(Reading time: 32 - 63 minutes)

நான் என் பொண்ணோட தகப்பனாதான் வந்திருக்கேன். எனக்கு அதில்தான் சந்தோசம்.”

அவரது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவன் மட்டும் சென்றான்.

அப்போது

“அப்பா!” என்ற குதூகலக் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

அங்கே பாப் தலையோடு முடிகள் துள்ள சிறு குழந்தை போல் ஓடிவந்து ராகவனை அணைத்துக்கொண்டாள்.

தலை பின்னிக்கொள்ள முடியாமல் அன்று தந்தையோடு முடிதிருத்தும் இடத்திற்கு சென்று முடி வெட்டிக்கொண்ட ஆதிரை அல்ல இவள்.

தலை அலங்காரம் பற்றிய படிப்பைக் கூட தன் ஆர்வத்தினால் எடுத்துப் படித்திருக்கிறாள். அவளது நெருங்கிய வட்டத்தில் மணப்பெண் அலங்காரம் என்றால் அவளைத்தான் அழைப்பர்.

மெகந்தி போட்டுவிடுவதில் அவளுக்கு வரும் வருமானமே அவளுக்கும் சஞ்சய்க்கும் பாக்கெட் மணி.

அவளைப் பார்த்த அவனுக்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம்.

 ‘இவளா?’

அவனுக்கு சென்ற வாரம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரைப் பார்க்க சென்றிருந்த நேரத்தில் அந்த மையத்தின் நிர்வாக இயக்குனர் அவளைக் காண்பித்து பெருமையாக பேசியது நினைவுக்கு வந்தது.

“வெரி ஸ்மார்ட் கேர்ள் சார். இந்த வயதில் அழகுக்கு முக்கியத்துவம் தருவார்கள் பெண்கள். ஆனால் இவள் தனது நீண்ட தலைமுடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்வதற்காக தானம் செய்திருக்கிறாள்.”

அவர் சொல்லச் சொல்ல வியந்து நோக்கினான்.

ஒரு மாட்ட ஆட்சியராக வராமல் உறவினரைப் பார்க்கும் ஒரு சாதாரணமான மனிதனாக வந்திருந்ததால் எந்த ஆர்ப்பாட்டமும் அங்கே இல்லை. அதனால் அவள் அவனைக் கவனிக்கவில்லை.

“இந்தப் பொண்ணும் இவ தம்பியும் அடிக்கடி இங்கே வந்து இங்க உள்ளவங்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்வாங்க. என்னதான் நாங்க ட்ரீட்மென்ட் கொடுத்தாலும் வாழ வேண்டும் என்ற ஆசையும், நம்பிக்கையும் இருந்தால்தானே பலனளிக்கும். ஆனால் இது தெரியாமல் நிறைய பேர் பணத்தை மட்டும் கட்டிவிட்டு இங்கே தள்ளிவிட்டால் போதும் என்று சென்றுவிடுகிறார்கள்.”

விடுமுறை விட்டால் பொழுது போக்கிற்காக இந்த வயதில் பிள்ளைகள் என்னென்ன செய்வார்கள் என்று அவனுக்குத் தெரியும். அந்தப் பெண்ணும், அவளது தம்பியும் அவன் மனதிற்குள் பதிந்து போனார்கள். அவளது தம்பி யார் என்று தெரியவில்லை. அவனும் என்ன ஆச்சர்யம் வைத்திருக்கிறானோ?

விழா மேடையில் அமர்ந்திருந்தவன் ராகவன் குடும்பத்தையே நோட்டமிட்டான்.

அப்போது சஞ்சயும் அருகில் வர ராஜன்பாபுவுக்கு தான் நினைத்தது நடந்தேவிட்டதே என்று சிரிப்பு வந்தது.

சஞ்சய் இந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவனாக வந்தவன். அதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.

ஆனால் தேர்வு முடிவுகள் வந்த அன்று அவன் கொடுத்த பேட்டி.

எல்லாரும் அவன் டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆவான் என்று எதிர்பார்த்து கேள்விகள் கேட்க அவனோ மருந்துகள் பற்றிய ஆராய்ச்சிப் படிப்பு எடுத்துப் படிக்க ஆசை என்றுவிட்டான்.

எத்தனையோ நோய்களுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. தனது தாய்நாட்டிற்கு தனது பங்களிப்பாக ஏதாவது பயனுள்ளதாக கண்டுபிடிப்பேன் என்று உறுதியேற்றான்.

அன்றைய விழாவின் கதாநாயகி என்றே ஆதிரையை சொல்லலாம். தான் எடுத்துப் படித்த படிப்பில் அவள் தங்கப்பதக்கம் வாங்கியிருந்தாள். அத்துடன் கல்லூரியின் சிறந்த மாணவியாக பாராட்டப்பட்டாள்.

அவள் தனது தந்தையை மேடைக்கு அழைத்து அவருடைய கைகளில் தனது பரிசுப் பொருட்களை கொடுத்து காலில் விழுந்து வணங்க அவர் அவளைத் தூக்கி கண்ணீருடன் அணைத்துக்கொண்டார்.

அவரால் பேச முடியவில்லை.

விழா முடிந்ததும் அவர்களை அழைத்துக்கொண்டு செல்லும் பொறுப்பை தானே முன்வந்து ஏற்றுக்கொண்டான்.

இப்போது தனது சொந்தக் காரை வரவழைத்திருந்தான்.

அந்தக் குடும்பத்தைப் பார்க்க பார்க்க அவனுக்குள் ஒரு எண்ணம் வேரூன்றுவதை அவனால் தடுக்க முடியவில்லை.

“என்ன சார்? இன்னிக்கு எனக்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யமா கொடுத்திருக்கீங்க? சொல்லப்போனா உங்க குடும்ப உறுப்பினர்களை நான் வெவ்வேறு சமயங்களில் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் எல்லாரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆமா உங்க மனைவி எப்படி?”

அவன் கேட்டதுதான் தாமதம் கலகலப்பாக பேசிக்கொண்டு வந்தவர்கள் திடீரென்று அமைதியானார்கள்.

ஆதிரை தனது கையில் இருந்த தழும்பைப் பார்த்தாள். என்னவோ இன்று நடந்தது போல் இருந்தது.

சூழ்நிலையின் போக்கை மாற்றிவிட்ட தனது தவறை உணர்ந்து வருந்தினான் ராஜன்பாபு.

“சாரி! சார். நான் தேவையில்லாமல் அவங்களை நினைவுப்படுத்திவிட்டேன்.”

“மறந்தால்தானே நினைவு படுத்துவதற்கு” மூவரும் கோரசாக சொன்னார்கள்.

“ஆமா சார். விழா முடிந்த உடன் நீங்க எங்கேயோ போகனும்னு சொன்னீங்களே. எங்கே போகனும் சார். நான் அங்கேயே டிராப் பண்றேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.