(Reading time: 32 - 63 minutes)

பிள்ளைகள் இருவருமே எப்போதுமே எதற்கும் அடம்பிடிக்க மாட்டார்கள்.

எப்படிப்பட்ட பிள்ளைகள். அவர்களைப் போய் அவள் என்னவெல்லாம் பேசுகிறாள்.

பிள்ளைகள் சொன்ன மாதிரியே மனைவியை விட்டுப் பிரியும் முடிவை அவனே எடுக்கப் போகிறான் என்ற உண்மை தெரியாமல் அவனது மனைவி என்றாவது மாறுவாளா? என்று மனதிற்குள் ஏக்கம் வந்தது.

அந்த முடிவும் வெகு விரைவிலேயே எடுக்கும் நேரம் நெருங்குகிறது என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை.

வீடு திரும்பிய போது மகளின் தலையைப் பார்த்த மாயா அலட்சியமாய் தோள்களைக் குலுக்கிக்கொண்டு தனது அறைக்குள் புகுந்துகொண்டாள்.

தாயின் அரவணைப்பு தேவையான நேரத்தில் மகளுக்கு கிடைக்கவில்லையே என்ற வேதனை நெஞ்சை அரித்தது.

சஞ்சய் பூனைக்குட்டி போல் மாயாவைச் உரசிக்கொண்டேயிருப்பான்.

விளையாடச் சென்றாலும் இடையிடையில் ஓடிவந்து அவளை உரசிவிட்டுத்தான் செல்வான். அதுவும் இரவில் உறங்கும் நேரம் நெருங்கிவிட்டால் அவளை ஒட்டிக்கொண்டு மடியில் படுத்துக்கொள்வான். அவளால் கைகாலை வசதியாக நீட்டி அமரக்கூட முடியாது. அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் தட்டை தள்ளிவைத்துவிட்டு படுத்துக்கொள்வான்.

“கொஞ்சமாச்சும் தள்ளி உட்காருடா.” என்று மாயா அலுத்துக்கொள்வாள்.

அப்படிப்பட்ட மகன் தாயை நினைத்து கனவில் கூட அலறுகிறான்.

என்ன செய்யப் பேகிறேன் என்ற கவலை மனதை அழுத்தியது.

ராகவன் தேர்வை நல்ல முறையில் எழுதியிருந்தான். தேர்வறைக்கு சென்ற போது முதலில் அவனுக்கு வெட்கமாக இருந்தது.

அவனை விட சின்னப்பிள்ளைகள் எழுத காத்திருந்தனர்.

பிறகு இந்த வயசிலாவது தனக்குப் புத்தி வந்ததை நினைத்துத் தேற்றிக்கொண்டான்.

அவன் படிப்பு வராமல் படிப்பை நிறுத்தவில்லை.

குடும்ப சூழ்நிலை. வெளி வேலைக்கு இல்லை என்றாலும் வீட்டு வேலையைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு வந்தது.

அதனாலேயே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டான்.

ன்று காலையில் அவசர அவசரமாக சமையல் அறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.

கொஞ்சம் உடல் அலுத்து இருந்ததால் அவன் எழ தாமதமாகிவிட்டது.

“அப்பா!” ஆதிரை எழுந்து வந்தாள்.

“எழுந்துட்டியாடா? போய் பிரஷ் பண்ணிட்டு வந்து டீயைக் குடி. அப்புறம் தம்பியையும் எழுப்பிவிடு. அப்பாக்கு இன்னிக்கு எழும்ப லேட்டாயிடுச்சு.”

“சரிப்பா.”

பருப்பை குக்கரில் வேக வைத்திருந்தான். அரிசியைக் களைந்து ஊற வைத்திருந்தான். ஒரு குக்கர்தான் இருக்கிறது. பருப்பை பாத்திரத்தில் கொட்டிவிட்டு பிறகு அதில்தான் அரிசியை வைக்க வேண்டும்.

குக்கரில் விசில் வர அடுப்பை அணைத்து இறக்கி வைத்தவன் ஏதோ எடுப்பதற்காக உள்ளே சென்றுவிட்டான்.

நேரமாகிவிட்டதாலும், தந்தை ஏற்கனவே செய்திருந்ததை கவனித்திருந்ததாலும் தந்தைக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு குக்கரின் மூடியைக் கழட்டினாள்.

கழட்டும் லாவகம் தெரியாமல் அவள் கழட்டியதால் உள்ளே அழுத்தத்துடன் இருந்த நீராவி அவள் கையைச் சுட்டுவிட்டது.

“ஐயோ!” என்ற மகளின் கதறல் கேட்டு ஓடிவந்தவனுக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்திருந்தது.

மகளின் கூக்குரல் கேட்டும் ஓடிவராத மனைவியை கடிந்து கொள்ள நேரம் இல்லாமல் மகளை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினான்.

கூடவே சஞ்சயும் கிளம்பிவிட்டான்.

மகளின் வேதனையைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

செய்தி அறிந்து பார்க்க வந்த ராகவனின் சகோதரி அவனிடம் வைத்தியத்திற்கு என்று ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு சென்றாள்.

அந்த நேரம் சரியாக உள்ளே வந்த மாயா அவனைக் கேலியுடன் பார்த்தாள்.

“என்ன வைத்தியச் செலவுக்கு வக்கில்லாம கை நீட்டி காசு வாங்கியாச்சா? அப்படி காசு இல்லாதவங்க ஏன் தனியார் ஹாஸ்பிட்டலுக்கு வரனும்?”

“ப்ளீஸ் மாயா! இது ஹாஸ்பிட்டல். என்னை பேச வைக்காதே.”

“ஓ! நீங்க பேசிடுவீங்களா? சரி நான் வீட்டில் போய் காத்திருக்கேன். வாங்க. ஏதோ கட்டின பாவத்துக்கும், பெத்த கடனுக்கும் செலவுக்கு பணம் கொடுக்கலாம்னு வந்தேன். இவ்வளவு திமிர் இருக்கிறப்ப நீங்களே செலவு செஞ்சுக்குங்க. போய் கை நீட்டிப்பாருங்க. அப்ப தெரியும். காசு பணம் இருந்தாதான் மதிப்பு. காசு இல்லைன்னா இப்ப உங்க அக்கா கொடுத்துட்டு போறாங்களே. அதை மாதிரி கையேந்தி பிச்சை எடுத்துதான் குடும்பம் பண்ணனும். வக்கு இல்லன்னாலும் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.”

போய்விட்டாள். மகள் எப்படியிருக்கிறாள் என்ற ஒரு விசாரிப்பு கூட இல்லை.

தன் ஆணவத்தைக் காட்டிவிட்டு சென்றுவிட்டாள்.

இதோ தனது தமக்கையின் வலியை தனதாக உணர்ந்து ‘வலிக்குதாக்கா’ என்று கண்ணீருடன் நிற்கிறானே அந்த பிஞ்சுக் குழந்தை. அவனது உணர்வில் பாதி கூட பெற்றவளிடம் இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.