(Reading time: 36 - 71 minutes)

மறுநொடியே, “ மவனே உன் அத்தை பொண்ணு கூட சேர்ந்து என்னையே வெறுப்பேத்துனீயே! இப்போ என்ன பண்ணுறேன் பாரு!” என்று ராகவனைப் பார்த்து மனதிற்குள் கூறிக் கொண்டாள்.

“ அப்படியா? செழியன் என்னை பார்த்தாரா? வா வா அவர்கிட்ட பேசணும்”என்று கூறியபடி ராகவனுடன் செழியனை நோக்கிவந்தாள்.

“ ஹாய் செழியன்.. எப்படி இருக்கீங்க?”

“ நான் நல்லா இருக்கேன் ஸ்வாரகா.. நீங்க?”

“ நானும் சூப்பர்ப்பா. கல்யாணம் ஆகிடுச்சேன்னு ஒரே ஒரு தலைவலித்தான் .. மற்றபடி ஐ எம் ஃபைன்”என்று அவள் குறும்புடன் கண் சிமிட்ட, இப்போது ராகவனுக்குள் பொறாமையின் ஆட்சி தொடங்கியது. “ ப்ரண்டோட அத்தைமகன்கிட்ட இவளுக்கு என்ன பேச்சு? அதுவும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தலைவலின்னு இவன்கிட்ட சொல்லுறாளே!” என்று நினைத்தபடி மனைவியை முறைத்தான்.

ராகவனின் முறைப்பைப் பார்த்த ஸ்வாரகாவிற்கு ஆனந்தமாய் இருந்தது. “ வா டா வா! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கும் இப்படித்தானே இருந்துச்சு! இதுக்கு பேருதான் சுட்ட தோசையை திருப்பி போட்டு சுடுறது!” என்று மனதில் நினைத்தவள், செழியனிடம்,

“இந்த ஒரு கல்யாண சாப்பாட்டை போட்டு எங்க வாயை அடைக்காதீங்க செழியன். யூ ஆர் சோ ஸ்மார்ட் அண்ட் டேலண்டட்.. இந்நேரம் உங்க ஏஞ்சல் உங்களுக்காக வழிமீது விழி வைத்து காத்துட்டு இருக்கலாம்.. சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க. அதுதான் எல்லாருக்கும் சந்தோஷத்தை தரும். குறிப்பாக எனக்கு!” என்றாள் ஸ்வாரகா. என்னத்தான் தன் கணவனை சின்னதாய் பழிக்குப் பழி வாங்கிட அவள் அப்படி சொன்னாலும், தன் மனதில் இருப்பதைத் தான் கூறினாள் ஸ்வாரகா. தன்னை ஒரு தலையாய் நேசித்தவன், திருமணம் செய்து கொள்ளாமல் தனித்திருப்பதும், தவித்திருப்பதும் அவளுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. கிடைத்த வாய்ப்பில் தன் எண்ணத்தை கூறியவள், ராகவனின் காதிலும், மூக்கிலுமிருந்து புகை வெளிவரும்வரை செழியனுடன் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். தன்னை கடுப்பாக்கிய மனைவியை கடுப்பேற்ற எண்ணி, அங்கிருந்து கிளம்பும் கடைசி நொடியில் தனது அத்தைமகளை தேடி கண்டுபிடித்து அவளின் ஃபோன் நம்பரைக் வாங்கினான் ராகவன். கூடவே,” எப்போ எந்த ஹெல்ப் வேணும்னாலும் எனக்கு ஃபோன் பண்ணு” என்று கூறினான். அவர்கள் வீட்டில் பிரளயம் வெடிக்கும் முன், நாம யாமினி யாழமுதனைப் பார்ப்போம்.

