(Reading time: 32 - 63 minutes)

’ன்னு முடியற மாதிரி பேர் வச்சா வாழ்க்கை நல்லா இருக்காதாம். என் வாழ்க்கைதான் இப்படி ஆச்சு. நம்ம பொண்ணுக்கும் அது வேண்டாம். என்று பேசி ஆதிரை என்று பெயர் வைத்தாள்.

அன்றே அவளது குணத்தை புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்போது குழந்தை மேல் வச்ச பாசத்தால் சொல்கிறாள் என்று புரிந்துகொண்டான்.

காயம் பட்ட உடன் அவனுக்குத் தெரிந்த முதலுதவியை செய்துதான் மகளை தூக்கி வந்திருந்தான்.

இருந்தும் காயம் அதிகமாக இருந்தது.

அவசரத்தில் கையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். இப்போது மருத்துவமனைக்கு கொடுக்கவும் மருந்து மாத்திரை வாங்கவும் என்ன செய்வது?

“என்ன சார்? எழுதின மருந்தெல்லாம் வாங்கிட்டீங்களா?”

“ம். இதோ போறேன் சிஸ்டர்.” தயக்கமுடன் கூறினான்.

“சீக்கிரம் வாங்கிட்டு வாங்க சார். எங்களுக்கு என்ன நீங்க மட்டுமா? எத்தனை பேரை பார்க்க வேண்டியிருக்கு?” அவள் அவசரப்படுத்திவிட்டு சென்றுவிட்டாள்.

தந்தையின் தயக்கம் மகளுக்குப் புரிந்தது. அவளுக்கு நேராகவேதானே மாயா குத்திக்காட்டிவிட்டுப் போனாள்.

“அப்பா!” நன்றாக இருந்த இன்னொரு கையை நீட்டி அழைத்தாள்.

“என்னடா?”

“இந்தாங்கப்பா!”

அவன் கைகளில் இருந்த பொருளைப் பார்த்து திகைத்தான்.

அவள் காதில் இருந்த தோடு.

இப்போது வேறு வழியில்லை. மனம் வலிக்க மகளை அணைத்து ஆறுதல் சொன்னவன் உடனே விரைந்தான்.

“இப்ப எப்படி இருக்கடா?”

“பரவாயில்லைப்பா.”

மகள் வேறு என்னவோ சொல்ல தயங்குவது புரிய “என்னடா?” என்றான்.

“நாம வேற வீட்டுக்குப் போயிடலாம்ப்பா.” கண்களை தரையில் பதித்தவாறே சொன்னாள்.

அதற்கு மேல் அவனால் தாங்க முடியவில்லை. மகளை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டான்.

வீடு திரும்பினர்.

அவர்கள் வந்தது தெரிந்தும் அறையை விட்டு வெளியில் வந்து அவள் விசாரிக்கவில்லை.

அவனுக்குள் வீட்டை விட்டுப் போக வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது.

தங்களுக்கு அத்தியாவசியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு மனைவிக்கு தங்கள் பிரிவைப் பற்றி ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு பிள்ளைகள் இருவரையும் கைகளில் பற்றிக்கொண்டு வாசல்படி வரைக்கும் சென்றான்.

மனம் கேட்காமல் திரும்பி மனைவி இருந்த அறையை நோக்கினான்.

அங்கிருந்து எந்த அரவமும் கேட்கவில்லை.

விரக்தியுடன் வாசல்படியைத் தாண்டினான்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே அந்த கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அன்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட துணை ஆட்சியர் ராகவனை வரவேற்கும் விதமாக அந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ராகவன் கம்பீரமாய் அமர்ந்திருந்தார்.

மற்றவர்கள் அவரது சேவையைப் பாராட்டிப் பேசிவிட்டு அமர அதை ஏற்றவர் மற்றவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக கம்பீரமாக பேச ஆரம்பித்தார்.

“பேசும் போது ஆம்பளை மாதிரி பேசுங்க. நடக்கும்போது கூட சொங்கி மாதிரி நடக்கறீங்க. நீங்க ஒரு கோழை.” என்றெல்லாம் மாயா எடுத்தெறிந்து பேசிய ராகவனின் துணிச்சலை இன்று பாராட்டதவர் இருக்க முடியாது.

அன்று எழுதிய குரூப்-4 தேர்வில் தேர்வு செய்யப்பட்டு வேலைக்குச் சென்றவர் அத்துடன் நிற்கவில்லை. ஜெயிக்க வேண்டும் என்ற ஒரு வெறி அவருக்குள் ஒரு உந்துதல் தந்திருந்தது.

தபால் மூலமாக பட்டப்படிப்பை தொடர்ந்தார்.

அதன் பிறகு இன்னும் போட்டித் தேர்வுகள் எழுதி தேர்வாகி, படிப்படியாக துறைத்தேர்வுகள் எழுதி இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.

அதுவும் ஒரு நேர்மையாக அதிகாரியாக வாழ்ந்து வருகிறார்.

நேர்மை காரணமாக ஆங்காங்கு பந்தாடப்பட்டு இப்போது சொந்த மாவட்டத்திலேயே துணை ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கிறார் என்றால் அவரது உழைப்பை என்னவென்று சொல்வது?  

கூட்டம் முடிந்ததும் ராகவன் மாவட்ட ஆட்சியரிடம் சொந்த வேலையாக செல்வதற்காக அனுமதி கேட்டார்.

தன் முன் வந்து தயக்கத்துடன் நிற்கும் அவரை ஆச்சர்யமுடன் பார்த்தான் ராஜன்பாபு. அவனும் நேர்மையான அதிகாரிதான். ஆட்சியராகப் பொறுப்பேற்ற பிறகு நிறைய நல்ல மாற்றங்கள் செய்திருக்கிறான்.

அவனது ஆச்சர்ய பார்வையைக் கண்ட ராகவன்

“இன்னிக்கு முதல் நாள்ன உடனேதான் வேலையில் ஜாயின் பண்ணினேன் சார். இல்லைன்னா வந்திருக்க மாட்டேன்.” என்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.