(Reading time: 36 - 71 minutes)

ஸ்வாரகா- ராகவன் பெற்றோரால் இணைக்கப்பட்ட ஜோடிகள். திருமணத்திற்கு முன் இருவருக்குமே அவரவர் வாழ்க்கையில் காதல் என்ற ஒரு அத்தியாயம் எழுதப்படாமல் இருந்தது. அதனாலேயே திருமண நிச்சயத்திற்கு பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கி, இன்னும் காதலித்து கொண்டே இருக்கிறார்கள். ராகவன், கலகலப்பானவன்! பழகுவதற்கு நல்ல நண்பன். அதனால்தான் ஸ்வாரகாவின் மனதில் உடனே இடம் பிடித்திருந்தான் அவன்.

ஸ்வாரா! அவளின் நண்பர்களின் பெயரை பட்டியிலிடத் தொடங்கினால், இன்றொரு நாள்போதுமா? என்று பாடலே பாடலாம். தனக்கென அவள் உருவாக்கி வைத்த உலகில் உவகையுடன் பிரவேசித்தான் ராகவன்.

அவனுக்கு அவளை மிகவும் பிடித்து போனது! எதையும் முகத்திற்கு நேராய் பேசிவிடும் குணம், அனைவருமே நல்லவர்கள்தான் என்று நம்பும் வெகுளித்தனம், நட்புக்காக உயிரையும் கொடுக்கும் சுபாவமென, அனைத்தையுமே அவன் ரசித்து விரும்பினான். திருமணத்திற்குப் பின் மனைவியின் நண்பர்களுக்கு தடா போடும் கணவன்மார்கள் மத்தியில், ஒரு நண்பனைப் போல மாறி தனது நட்பை மதிக்கும் கணவன் கிடைத்ததில் ஸ்வாரகாவிற்கும் மட்டற்ற மகிழ்ச்சி. அவன் தன்மீது வைத்த நம்பிக்கையை இரட்டிப்பாக்கி அன்புடன் சேர்த்து அவனுக்கு வழங்கினாள் அவள்.

காரில்!

“ ஸ்வாரா”

“ சொல்லுப்பா”

“ யாமினி உனக்கு பெஸ்ட் ப்ரண்ட் தானே?”

“ஆமா..ஏன்?”

“ அப்போ நீ நேற்றே அவளுடைய ரிசப்ஷனுக்கு போயிருக்கணும்ல?ஏன் போகல? ஏதாவது பிரச்சனையா?”என்று கேட்டான் ராகவன். தனது ஒவ்வொரு செயலையும் நுணுக்கமாக கவனிக்கும் கணவனை மனதிற்குள் மெச்சியது போதாதென்று வாய்விட்டே பாராட்டினாள் அவள்.

“ செம்ம ஷார்ப்பு ராகவா நீ ! பிரச்சனைத்தான்..பட் நீ நினைக்கிற மாதிரி எனக்கும் அவளுக்கும் இல்லை..அவளுக்கும் அவளுடைய வுட்பீக்கும்!”

“வாட்?” அதிர்ச்சியாய் பார்த்தான் ராகவன்.

“என்னம்மா, இன்னைக்கு கல்யாணத்தை வெச்சுக்கிட்டு இப்படி குண்டை தூக்கி போடுற?”

“ ஹலோ புருஷரே பிரச்சனை அவளுக்குத்தானே..நீங்க ஏன் ஷாக் ஆகுறிங்க? எல்லாம் கல்யாணம் முடிஞ்சா சரி ஆகிடும்..”

“ஹும்ம்ம் நீயே ரிலாக்ஸா இருக்குறன்னா கண்டிப்பா சின்ன விஷயமாகத்தான் இருக்கும்! என்னவாம்?”

“ பிரச்சனையே அவளுடைய அத்தை பையன் நெடுஞ்செழியன் தான்!”

“ஓஹோ காதல் மேட்டரா?”

“ ச்ச ச்ச.. செழியனும் யாமினியும் சின்ன வயசுல இருந்து ஒரே வீட்டில்தான் வளர்ந்தாங்க.செழியனோட அம்மா அப்பா அவன் சின்ன பையனாக இருந்தப்போவே இறந்து போயிட்டாங்க”

“அடப்பாவமே”

“ம்ம்..அதற்கு அப்பறம் அவனும் யாமினியும் சேர்ந்தே வளர்ந்தாங்க. உறவுமுறை இப்படி இருந்தாலும் அவங்க நல்ல ப்ரண்ட்ஸா தான் இருந்தாங்க.இது அவங்க குடும்பத்துக்கு தெரியும். பட் மாப்பிள்ளைக்கு தெரியலை போல!”

“சுத்தம்!அப்பறம் என்னாச்சு?”

“ நேத்துதான் செழியனும், யாமினியும் பேசுற பழகுற விதத்தை மாப்பிள்ளை கவனிச்சாரு போல. இந்த BANGALORE DAYSபடம் வந்தாலும் வந்தாச்சு பசங்க பொண்ணுங்க எல்லாம் ப்ரண்ட்ஸ்ன்னு சொல்லி சொல்லி ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்குறாங்கன்னு மாப்பிள்ளை ஜாடை பேசி இருக்கார்.”

“ இதை யாமினி ஆட்சேபிச்சு பேசலையா?”

“அவளா?அப்படியே பேசிட்டாலும்! சின்ன விஷயத்துக்காக வாதிட்டு மனக்கசப்பை வளர்க்க வேணாம்ன்னு அவளுக்கு தோணுதாம் ..!”

“ அதுக்காக புருஷன் சந்தேகப்பட்டா அதை சரி பண்ணுறதுக்காக கொஞ்சம் வாயை திறக்கலாம்ல? “ என்று ஆட்சேபிக்கும் குரலில் ராகவன் கூற அதுவே சரி என்பதுபோல தலையாட்டினாள் ஸ்வாரகா.

“ அதேதான் நானும் நினைச்சேன் ராகவா.. உனக்குத்தான் என்னைப்பத்தி தெரியும்ல? எதுவாக இருந்தாலும் டக்குனு சொல்லிடுவேன்! என்னால அவ கல்யாணம் நிற்க வேணாம் என்ற நல்லெண்ணத்துல தான் நேத்தே போகாமல், இப்போ முகுர்த்த நேரத்துல கிளம்புறேன்” என்றாள் அவள் . என்னத்தான் மனைவி இலகுவாய் சொல்வது போல இருந்தாலும் அவள் குரலில் ஒரு அழுத்தம் இருப்பதை ராகவனால் உணர முடிந்தது. சட்டென அவனது குறும்புத்தனம் தலைத் தூக்கிட,

“ ஒருவேளை உன் யாமினியோட வுட்பீ மாதிரி, நானும் உன்னை சந்தேகப்பட்டால் நீ என்ன பண்ணுவ ஜிலேபி?” என்று கேட்டான் ராகவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.