திருமணத்திற்கு வந்த விருந்தினர் கூட்டம் கொஞ்சம் குறைந்ததும் மேடையில் ஏறினான் நெடுஞ்செழியன். யாமினியின் விழிகளில் பிரதிபலித்த நிம்மதியும் சந்தோஷமும் அவனுக்கு பெரும் மனநிறைவைத் தந்தது. தம்பதியர்களின் அருகில் வந்தவன் யாமினியின் தலையை பாசமாய் வருடித் தந்துவிட்டு, யாழமுதனைக் கட்டி கொண்டான்.

“ ரெண்டு பேருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றவன் யாழமுதனின் கரங்களைப் பிடித்துக் கொண்டான்.

“ யாமினியை எனக்கு சின்ன வயசில் இருந்து தெரியும் சார். அதனால, ஒரே ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லணும்னு தோணுது! யாமினி ரொம்ப சாது கேரக்டர். ஏதாச்சும் மனசுக்கு பிடிக்கலன்னா கூட, அதை வாய்விட்டு சொல்லாமல் அவளே கவலைப்படுவாள். அனிச்சமலர் எப்படி பலமான காற்று வீசினால் உடனே வாடிடுமோ அந்த மாதிரி லேசாய் அதட்டலாய் பேசினா கூட அவ கண்ணிலிருந்து தண்ணி வந்திரும். சோ அவளை நீங்க கண்கலங்காமல் வெச்சு காப்பாத்துறது கொஞ்சம் கஷ்டம்!” என்று குறும்பாய் கண்ணடித்தவன்,

“ இருந்தாலும் , எங்களை விட அவளை நீங்க நல்லா பார்த்துப்பீங்கன்னு நம்புறேன்!” என்றான். நெடுஞ்செழியனின் அக்கறையான வார்த்தைகளும் நேர்கொண்ட பார்வையுமே அவனது கண்ணியத்தை பறைசாற்றியன. இதற்குமேலும் அமைதியாக இருப்பது தவறு என்று உணர்ந்தான் யாழமுதன்.

“ போதும் தம்பி! என்ன பார்க்கிற? உறவுமுறைப்படி பார்த்தால் நான் உனக்கு அண்ணன்மாதிரி தானே ? அதுமட்டும் இல்லை, அதென்ன கல்யாணம் முடிஞ்சதும் என் கடமை முடிஞ்சதுன்னு மாதிரி பேசுற? கல்யாணத்துக்கு முன்னாடி மினி உனக்கு எவ்வளவு முக்கியமோ, கல்யாணத்துக்கு அப்பறமும் அப்படித்தான்!” என்று யாழமுதன் கூறவும், மற்ற இருவரும் வாயடைத்து போயினர்.

“என் தப்புத்தான்! நான் வீட்டில் ஒரே பையன். பொதுவா எது எனதோ அது எனக்கு மட்டும்தான்னு சின்ன வயசுல இருந்தே வளர்ந்துட்டேன். அதனால்தான் யாமினியின் அன்பும் எனக்கு மட்டும்தான்னு நினைச்சுட்டேன். அதனால உங்க ரெண்டு பேரையும் கூட ரொம்ப மெரட்டிட்டேன்னு தெரியுது.. என்னை ரெண்டு பேருமே மன்னிச்சிடுங்க.. அண்ட் தம்பி , சும்மா வார்த்தைக்காக சொல்லல. நிஜமாகவே நீ என் தம்பிதான். கல்யாணம் பண்ணி வெச்சுட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு ப்ளான் போடாதே!” யார் மனமும் புண்படாதபடி அதே நேரம் மனதில் தோன்றியதை அழகாய் வார்த்தைகளாய் கோர்த்திருந்தான் யாழமுதன். அன்பின் வெளிப்பாடு அம்மூவரின் முகத்தில் சந்தோஷமாய் பிரதிபலித்தது!

வீட்டிற்கு சென்ற ராகவன் முதல் கேள்வியாய் “ யார் அவன்?”என்று கேட்டான். அவன் யாரைப் பற்றி பேசுகிறான் என்று தெரிந்தும் கூட தெரியாதவள் போல நடித்தாள் ஸ்வாரகா.

“ யாரை கேட்குற?”

“உனக்கு தெரியாதா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.