(Reading time: 22 - 43 minutes)

செழியன் வீட்டில் ஒரு விதமாக விஷயங்கள் போய்க் கொண்டு இருந்தால், மலர் வீட்டில் வேறு விதமாக நடந்து கொண்டு இருந்தது.

இரவு நேரம் கழித்து தூங்கினாலும் காலையில் விழித்து விட்டாள் மலர். அவளின் கவலை எல்லாம் டூருக்கு போக ஆச்சியை எப்படி சம்மதிக்க வைப்பது என்பதில் தான்.

தன் அப்பாவை கெஞ்சி கொஞ்சி சமாளித்து விடலாம்.. இந்த காஞ்சனா ஆச்சியை சமாளிப்பதுதான் பெரிய வேலை.. பார்க்கலாம் என்று எண்ணியபடி , எழுந்தவுடன் ரெப்ரெஷ் செய்து கொண்டு ஹாலிற்கு சென்றாள்.

அவள் அப்பா சோபாவில் அமர்ந்து இருக்க, அவள் ஆச்சியோ தரையில் அமர்ந்து இருந்தார். இருவர் கையிலும் காபி இருந்தது.

தன் அம்மாவை தேட, அவர் டைனிங் ஹாலில் அமர்ந்து இருந்தார். இங்கிருந்து பார்த்தல் ஹால் தெரியும் என்பதால் அவ்வாறு அமர்ந்து காபி குடித்துக் கொண்டு இருந்தார்.

அவர் அருகில் போய் “ஹாய்மா.. குட் மோர்னிங்.. இங்கிருந்து அப்பாவ சைட் அடிப்பதற்கு பதில் அங்கே ஹாலில் அப்பா கூடவே உட்கார்ந்து சைட் அடிக்கலாம்லே.. “

அவளின் சத்தத்தில் திரும்பி பார்த்த அவள் ஆச்சி.. “ஆமா.. உங்கம்மாளுக்கு வயசு போன காலத்துலே சைட் கேக்குதோ..” என்று அங்கிருந்தே குரல் கொடுத்தார்.

“ஹேய்.. கழுதை. இன்னைக்கு காலங்கார்த்தாலே வம்பிழுக்க நான்தான் கிடைச்சானா.. ஏற்கனவே உன் ஆச்சி திறந்த வாய் மூடாது.. இதிலே நீ எடுத்து வேற குடுக்கியோ.. இந்தா உன் காபி.. போய் ஒழுங்கா உங்கப்பா கூட உக்கார்ந்து குடி” என்று கொடுக்கவும்,

“நான் வரேன்னு தெரிஞ்சு ரெடியா வச்சு இருக்க பார்த்தியா.. அங்க தான் நீ நிக்க வள்ளி..” என

“அடிங்க.. ஒழுங்கா ஓடி போயிடு.. வந்தேன் பாரு “என மிரட்ட, வெவே.. என அழகு காட்டிய படி ஓடி விட்டாள். காபியை எடுத்துக் கொண்டு தான்.

நேராக தன் ஆச்சியின் அருகில் அமர்ந்தவள்

“ஏன் ..ஆச்சி.. உனக்கு எப்படி சைட் அப்படின்னு வார்த்தை எல்லாம் தெரியுது ?”

“ஆமாமா.. பொழுதன்னிக்கும் டிவிலே சிரிப்பு காட்டுறோம்ன்ற பேரிலே இதைத்தானே காட்டுறாங்க.. பச்ச புள்ளைக்கு கூட இப்போ எல்லாம் தெரியுது..”

“அது சரிதான்.. இததான் காட்டுறாங்கன்னு தெரியுதுல்ல. பொறவு ஏன் .. நீ உக்காந்து அதையே பார்த்துட்டு இருக்க..?”

