(Reading time: 32 - 63 minutes)

வீட்டுக்குள் நுழைந்த உடன் மனைவியைக் கட்டிக்கொண்டு கதறிவிட்டான்.

“மாயா! ஏன் இப்படி பண்ணே? முன்னாடியே சொல்லியிருந்தா எவ்வளவு செலவானாலும் உனக்கு சிகிச்சை எடுத்திருக்கலாமே?”

“அதுக்குதாங்க சொல்லலை.” அமைதியாக சொன்னவளைப் பார்த்து திகைத்தான்.

“செலவு பண்ணி வைத்தியம் பண்ணா சில மாதங்கள் உயிருடன் இருக்கலாம். ஆனால் அதற்கான செலவுத்தொகை நம் கை மீறிய தொகையாச்சே? நம்மகிட்ட என்ன இருக்கு? வித்து செலவு பண்ண?”

“யார்கிட்டயாவது கடன் வாங்கியிருக்கலாமே?”

“அப்புறம் என்னால் கடனாளியா மாறி நீங்க கஷ்டப்படறதை நினைச்சே என் ஆத்மா அலையறதுக்கா?”

“பாவீ! பாவீ! ஏன்டி இப்படி எல்லாம் பேசறே? அதுக்காக உன் கஷ்டத்தை எங்ககிட்டயிருந்து மறைக்கிறதுக்காக அறைக்குள் போய் ஒளிஞ்சுக்கிட்டே. இவ்வளவு வேதனையையும் தாங்கிக்கிட்டு ஏன் எங்ககிட்ட அப்படி நடந்துக்கிட்டே. உனக்கு ஆறுதலாக் கூட நான் பேசவில்லையே. நீ இந்த நிலைமையில் இருக்கேன்னு கூட தெரியாம உன்னை விட்டு விலக முடிவெடுத்தேனே. நான் என்ன மனுசன்?”

தன் தலையில் அடித்துக்கொண்டான்.

அவன் கைகளைப் பற்றியவள் தன் முகத்தில் பதித்துக்கொண்டு அவனைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள்.

“நான் அதுக்காகதான் அப்படி நடந்துக்கிட்டேன்?”

“ஏன் அப்படி நடந்துக்கிட்டே?”

“நீங்க உங்களை நம்பி வாழ்க்கையில் முன்னேறனும். யார்கிட்டயும் தலைகுனியக் கூடாது. அதுக்காகதான் மனம் வலித்தாலும் உங்க தன்மானத்தை சீண்டற மாதிரி பேசினேன். நீங்க வெகுளிங்க. எதிர்காலத்தில் வேற யாரும் உங்களை ஏமாத்திடக் கூடாது. அதுக்குதான் உங்க மனசை உறுதியாக்க நினைச்சேன்.”

மூச்சிறைக்க பேசினாள்.

“நீ என்கிட்ட உண்மையை சொல்லியிருக்கலாமே?”

“சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? உங்க முன்னேற்றத்தைப் பத்தி யோசிச்சிருப்பீங்களா? எனக்கு சிகிச்சை செய்வதை பத்திதான் யோசிப்பீங்க. தகுதிக்கு மீறி கடன் வாங்குவீங்க? அதன் பிறகு எப்படி அடைக்கிறது? உங்களுக்கு மனுசங்களைப் பத்தி தெரியலைங்க. பணம் இருந்தாதான் மதிப்பு. அப்புறம் உங்களுக்கு சொல்லிப் புரிய வைக்கிற அளவுக்கு ஆண்டவன் எனக்கு கால அவகாசம் தரலையே. கழுத்தில் பாசக்கயிறை நீட்டிவிட்டானே. நான் என்ன செய்ய?”

“கட்டின பொண்டாட்டியை காப்பாத்தறது ஒரு புருசனோட கடமைதானே? அதை செய்யவிடாமல் காலம் பூரா என்னை குற்ற உணர்ச்சியில் தவிக்க வைத்துவிட்டாயே?”

