(Reading time: 22 - 43 minutes)

அதற்கு பதில் சொல்ல திரும்பிய வேளையில் வீட்டில் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும். ஒன்றும் சொல்லாமல் விடுத்தாள்.

அங்கே அவள் அப்பா , அம்மா இருவரும் இருக்கவும், இருவரிடமும் புன்னகையுடன் ஹலோ சொல்லவும், அவர்கள் பதிலுக்கு “வாங்க “என்றனர்.

வேலன் “வாங்க செழியன்.. ஏன் வெளியவே நின்னுட்டு இருக்கீங்க..?”

“இல்லை.. சார்.. பஸ் வெயிட் பண்ணுது.. ஸ்டாப்பில் இருந்து மலர் தனியா நடக்க வேண்டாமேன்னுதான் வந்தேன்.. மத்த எல்லோரும் அங்கே வெயிட் பண்றாங்க.. அதனால் கிளம்பறேன்.. சார்..”

“அதுவும் சரிதான்.. நீங்க கிளம்புங்க தம்பி.. அப்புறம் ஒருநாள் சாவகாசமா வாங்க..” என்று அனுப்பி வைத்தார்.

அவனோடு மலரும், அவள் அப்பாவும் விடை கொடுக்கும் விதமாக வெளியில் வந்தனர். அவரிடம் “பாய்” என்றவன், அவள் அப்பா பார்க்காதபோது மலரிடம் கண்ணடித்து விடை பெற்றான்..

அவனின் தைரியத்தை எண்ணி சற்று பயந்தாலும் உள்ளுக்குள் மகிழ்ந்தாள்..

செழியன் கிளம்பியதும் வீட்டிற்குள் வந்தவளை, அவளின் அப்பா, அம்மா இருவரும் அணைத்துக் கொண்டனர்.

“நல்லா இருந்துதுடா.. இன்னிக்கு உங்க காலேஜ் பங்க்ஷன் பார்த்து ரொம்ப சந்தோஷம். உன்னோட குரல் இவ்ளோ நல்லா இருக்கும்னு இன்னிக்குதான் தெரிஞ்சுது.. “

வள்ளி.. உள்ளிருந்து உப்பு , மிளகாய் எடுத்து வந்து “சரி.. சரி.. போதும் .. நம்ம கண்ணே புள்ளைக்கு பட்டுடும். “ என்றபடி சுத்தி போட்டனர்.

“ஆச்சி.. தூங்கிடாங்களாமா .. காலேஜ்க்கு வந்தாங்களே.. பார்த்துட்டு என்ன சொன்னாங்கம்மா..?

“அவுகளுக்கு உன் பெருமை தாங்க முடியல.. அங்கனேயே உன்னை பாக்கணும்னு நின்னுட்டு இருந்தாக.. பொறவு.. உங்கப்பா தான் சத்தம் போட்டு கிளப்பினாங்க..”

“ஆச்சி.. இருக்காங்களே.. அவுங்கள மாத்தவே முடியாது..”

“சரி .. சரி.. போய் உறங்கு கண்ணு.. ரொம்ப சடைஞ்சு தெரியற..”

“சரிம்மா..” என்றபடி உள்ளே சென்றாள். சென்றபின் தான் ஐயோ டூர் போவதற்கு கேட்கவில்லையே என்று தோன்ற, சரி காலையில் எழுந்து கேட்டுக் கொள்ளலாம்..

தன் அறையில் படுத்தவள் , இன்றைக்கு முழுதும் செழியனோடு இருந்த நினைவுகளே அவளுள் ஓடியது.

செழியன் வீட்டிற்கு சென்ற போது அவன் அம்மா, அப்பா உறங்கியிருக்க, அவன் நேராக தன் அறைக்கு சென்று விட்டான். அவன் ஏற்கனவே சொல்லி சென்றதுதான்.. தான் வருவதற்கு லேட் ஆகும், அதனால் சாவியை எடுத்து சென்று விடுவதாகவும் சொல்லி இருந்தான். எனவே வந்தவுடன் அவனிருந்த களைப்பிற்கு படுத்து விட்டான்.

காலையில் ஆறு மணிக்கு மேல் தூங்க மாட்டான் என்பதால், உடல் அசதி இருந்தாலும் அந்த நேரத்திற்கு முழிப்பு வந்து விட்டது. மீண்டும் தூங்க எண்ணியவன், மலரின் நினைவு வந்தது. முந்தைய நாள் அவளின் அழகு, விழாவில் அவளின் பங்களிப்பு ,வீட்டிற்கு செல்லும் போது நடந்த பேச்சுக்கள் என்று நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தவன் , மலரின் அப்பா நினைவு வரவும் , தன் பெற்றோர் அவரோடு பேசியது நினைவு வந்தது. உடனே திடுக்கிட்டு எழுந்தவன் , ரெப்ரெஷ் செய்து விட்டு கீழே இறங்கி சென்றான்.

கீழே அப்போது தான் அவன் அப்பா எழுந்து வந்து காபி குடித்து கொண்டு இருக்க, அவன் அம்மா உள்ளே சமையல் அறையில் இருந்தார்.

அவன் அப்பா எதிரில் அமர்ந்து பேப்பர் எடுத்து பார்த்துக் கொண்டே , உள்ளே தன் அம்மாவிற்கு “அம்மா.. காபி “ என்று குரல் கொடுத்தான்.

அவன் அம்மா காபி எடுத்துக் கொண்டு அவன் கையில் கொடுத்து விட்டு அவன் அருகே அமர்ந்தார்.

“ராத்திரி எந்நேரம் வந்த தம்பி ?”

“அது ஆயிடுசும்மா... ஒரு மணிக்கு மேலே..”

“நான் முழிச்சு கிடக்க்கலாம்னுதான் பாத்தேன்.. பொறவு உன் ஏச்சுக்கு பயந்துதான் உறங்கிட்டேன்..”

“நான் சொல்லிட்டுதானே போனேன்மா ..அப்புறம் முழிச்சு இருந்து உடம்ப கெடுத்துக்குவீகளா? நீங்க எப்போ வீட்டுக்கு வந்து சேர்ந்தீங்க..?”

“அது ஆச்சுப்ப.. பதினொரு மணி இருக்கும்.. செந்தில் பொண்டாட்டிய அவம் வீட்டிலே விட்டுட்டு இங்கன வந்தோம்.. “

“என்ன ப்ரோக்ராம் எல்லாம் பார்த்தீங்களா? உங்களுக்கு புடிச்சுதா? “

“நல்லா தான் தம்பி இருந்துச்சு. நீயும் அந்த மலர் புள்ளையும் தான் மேடையில் நின்னுட்டு தொகுத்து சொல்லிட்டு இருந்தீங்க போலே “

அவன் அம்மாவும் அப்போதுள்ள நிலைமையில் பத்தாவது வரை படித்தவர்.. தமிழில் சற்று ஆர்வம் அதிகம் உள்ளவர் என்பதால் கதை , ஆன்மீக புத்தகங்கள் எல்லாம் வழக்கமாக படிப்பவர். அதனால் இப்போது வழக்கத்தில் உள்ள வார்த்தைகளும் அவருக்கு பரிச்சயமே. என்ன பேச்சு வழக்கு ஊர் பக்கம் உள்ளது போல் இருக்கும் அவ்வளவுதான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.