(Reading time: 36 - 71 minutes)

அந்த மையல் ஸ்வாரகாவின் மீது வன்மத்தை ஏற்படுத்த, கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் அவளை சீண்டிட எண்ணிடுவாள் ரட்சனா. இதோ இன்று நிகழும் விதியின் விளையாட்டு அவளுக்கு சாதகமாகவே அமைந்தது.

தூரத்திலிருந்தே அவர்கள் வருவதை கண்டுகொண்ட ரட்சனா, எதிர்பாராமல் மோதுவது போல ராகவனின் மீது மோதி நின்றாள்.

“ மாமா”

“ஹேய் ரட்சு.. எப்படி இருக்க? நீ எங்க இங்க ?”

“ மாப்பிள்ளை என்கூட தான் வேலை பார்க்கிறார். நான் நல்லா இருக்கேன் மாமா.. நீங்கத்தான் வரவர ரொம்ப ஹேண்ட்சம் ஆகிட்டீங்க” என்று கூறி கண்ணடித்தாள் ரட்சனா. அவளின் பேச்சு சுத்தமாய் பிடிக்காமல் முகம் சுளித்தாள் ஸ்வாரகா. ரட்சனாவோ அவள் பக்கம் மறந்தும் திரும்பவில்லை!

“ ஹீ ஹீ .. நாம எப்பவுமே அழகுதானே!” என்றபடி கேசத்தை ஸ்டைலாய் கோதிய கணவனை கொலைவெறியுடன் பார்த்தாள் ஸ்வாரகா.

 “ கண்டிப்பா மாமா.. ஆனா ஒன்னு மட்டும் புரியல மாமா!  அது என்னவோ எப்போ என்னை பார்த்தாலும் இப்படி கைகொடுத்து தூக்கி விடுறதே உங்களுக்கு வேலையாய் போச்சு..”என்று ரட்சனா கூறவும், தான் செய்த உதவிகளைத்தான் “கைகொடுத்து” என்று அவள் குறிப்பிடுகிறாள் என்றெண்ணி,

“ என் அத்தைமகளுக்கு நான் ஹெல்ப் பண்ண எப்பவும் ரெடிதான்” என்றான் ராகவன்.

“ அப்பறம் ஏன் மாமா என்கூட ஃபோன்ல பேசுறதே இல்லை?  நம்ம அப்பா அம்மா சண்டை போட்டால் அது அவங்களோடு போகட்டும் .. நாம எப்போதும் போல பேசலாம் மாமா.. “ என்று குழைந்தாள் ரட்சனா. இதற்கு ராகவன் பதில் சொல்லி, தான் பொது இடத்தில் காளி அவதாரம் எடுக்க வேண்டாமே என்று நினைத்த ஸ்வாரகா,

“ நேரமாகுதுப்பா.. யாமினி கூப்பிடுறா வா!” என்றவாறு ராகவனின் கையைப் பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்து வந்தாள்.

“ஹேய், கைய விடுடீ.. வலிக்கிது! ஏன்டீ இப்படி முறுக்குற? அப்படி என்ன அவசரம்?” என்று எரிச்சலுடன் கத்தினான் ராகவன். கோபத்தில் விடுவிடுவென அவனைக் கைபிடித்து இழுத்தவளின் கூரிய நகங்கள் அவனது கரத்தை பதம் பார்த்திருந்தன. அப்போதும் பிடியை விடாமல் அவனைப் பார்த்து முறைத்தாள் ஸ்வாரகா.

“ ஏன் கையை விடனும்? உன் அத்தைமக ரத்தினத்துக்கிட்ட இன்னும் ஏதாச்சும் பேசனுமா?”

“ பப்லிக் ப்லேஸ்ல ஏன் இப்படி பிஹேவ் பண்ணுற? யாராச்சும் பார்த்தால் என்ன நினைப்பாங்க?” என அவள் விடுவித்த கையை வலியுடன் தேய்த்துக் கொண்டே வினவினான் ராகவன். அவனது கேள்வியால் ஸ்வாரகாவின் கோபம் மட்டுப்படாமல் அதிகமானது.

