒன்றிப்போனாள். அப்பாவையோ சித்தியையோ தம்பியையோ நினைக்கவும் இல்லை. ஆனால் தோழி ஹேமாவை நிமிட நேரம்கூட  மறக்கவில்லை. தோழியின் நினைவு அதிகமாகும் போதெல்லாம் பெருங்காய டப்பாவைத் திறந்து பார்ப்பாள்.

முதல் முறையாகத் திறந்த போது அதில் இருந்த்வற்றைப் பார்த்துக் கதறிவிட்டாள். ஏழெட்டு கமர்க்கட்டு, புழுக்கைப் புழுக்கையாய் உடைத்த சிலேட்டுக் குச்சி, அஞ்சாறு கண்ணாடி வளையல், ஒரு ரிப்பன், நாலஞ்சு புழுக்க பென்சில், ஒரு சாந்து பாட்டில், பல்லுப்போன ஒருகுட்டிச் சீப்பு, . . பார்த்ததும் பவி அழுத அழுகை அடங்க நெடு நேரம் ஆயிற்று.

திடீரென ஒரு நாள் குழந்தைக்கு கடுமையாய் ஜுரம் வந்து எந்த சிகிச்சையும் பலன் தராமல் இறந்து போயிற்று. துக்கம் தாளாமல் தவித்த குழந்தையின் பெற்றோருக்கு பவியே ஆறுதல் சொல்லும் தாயாகிப்போனாள். கொஞ்சம் கொஞ்சமாக மனம் தேறி வந்த அவர்கள் பவியையே தங்கள் குழந்தையாக எண்ண ஆரம்பித்தது கடவுள் செயலேயன்றி வேறெதாக இருக்க முடியும்? அடுத்தடுத்து பவியின் வாழ்க்கையில் நடந்த நடப்புகள் கனவில் நடப்பது போலவே நடந்தன. பவி பள்ளிக்கூடம் அனுப்பப்பட்டாள்.

வகுப்பில் தான் அமரும் இடத்திற்கு பக்கமாய் தனது கெர்சீப்பை போட்டுவைக்கும் அவளின் வழக்கம் சக மாணவ-மாணவிகளுக்குப் புரியாமல் இருந்தது. பவி தனது தோழி ஹேமாவின் நினைவாய் போட்டு வைக்கிறாள் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

காலம் யாருக்காகவும் காத்து நிற்பதில்லை. அதுபாட்டுக்கு உருண்டோடியது. இப்போது பவி சாதா பவி இல்லை. டாக்டர். பவித்ரா. எம். பி. பி. எஸ். மேற்கொண்டு டி. ஜி. ஓ. படிக்கும் மாணவி. இன்னிலையில்தான் அவள் வாழ்க்கையில் தென்றலாய் நுழைந்தான் வெங்கட். அவனும் அவளின் சம வயதுடைய மருத்துவர் என்பதால் அவர்களின் நேசம் நன்றாகவே வளர்ந்தது. பலமுறை அவனிடம் கேட்பாள் பவி. .

வெங்கட் என் உடல் ஊனம் பார்த்துமா உங்களுக்கு என் மீது இவ்வளவு நேசம்? . .

பவி. . நான் உன் மீது வைத்திருக்கு நேசம் வெறும் உடல் சார்ந்ததல்ல. . மனம் சார்ந்தது. நான் உன் மனதை மட்டுமே நேசிக்கிறேன். இனி இன்னொரு முறை இதுபோல் கேட்காதே. .

அவன் கண்களில் தெரிந்த சத்தியமும் அவன் வார்த்தையில் தெரிந்த உண்மையும் அவளை வாயடைக்க வைத்துவிடும். மிகக் கண்ணியமானது அவர்கள் காதல். இந்தக்காதலை இறைவன் வாழவைப்பானா? அது இறைவன் மட்டுமே அறிந்த ஒன்று.

சிலசமயம் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூட சொல்லாமல் சிலவிஷயங்கள் மனதோடு தங்கிவிடுவதுண்டு. மறைக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இருக்காது. ஆனால் சொல்லத் தவறிவிடுவதுண்டு. அப்படி சொல்லாமல் , சொல்லவேண்டிய அவசியமில்லை என நினைக்கும்

விஷயங்கள்கூட வாழ்க்கையில் பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுவதுண்டு. இது கடவுளின் விளையாட்டோ? தன் தோழி ஹேமா பற்றி வெங்கட்டிடம் சொல்லாமல் விட்டதால் ஏற்படப்போகும் விளைவுகள் எத்தகையதாய் இருக்குமென்று தெரிந்திருந்தால் பவி அவனிடம் சொல்லாமல் இருந்திருப்பாளா? எல்லாம் விதிப்படிதான் நடக்குமோ?  

ருத்துவப் புத்தகமொன்றில் ஆழ்ந்திருந்த பவி. . பவி. . பவி என்ற வெங்கட்டின் பரபரப்பான குரல் கேட்டுத் தலை நிமிர்ந்தாள்.  

என்ன வெங்கட் ரொம்ப பரபரப்பா இருக்கீங்க. .

பவி. . நான் ஒடனே. . மாயவரம் போகணும். என் தாத்தா என்ன ஒடனடியா வரும்படி தந்தி குடுத்துருக்கார். . இன்னிக்கு சாயந்திரம் நான் கெளம்பணும். . . அவன் குரலில் கவலை தெரிந்தது.

ஏன். . இவ்வளவு அவசரமா உங்க தாத்தா வரச்சொல்லி இருக்கார் அவருக்கு ஒடம்புகிடம்பு சரியில்லாம இருக்குமோ? என்று சொன்ன பவியின் குரலிலும் கவலை தெரிந்தது.

தெரில. . பவி. .

கெளபுங்க வெங்கட். . கவல படாதீங்க. . ஒண்ணுமிருக்காது. . தாத்தவ நல்லா பாத்துக்கோங்க. . அவரப்பட்டு திரும்ப வேண்டாம். . நிதானமா வாங்க. .

சரி பவி நான் வரேன். . கிளம்பினான் வெங்கட். .

இனி இவர்கள் இருவரும் மீண்டும் சந்திப்பார்களா? மாட்டார்களா? அப்படி சந்திக்கும் சூழ்னிலை எப்பேற்பட்டதாக இருக்கும். . இறைவனுக்கே வெளிச்சம்.

மாயவரம். வீட்டிற்குள் நுழைந்த வெங்கட்டை வரவேற்றார் தாத்தா சாம்பசிவம். ரிடயர்ட் ஜட்ஜ். ரொம்பவும் தளர்ந்து போயிருந்த தாத்தாவைப் பார்த்த வெங்கட். . தாத்தா. . தாத்தா. . என்னாச்சு தாத்தா. . ஏன் தாத்தா இப்பிடி எளச்சுப்போய். எனாச்சு சொல்லுங்கோ தாத்தா. . தாத்தாவின் கைகளைப் பிடித்துக்கொண்டான் கண்களில் கண்ணீர் அரும்பியது.

வா. . வெங்கட். . உட்காரு. . நான் சாதாரணமாகத்தான் இருக்கேன். .

இல்லை. . இல்லை. . நீங்கள் ஏதோ பிரர்ச்ச்னையில் இருப்பதுபோல் இருக்கு. . சொல்லுங்கோ. . என்னாச்சு. . ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.