(Reading time: 32 - 63 minutes)

ரம்பத்தில் சண்டைகள் நடக்கும் போது பிள்ளைகளுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டான்.

ஆனால் முன்பிருந்ததற்கும் இப்போதைக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமலா இருக்கும்?

வீட்டு வேலைகள் செய்வதைக் குறைத்துக்கொண்டாள்.

“நான் என்ன வீட்டில் சும்மாவா இருக்கேன்? வேலைக்குப் போய் உழைத்துக் களைத்துப் போய்தானே வர்றேன். நானேதான் எப்பவும் வடிச்சுக்கொட்டனுமா?”

தீயாய் வார்த்தைகளை கொட்டினாள்.

ஆரம்பத்தில் இருந்தே மனைவிக்கு உதவியாய் சிறுசிறு வேலைகள் செய்தவன்தான் அவன்.

பிள்ளைகள் பட்டினி கிடக்கின்றனரே என்று அவனே செய்ய ஆரம்பித்தான். அதையும் சாப்பிட்டுவிட்டு நொட்டையும் சொல்வாள்.

பிள்ளைகளுக்கு என்று பொறுத்துப் போனான்.

அதுவும் ஓர் கட்டத்தில் முடியாமல் போயிற்று.

அவனது இயலாமையை அடிக்கடி குத்திக்காட்டிப் பேசினாள்.

அவள் ஒரு முதுகலைப்பட்டதாரி. அதற்கு ஏற்றவாறு வேலையும் பார்க்கிறாள். தனியார் நிறுவனத்தில்தான் வேலை. அவனோ பன்னிரண்டாம் வகுப்புதான் படித்திருக்கிறான்.

அதனால் அவனுக்கு நிரந்தர வருமானம் வருமளவிற்கு வேலை செய்ய முடியவில்லை. கிடைத்த சிறுசிறு வேலைகளை செய்துவந்தான்.

முன்பு விவசாயம் இருந்தது. இப்போது அதுவும் நலிந்து விட்டதால் சிறு சிறு கைவேலைகளைக் கற்றுக்கொண்டு செய்து வருகிறான்.

நீ ஒரு தண்டம். எதுக்கும் லாயக்கில்லாதவன். என்று ஏகவசனத்தில் கட்டிய மனைவி ஒருத்தி எடுத்தெறிந்து பேசினால் எந்த கணவனால்தான் பொறுத்துக்கொள்ள முடியும்.

பிள்ளைகளை விட்டுப் பிரிய மனம் இல்லை. அதனால் இவளுடன் வாழ்வதற்கு செத்துவிடலாம் என்று தோன்றியது. அதற்கும் முயற்சி எடுத்துப் பார்த்துவிட்டான்.

அன்றுதான் கன்னத்தில் அறை வாங்கி சுருண்டு விழுந்தான் சஞ்சய்.

அவன் வீறிட்டழுத சத்தத்தில் தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டு பதறிப்போய் வெளியில் ஓடிவந்தான்.

மகனை வாரி அணைத்துக்கொண்டான்.

பொறுத்துப் பொறுத்துப் போனவன் மகனது வேதனை தாங்காமல் அவளிடம் கேட்கப் போக காட்டுக்கத்தலாய் கத்தினாள்.

அவளது சத்தத்திற்கும் மீறி அவனால் பேச முடியவில்லை.

சுவற்றில் மோதிக்கொள்ளலாம் போல் இருந்தது.

அத்துடன் இது சண்டை போடும் நேரம் இல்லை. கலங்கி நிற்கும் மகனைக் கவனிக்க வேண்டும்.

அதன் பிறகு பிள்ளைகள் தாயை விட்டு விலக ஆரம்பித்துவிட்டார்கள்.  எல்லா வேலைகளையும் செய்யத் தெரிந்தவனுக்கு மகளுக்கு பின்னல் போடுவது தெரியவில்லை. அந்த வேலையை மட்டும் செய்துகொண்டிருந்தவள் இன்று அதற்காக மகளின் மனதையும் உடம்பையும் நோகடித்துவிட்டாள்.

பிள்ளைகளைக் கூப்பிட்டான்.

“வீட்டுக்குப் போறோமாப்பா?” தயக்கமாய் கேட்டனர் குழந்தைகள்.

“லேட்டா போகலாம். இப்ப ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரவா?”

“வேண்டாம்ப்பா. முடி வெட்டுனோம்ல. வீட்டில் போய் குளிச்சுட்டு அப்புறமா சாப்பிடலாம்.”

பிள்ளைகள் மீண்டும் விளையாடப் போக கையோடு கொண்டு வந்திருந்த கையேட்டை எடுத்துப்படிக்க ஆரம்பித்தான்.

குரூப்-4 பரிட்சைக்கு தயார் செய்கிறான்.

இப்படியே கூலி வேலை செய்து சமாளிக்க முடியாது என்று தோன்றியது.

அவன் படித்த படிப்பிற்கு நல்ல சம்பளத்தில் வேலையை நினைத்துப் பார்க்க முடியாது.

வயதும் வேறு ஆகிக் கொண்டிருப்பதால் அவனுக்குப் பயம். அதனால் அவனது நண்பன் ஒருவன் சொன்னதால் பரிட்சைக்கு விண்ணப்பித்திருக்கிறான்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து குறிப்பெடுத்துக்கொண்டிருக்கிறான். திரும்ப திரும்ப படிக்கிறான்.

மனiவியின் கிண்டல் பார்வையைக் கண்டு கொள்வதில்லை.

இப்போதெல்லாம் அவனது தன்மானத்தை குறிவைத்துத்தான் அவளது பேச்சே இருக்கிறது.

“என்ன வீட்டை விட்டுட்டு ஓடிடலாம்னு தோணுதா? இல்லை. உலகத்தை விட்டே போயிடலாம்னு தோணுதா? எங்கே போனாலும் நீங்க பெத்து வச்சிருக்கீங்களே ரெண்டு. அதுகளையும் கூட்டிக்கிட்டு போயிடுங்க. என்னை விரட்ட முடியாது. ஏன்னா இது என் வீடு. வாடகை வீடுன்னாலும் அட்வான்ஸ் கொடுத்து மாசாமாசம் வாடகையும் நான்தான் தர்றேன்.”

நேரமாகிவிட்டதை உணர்ந்து தனது நினைவுகளுக்கு தற்காலிகமாக விடைகொடுத்து அனுப்பினான்.

தகப்பனின் குறிப்பறிந்து பிள்ளைகளும் ஓடிவந்தனர்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் இரவு உணவை வாங்க உணவு விடுதிக்குச் சென்றவனை தயக்கமாய் பார்த்தாள் ஆதிரை.

“என்னம்மா?”

“வீட்டில் என்ன இருக்கோ அதையே சாப்பிடலாம்பா.”

தகப்பனிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ. அதற்காக தினந்தோறும் வீட்டில் நடக்கும் போராட்டம்தான் அவளுக்குத் தெரியுமே.

பிள்ளைகளை சிரித்து சமாதானப்படுத்தி உணவை வாங்கிக்கொண்டு கிளம்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.