(Reading time: 36 - 71 minutes)

அவ்வுலகத்தில் இருந்த மற்ற உணர்வுகளும் இரு குழுவாக பிரிவதை கண்ட உணர்வுகளின் தலைவர், உடனே ஒரு தீர்ப்பைச் சொன்னது.

“ அன்பு, பொறாமை நீங்கள் இருவரும் நம் உலகின் நியதியை இன்று மீறி விட்டீர்கள்.உங்களால் மற்ற உணர்வுகளும் ஆவேசமாவது நமக்கு உசிதமான செயல் அல்ல. அதே நேரத்தில் இந்த கலகத்தை உடனே சரி செய்வதும் என் கடமை. அதனால் முடிவொன்று மேற்கொள்கிறேன்”. அந்த தலைவரின் குரல் அனைவரையும் கட்டிப் போட்டது. அந்த முடிவு யாதென இரு உணர்வுகளும் ஆவலுடன் காத்திருந்தன.

“ அன்பு மற்றும் பொறாமை ஆகிய உணர்வாகிய உங்கள் இருவரையும் நம் மானிடர்களின் உலகத்திற்குள் முழுமையாய் பிரவேசிக்க அனுமதியளிக்கிறேன். இத்தனை யுகங்களில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை. உணர்வுகளின் தேசமாகிய நாம் எப்போதும் விதிக்கு கட்டுப்பட்டு நமது குறைந்தபட்ச தாக்கத்தை மட்டுமே மானிடர்களின்மீது செலுத்தி அவர்களை இயக்கி வந்தோம். ஆனால்,இந்த சர்ச்சையினால் நான் இவ்வுலகின் நியதியை மீறி உங்களை அனுப்பி வைக்கிறேன்.ஆனால் இது சில கட்டுப்பாடுகளுக்கு உடன்பட்டே நடக்க வேண்டும்”

“அதென்ன கட்டுப்பாடு?” இரு உணர்வுகளும் கேட்டன.

“ சோதனைக்காக நீங்கள் ஆக்ரமிக்க வேண்டிய மானிடரை யாமே தேர்வு செய்து தருவோம். அவர்களின் மனதை நீங்கள் உங்களது முழு சக்தியுடன் ஆக்ரமிக்க கூடாது! இதன் முடிவு எதுவாகினும், பூமியில் இந்த நாள் முடியும்போது நீங்கள் இருவரும் இந்த சோதனையை முடித்து நம் உலகத்திற்கு திரும்பிட வேண்டும். இதைவிட முக்கியமான எச்சரிக்கை ஒன்று உள்ளது !”

“..”

“நீங்கள் நடத்தும் பரிசோதனை அம்மானிடர்களின் விதிக்கு மாறான செயலாகும் என்பதினால்,இச்சோதனையின் விளைவினால் அம்மானிடர்கள் பாதிக்கப்பட கூடாது. இச்சோதனையின் இறுதியில் அவர்களின் ஜீவனுக்கு ஆபத்து நேர்ந்தால் உங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்”

“ அப்படி எந்த தீங்கும் நேராமல் தடுக்க முயற்சிப்போம் தலைவரே. மேலும் நாங்கள் விரைவில் நமது உலகுக்கு திரும்புவோம்!”என்றது அன்பு.

“ அது கடினமான காரியம்!” என்று பீடிகையாய் ஒலித்தது அந்த தலைவரின் குரல். குழப்பத்துடன் இரு உணர்வுகளும் பார்த்திட,

“ ஒருமுறை அம்மானிடர்களின் மனதில் நீங்கள் உங்களது சக்தியை பயன்படுத்திவிட்டால், அவர்கள் நித்திரையில் ஆழ்ந்திடும்வரை நீங்கள் அவர்களை பிரிந்து வெளிவந்திட முடியாது. அவர்களின் நித்திரை தான் உங்களுக்கு நிரந்தர விடுதலை! அப்படி பூமியின், ஒரு நாள் கணக்கு முடிந்து நள்ளிரவு மணி பன்னிரண்டை தாண்டி இரு உணர்வுகளும் அவர்களை விட்டு வெளிவரவில்லையெனில் உங்களுக்கு நமது உலகிலும் சரி,மானிட உலகிலும் சரி நிரந்தர இடம் என்பது கிட்டாது.நம் உலகில் பிரவேசிக்கும் வாய்ப்பை நீங்கள் இழந்து விடுவீர்கள்” என்று எச்சரித்தது. நிபந்தனைகளை அரை மனதோடு அன்பும், முழுமனதோடு பொறாமையும் ஏற்றுக்கொள்ள, அவர்களின் பயணம் பூமியை நோக்கி ஆரம்பித்தது.

“ராகவா ..ராகவா..ராகவா” அலறிக் கொண்டே அந்த கதவை தட்டினாள் ஸ்வாரகா. ராகவனின் அன்பு மனைவி.

“அடியே ஏன்டீ கட்டின பொண்டாட்டி மாதிரி இப்படி அதட்டுற?” அவர்கள் பெட்ரூமில் இருந்த உடைமாற்றும் அறையில் வேஷ்டியுடன் போராடிக்கொண்டே நமட்டு சிரிப்புடன் கேட்டான் ராகவன். அவனது கேள்வியினால் ஸ்வாரகாவின் முகத்தில் புன்னகை பூத்தது.

“ டேய்..நான் தான் டா உன் பொண்டாட்டி”

“அது ஊரு உலகத்துக்கு மேடம்”

“ஓஹோ அப்போ உனக்கு நான் யாராம்?” ராகமாய் இழுத்தபடி கேட்டாள் ஸ்வாரகா. இது வழக்கமாய் அவர்கள் பேசிக்கொள்ளும் வசனம்தான் என்பதினால் கணவனின் பதிலை நன்கு அறிந்து வைத்திருந்தாள் அவள்.

“ ஹா ஹா, ஸ்வாரா செல்லம்,இந்த ஊரு உலகத்துக்குத்தான் நாம கணவன் மனைவி..ஆனால் எனக்கு நீ காதலிதான்” என்றான் அவன். 

“ போதும்டா காதல் மன்னா..இப்படியே பேசிட்டு இருந்தால் என் ப்ரண்டு கல்யாணமே முடிஞ்சிரும்.. சீக்கிரம் வெளில வா”

“அடியே உனக்காக அவ்வளவு பெரிய ரூமை கொடுத்துட்டு, நான் இத்தணூண்டு ரூம்ல தானே இருக்கேன்? இது பொறுக்கலையா உனக்கு? அப்படியே ரெடியாகு போ” என்றான். அவனைப் பற்றி அறியாதவளா அவள்?

“டேய் உன் திருட்டுத்தனம் எனக்கு தெரியாதா? இரு உன்னை இதே ரூமில் பூட்டிட்டு அதற்கு பிறகு நான் சேலை கட்டிக்கிறேன்” என்றாள் ஸ்வாரகா.

“அடிமடியில கை வைக்கிறாளே ராகவா..சீக்கிரமா  சரண்டர் ஆகிடுடா”என்று சொன்னபடி கதவை திறந்துக் கொண்டு வந்தான் ராகவன். தன் முன்னே கண்சிமிட்டி வசீகரமாய் சிரித்த கணவனை செல்லமாய் முறைத்துவிட்டு தன் தோழி யாமினியின் கல்யாணத்திற்கு தயாராகினாள் ஸ்வாரகா. ராகவனும் அதற்குமேல் அவளை அதிகம் படுத்தாமல் திருமணத்திற்கு தயராகினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.