(Reading time: 36 - 71 minutes)

“ ம்ம்ம் தெரியலையே ராகவா. உனக்கு நிறைய அத்தை பொண்ணுங்க இருக்குற மாதிரி, எனக்கும் நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க .. நான் என்ன பண்ணட்டும்?” என்று அப்பாவியாய் கேட்டவளை முறைத்தான் ராகவன்.

“அந்த நெடுஞ்செழியன் தான்! பார்வையாலேயே நாதஸ்வரம் வாசிக்கிறான்.. என்னடீ நடக்குது ?” . அவன் கேள்வியில் முகம் சுளித்தாள் ஸ்வாரகா , என்னத்தான்  நெடுஞ்செழியன் தன்னை நேசித்தாலும்கூட, அவன் எப்போதும் எல்லை மீறியதில்லை. ஸ்வாரகாவின் எண்ணத்திற்கு மதிப்பளித்து அவன் காத்திருந்தான். அவன் எப்போதும் யாமினியுடன் இருப்பதினால், யாமினியைப் போலவே அவனும் ஸ்வாரகாவின் கண்களுக்கு நண்பனாக மட்டும்தான் தெரிந்தான். ஏனோ அவன் மீது அவளுக்கு காதல் வரவே இல்லை! காதல் என்பதை அவள் உணர்ந்தது ராகவனிடம் மட்டும்தான். ஆனால், இன்றோ பொறாமையினால் ஏற்பட்ட கோபம் அவளது காதலை மறைத்தது.

“வாய்க்கு வந்த மாதிரி பேசாதே ராகவா! எல்லாரும் உன் அத்தை பொண்ணு மாதிரி இல்லை. செழியன் என்னை லவ் பண்ணினான்தான் ..ஆனால் கண்ணியம் தவறாதவன் !”என்று கூறிவிட்டிருந்தாள் ஸ்வாரகா.

“வாட் அவன் உன்னை லவ் பண்ணானா?”

“ம்ம் ஆமா!”

“ நீ இதை என்கிட்ட சொல்லவே இல்லையே?”

“மறந்துட்டேன் ராகவா!”

“மறந்துட்டியா? மறக்குற விஷயமா இது?”

“ ஹேய் எதுக்கு நீ இப்போ இப்படி கத்துற? அவன்தான் என்னை காதலிச்சான் ! நானா அவனை காதலிச்சேன்?”

“எது எப்படியோ , நான் உன் புருஷன்! என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லுணும்னு தோணலயா உனக்கு?”

“நமக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷமா ஆனது ? ஜஸ்ட் ஒரு மாசம் தானே ராகவா? இன்னும் நாம பேசுறதுக்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கு..”

“ஓஹோ அப்போ பத்து வருஷம் கழிச்சு சொல்லிக்கலாம்ன்னு நினைச்சியா ஸ்வாரா?”

“ப்ச்ச் .. அப்படியில்லை ராகவா! ஆரம்பத்துலேயே உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன் .. ஆனா உன்கிட்ட பேசும்போது நான் மறந்தே போயிட்டேன்”. மனைவியின் பதிலில் அலட்சியம் இருப்பது போல தோன்றியது அவனுக்கு. “ஒருதலைக் காதல்.. நெடுஞ்செழியன்..” இவ்விரண்டு வார்த்தைகளே அவனது செவிகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. சற்றுமுன்பு ஸ்வாரகா செழியனுடன் பேசி சிரித்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தான் ராகவன்.

“ அவனைத்தான் வேணாம்னு சொல்லிட்டீயே, அப்பறம் அவன்மேல உனக்கென்ன அக்கறை ? சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்த? அதுவும் கல்யாணம்தான் தலைவலின்னு அவன்கிட்ட சொன்னீயே!” என்று அவன் குத்திக் காட்டவும் தலையை இரு கைகளால் தாங்கி பிடித்து கொண்டாள் ஸ்வாரகா. இதுவரை யாரும் அவளை சந்தேகிக்கும் நிலையில் நிறுத்தி கேள்வி கேட்டதில்லை. அவளும் கேள்வி கேட்க விட்டதில்லை. ராகவன் அவனது அத்தைபெண்ணிடம் பேசியதை மனதில் வைத்துக் கொண்டுத்தான் அவளே செழியனிடம் சென்று பேசினாள். ஆனால் இதனால் தனது கணவன் இப்படி கேள்விகள் கேட்பான் என்று அவள் எதிர்ப்பார்க்கவில்லை.

“ வாயைத் திறந்து பேசு. உன்னை விரும்பினவன் கூட உனக்கு என்னடீ பேச்சு?” ரௌத்திரத்தின் உச்சத்தில் இருந்தான் ராகவன். அவனது அன்பு மனைவியை இன்னொருவன் நேசித்தான் என்ற செய்தியே ராகவனுக்கு உவப்பாக இருந்தது. அதை ஸ்வாரகா தன்னிடம் கூறவில்லையே என்ற ஆதங்கம் அவனை இன்னும் கோபப்படுத்தியது!

ஸ்வாரகாவும் கோபத்தில் தான் இருந்தாள். அவன் மட்டும் தன்னெதிரிலேயே ரட்சனாவிடம் பேசியது சரியா? அதுவும் அவள் ராகவனுக்கு முன்னால் நிச்சயிக்கபட்டவள்! அதையே ஸ்வாரகாவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! இதில் தன்னையும் சந்தேகப்படுகிறானா? என்று எண்ணிடும்போது அவளின் இய்லாமை கோபமாய் மாறியது.

“ வெளில போ ராகவா!”

“ஏய்!”

“எனக்கு ரொம்ப கோபம் வருது.. தயவு செஞ்சு வெளில போயிடு … என் கண்ணு முன்னாடி நிக்காதே.. இல்லன்னா நான் எங்கயாச்சும் போயிடுவேன்..ஏதாச்சும் பண்ணிடுவேன்!” என்றாள் ஸ்வாரகா.. அவளை ராகவன் முறைத்துகொண்டிருக்க அவனது கைப்பேசி சிணுங்கியது.

“ சொல்லு ரட்சனா!” என்றவன் ஸ்வாரகாவை முறைத்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறினான். “இதோ வரேன்” என்று ஃபோனில் சொல்லிக் கொண்டு காரை ஸ்டார்ட் செய்தவனை வெறித்தபடி அப்படியே நின்றாள் ஸ்வாரகா.

ன்றிரவு, மணி 11!

முதலிரவு அறையில் நாணத்துடன் நுழைந்தாள் யாமினி. பல மணி நேரங்களாய் கணவனிடம் பேசுவதற்கு காத்திருந்தாள் அவள். அவளை வரவேற்கும்படி வசீகரமாய் புன்னகைத்தான் யாழமுதன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.