“வேற என்ன சோலி இருக்கு இங்கன ? அந்த காலமா இருந்தா, பெரிய வேலை இல்லாட்டாலும், அரைக்க, புடைக்க, குத்தன்னுட்டு வேலை இருந்துட்டு இருக்கும்.. வீட்டிலே இருக்கிற வயசு பொம்பளைங்க வீட்டு வேலை எல்லாம் பார்த்தா, இருக்கிற கிழங்கட்டைஎல்லாம் இந்த சுத்து வேலை பார்த்துட்டு கிடக்கும்.. பொழுது போக ஏதோ கோவிலுக்கு போனோமா, நாலு பேர் கூட புரளி பேசினாமோன்னுட்டு இருப்போம்.. இப்போ எல்லாத்துக்கும் மிஷின் வந்துருச்சு.. உங்கம்மாவே ஆக்கி இறக்கிற வேலை தான் பாக்க.. இதிலே நான் எங்கிட்டு அவ கூட வேலை செய்ய.. அக்கம் பக்கமும் பேசுறது பட்டணத்துலே முடியாது.. இந்த டிவியா விட்ட வேற என்ன கதி கிடக்கு.. அதான் அதிலே உக்காந்து அடிமை ஆகி போடுறோம்..”

தன் ஆச்சி.. நீட்டி முழக்கி சொன்னாலும் , அதில் இருந்த உண்மை உணர்ந்தாள் மலர். அவர் சொல்வது போல் அவர்களுக்கு வேறு புகலிடம் என்ன.. முன்னாடி எல்லாம் ஊரில் இருந்தால் நாலு சொந்தம் வரும்.. அவர்களோடு பேச இவர்களுக்கும் பொழுது போகும்.. சொந்தமும் வளரும்.

இப்போ எல்லாம் வீட்டில் கல்யாணம் வைத்தால் கூட, எல்லா சொந்தங்களும் மண்டபத்திற்கு வந்து விட்டு அங்கிருந்து அப்படியே கிளம்பி விடுகிறார்கள். மற்ற நாட்களில் சொந்தங்கள் வந்தால் அவர்கள் எப்படா கிளம்புவார்கள் என்று வீட்டில் உள்ளவர்கள் எதிர் பார்க்கும் நிலைமைக்கு சென்று விட்டது.

சரி நம் வேலையை பார்ப்போம் என்று எண்ணி

“ஆச்சி.. நேத்திக்கு காலேஜ் வந்தியே.. அங்க எப்படி இருந்தது..?”

“அத ஏன் கேக்க புள்ள.. நான் அப்படியே திகைச்சு போயிட்டேன்.. எம்புட்டு மனுஷங்க வந்துருந்தாங்க.. நம்மூர் பக்கம் எல்லாம் தேர் திருவிழான்னா இம்புட்டு கூட்டம் வரும்.. இங்க என்னடான்னா.. இந்த விழாவுக்கே எத்தனை சனம்.. “

“என்னை பார்த்தியா ? எப்படி என் பேச்சு எல்லாம் ?”

“உனக்கு என்னடி கண்ணு.. நீ ராசாத்தி... அத்தனை ஜனம் முன்னாடி நீ தைரியமா மைக்லே பேசுனியே .. அதுவே பெருசு தங்கம்..”

“ஐ. நல்ல ஐஸ் வைக்க ஆச்சி நீ “

இப்போ அவள் அப்பா இடை புகுந்து “மலரு.. காலேஜ்லே வச்சு.. உன் ஆச்சி.. நான் பேச்சிய பார்த்துட்டுதான் போவேன்னு சொல்லி நின்னுட்டு இருந்துச்சு.. அத என்னனு கேளு..?”

“என்னது.. அங்கன வச்சி பேச்சின்னு சொன்னியா ? என் மானமே போச்சு..?” என்று ஆச்சியை முறைக்க

“ஏலே.. வேலா.. சும்மாருக்க மாட்ட.. அது வாய் தவறி வந்துருச்சு கண்ணு.. இனிமே பார்த்துகிடுதேன்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.