“அவளுக்கு ஃபர்ஸ்ட் இன்னொருத்தவங்க ஹஸ்பண்ட்கிட்ட பேசனும்ன்னு சொல்லி கொடு ராகவா.. என்னை குறை சொல்லாத!”

“ அவ என் சொந்தம்.. அவ பேசும்போது நானும் பேசித்தான் ஆகணும். என் அத்தை பொண்ணு என்கிட்ட பேசுறதுதான் உனக்கு பிரச்சனைன்னா நீ வாழ்க்கை முழுக்க  புலம்பிட்டே இருக்க வேண்டியதுதான்” என்று நக்கலாய் கூறினான் ராகவன். உண்மைத்தான்! ராகவனுக்கு தந்தையின் உறவினர்கள், அன்னையின் உறவினர்கள் என இரு பக்கமும் அத்தை மகள்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை மனதில் வைத்துக்கொண்டு தான் அவன் பெருமை பீற்றிக் கொண்டான்.

“ ஓகே ராகவா.. யாமினியை விஷ் பண்ணிட்டு வீட்டுக்கு போகலாம்..வா” தன்னால் இயன்ற அளவு கோபத்தை மறைத்துக் கொண்டு  கூறினாள் ஸ்வாரகா. அவளுக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால், ஹனுமான் சஞ்சீவினி மலையை தூக்கிய மாதிரி ராகவனை வீட்டிற்கு தூக்கி கொண்டு போய்  முதலாம் குடும்ப போரை தொடக்கி இருந்திருப்பாள்!

“சரி வா” என்ற ராகவனும் அதன்பின் வளவளக்காமல் அவளைப் பின்தொடர்ந்தான். யாமினி- யாழமுதன் தம்பதியரை ராகவன்- ஸ்வாரகா இருவரும் வாழ்த்திடும் காட்சியை கண்கூடாகப் பார்த்தான் நெடுஞ்செழியன். ஸ்வாரகாவின் திருமணத்தில் ஒரு ஓரமாய் நின்று அவளைப் பார்த்தவன், அதன்பின் அவளை சந்திக்கவேயில்லை.!

“பேசவா? அவள் பேசுவாளா? அவள் கணவன் ஏதாச்சும் சொல்லுவானோ?” என்று செழியன் தனக்குள் விவாதிக்க, அவனது பார்வையை கண்டுக்கொண்ட ராகவன் புருவம் உயர்த்தினான் . யாரும் கவனிக்காத வண்ணம், ஸ்வாரகாவிடம் “அந்த செழியன் ஏன் உன்னையே பார்க்கிறான்?” என்று கேட்டான் அவன்.

தூக்கி வாரி போட்டது ஸ்வாரகாவிற்கு! இதை அவள் எப்படி மறந்தாள் ? செழியன் தன்னை ஒருதலையாய் காதலித்த விஷயத்தை திருமணத்திற்கு முன்னரே ராகவனிடம் சொல்ல நினைத்திருந்தாள் அவள். ஆனால், ராகவனுடன் தொடங்கும் ஒவ்வொரு உரையாடலுமே சந்தோஷமாய் எதிர்ப்பாராத இன்ப அதிர்ச்சிகளுடன் பயணிக்க, அதைப் பற்றி சொல்லவே மறந்துவிட்டிருந்தாள் அவள். சற்றுமுன் ராகவனிடம் செழியனைப் பற்றி கூறிடும்போது கூட அவன் தன்னை நேசித்தவன் என்பதை அவள் மறந்து தான் போயிருந்தாள்.

கணவனின் கேள்வியில் வெகுண்டவன், “ இந்த செழியன் இன்னும் மாறவே இல்லையா?” என்று நினைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.