(Reading time: 32 - 63 minutes)

ல்லை சார். நாங்க வீட்டுக்கே போறோம்.”

அவர்களது மனநிலையை தான்தான் கெடுத்துவிட்டதாக வருந்தினான். ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அதனால் பேச்சை மாற்றினான்.

அவர்கள் வீட்டு முகவரியைக் கேட்டு வீட்டு வாசலில் காரை நிறுத்தினான்.

“உள்ளே வாங்க சார்.”

மரியாதை நிமித்தம் கூப்பிட்டனர். யாருக்குமே இப்போது விருந்தோம்பும் அளவிற்கு மனதில் சந்தோசமில்லை.

“இல்லை சார். இன்னொரு நாள் குடும்பத்தோடு வர்றேன்.”

அவனது கண்கள் புது சொந்தத்தோடு அவர்களை பார்த்தது.

விடைபெற்றான்.

வீட்டுக்குள் நுழைந்த உடன் அவர்களது பார்வை அனிச்சையாக சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்திற்கு சென்றது. பெரிதாக்கப்பட்டு மாட்டியிருந்த அந்த புகைப்படத்தில் ராகவன் ஆதிரையை மடியில் வைத்திருக்க, அருகில் மாயா சஞ்சயை மடியில் வைத்திருந்தாள்.

நால்வரின் முகத்திலுமே சந்தோசப் புன்னகை. யார் கண் பட்டதோ? அதன் பிறகு அவர்கள் இது மாதிரி சேர்ந்து இருக்கவில்லை.

கைகால் கழுவிக்கொண்டு சமையல் அறைக்குள் சென்றாள் ஆதிரை. விழா முடிந்து வீட்டுக்கு வருவதற்கு முன் ஹோட்டலில் சாப்பிட்டு வர முடிவு செய்திருந்ததால் எதையும் செய்து வைக்கவில்லை.

அவல் இருந்தது. உப்புமா செய்து பாலைக் காய்ச்சிக்கொண்டு வந்தாள்.

கண்டிப்புடன் தந்தையையும் தம்பியையும் அழைத்தாள். விட்டால் பட்டினியாக படுத்துவிடுவார்கள். மூத்த பெண்ணாகிவிட்டதால் ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்து அவள்தானே கவனிக்க வேண்டும்.

ராகவன் மகளை பார்த்தார்.

அவள் அப்படியே மாயாவின் வார்ப்பாய் இருந்தாள். கண்களில் கண்ணீர் பெருகியது. பிள்ளைகளுக்கு காட்டாது துடைத்துக்கொண்டார்.

மூவரும் அமைதியாக சாப்பிட்டனர்.

“இப்ப கிச்சனை ஒதுங்க வைக்கிற வேலை எதுவும் செய்ய வேண்டாம்மா. காலையில் பார்த்துக்கலாம். நீயும் களைச்சிருப்பே. படுத்திடு.”

“சரிப்பா.”

மூவரும் இரவு வணக்கம் சொல்லிக்கொண்டு தங்களது அறைக்குள் அடைக்கலமாயினர்.

மூவருக்குமே உறக்கம் பிடிக்கவில்லை.

அவர்களது நினைவை மாயா ஆக்கிரமித்துக்கொண்டாள்.

ன்று அவர்கள் வீட்டு வாசல்படியைத் தாண்டும் வரையிலும் மாயா வெளியில் வரவில்லை.

இப்போதும் மனைவி மேல் ஒரு நல்லெண்ணம் இருக்கத்தான் செய்தது.

அதனாலேயே அவசரம் காட்டாமல் மெதுவாக சென்றான் ராகவன்.

அப்போது அவளது அறையில் ஏதோ விழுந்தாற் போன்று சத்தம் கேட்டது. அத்துடன் அவளது முனகல் சத்தமும். மனம் தாளாமல் வீட்டுக்குள் விரைந்தான்.

அவளது அறைக்கதவை திறக்க அங்கே மாயா கதவோரமாய் மயங்கிக் கிடந்தாள்.

அவளது நாசியில் இரத்தம் வந்திருந்தது.

அவளை அத்தகைய நிலைமையில் நினைத்துப் பார்த்திராத அவன் கலங்கிப் போனான். பிள்ளைகளின் நிலைமையும் அதுதான்.

“மாயா! மாயா!” என்று அவன் அவள் கன்னத்தை தட்டினான்.

“அம்மா! அம்மா!” என்று பிள்ளைகள் பரிதவித்தனர்.

உடனே ஆம்புலன்சுக்கு சொல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே மருத்துவர்கள் அவனை திட்டினர்.

“இத்தனை நாட்கள் கொண்டு வராமல் கடைசி நேரத்தில் கொண்டு வந்தால் நாங்கள் என்ன செய்வது?”

“என் மனைவிக்கு என்னாச்சு டாக்டர்?”

பரிதாபமாய் கேட்டான்.

“உங்களுக்கு விசயமே தெரியாதா? எப்படி தெரியாமல் இருக்கும்? இதன் அறிகுறிகள் தான் உங்களுக்கு காட்டிக் கொடுத்திருக்குமே?”

“எனக்கு ஒன்னுமே புரியலை டாக்டர். தயவு செய்து என் மனைவிக்கு என்னன்னு சொல்லுங்க?”

“உங்க மனைவிக்கு பிரைன் டியூமர். தாங்க முடியாத தலைவலி வந்திருக்குமே? அதுகூடவா தெரியாம இருந்தீங்க?”

“அவளைக் காப்பாத்த முடியாதா டாக்டர்?” குரல் நடுங்கக் கேட்டான்.

“ஆரம்ப கட்டத்தில் வந்திருந்தால் ஒரு வருசமோ இரண்டு வருசமோ நீட்டித்திருக்கலாம். இப்ப எல்லாம் கை மீறிப் போச்சு. எல்லாம் ஆண்டவன் விட்ட வழி.”

அவள் வேதனையில் துடிப்பதை அவனால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

ஆனால் அவள் வீட்டுக்குப் போக வேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாள்.

மருத்துவமனையில் வைத்திருந்தாலும் அவளது சாகும் வரை வலியைக் குறைக்க மருந்துகள் தரலாமே தவிர அவளைக் காப்பாற்ற முடியாது என்றுவிட்டனர்.

மனைவியின் கடைசி ஆசையாய் வீட்டுக்கு உயிருடன் இருக்கும்போதே சென்றுவிடவேண்டும் என்பதே இருக்க அவன் மனம் வலிக்க அதை நிறைவேற்றினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.