“ஒரு கணவனை கடனாளியாகாம காப்பாத்தறது மனைவியோட கடமைங்க. உங்களுக்கு வர்ற இடரை நீக்குவதும் என்னோட கடமைதாங்க. உண்மை தெரிஞ்சிருந்தா நீங்க உங்க கடமையை கண்டிப்பா செஞ்சிருப்பீங்க. செலவு செஞ்சா என் ஆயுசு நீடிக்கும்னா கண்டிப்பா உங்ககிட்ட சொல்லியிருப்பேங்க. அந்த செலவு செய்யற மாதிரி நம்மகிட்ட பணவசதி இருந்தாலும் சொல்லியிருப்பேங்க. இப்ப எனக்கு சந்தோசமா இருக்குங்க. உங்க மேல் நம்பிக்கை இருந்ததால்தான் வீட்டை விட்டு கிளம்புனீங்க. இனி நீங்களும் நம்ம பிள்ளைங்களும் நல்லா இருப்பீங்க. எனக்கு அது போதும். நான் சந்தோசமா இந்த உலகத்தை விட்டுப்போவேன்.”

“அப்படி எல்லாம் பேசாதே மாயா.”

“என் உடல்தாங்க உங்களை விட்டுப் போகும். என் உயிர் உங்களை சுத்திதான் இருக்கும்.”

அவளுக்கு மூச்சு வாங்கியது.

பிள்ளைகளை அழைத்தாள்.

மகனது கன்னத்தை தடவினாள். மகளது தலையைத் தொட்டுப் பார்த்தாள். என்னவோ இன்றுதான் அவர்களை காயப்படுத்தியது போல் துடித்துவிட்டாள்.

“என் கண்ணுகளா! உங்களையும் சேர்த்தே துடிக்க வைத்துவிட்டேனே. இந்த அம்மாவின் பிரிவு உங்களை வாட்டக்கூடாதுன்னுதான்டா அப்படி நடந்துக்கிட்டேன். அம்மாவை மன்னிச்சிடுங்கடா.”

மகளின் கைக்காயத்தைப் பற்றி முத்தமிட்டாள்.

கணவனையும் குழந்தைகளையும் சேர்த்தணைத்தாள்.

கணவனின் கன்னத்தில் முத்தமிட்டவள் அப்படியே சரிந்தாள்.

ப்போதும் அந்த முத்தத்தின் ஈரமும், அணைப்பும்தான் அவரை வாழ வைக்கிறது.

மனைவியின் நினைவில் கண்ணீர் பெருகியது.

அவள் இறந்த பிறகு அவர் பணத்திற்கு சிரமப்படவே இல்லை. அவள் பெயரில் போடப்பட்டிருந்த காப்பீட்டுப் பணம் வந்தது. தனது சம்பளத்தில் ஒரு தொகையை பிள்ளைகளின் பெயரில் வைப்பு நிதியில் போட்டிருந்தாள். அதன் பிறகு அவருக்கு வேலையும் கிடைத்துவிட்டது.

எந்த அளவிற்கு அவள் யோசித்துச் செயல்பட்டிருக்கிறாள். தனக்குப் பிறகு கணவனும் பிள்ளைகளும் எந்த சிரமமும் படக்கூடாது என்று தனது வேதனையை வெளியில் காட்டாமலே மறைத்திருக்கிறாள்.

இப்போது அவள் நினைத்த மாதிரியே அவர்கள் நலமாய் இருக்கிறார்கள். இந்த பிள்ளைகளின் தகப்பன் நான் என்று தலைநிமிர்ந்து சொல்லுமளவிற்கு அவருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

ஆதிரை படிப்பை முடித்துவிட்டாள். வேலையிலும் சேர்ந்துவிட்டாள். இனி அவளது திருமணத்தை நல்ல பையனோடு செய்து வைத்துவிட்டால் மகனது படிப்புதான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.