(Reading time: 22 - 43 minutes)

அவரின் கேள்வியை கேட்டவுடன், இத்தனை நேரம் எப்படி கேட்பது என்று எண்ணியவன், அவன் அம்மாவே எடுத்துக் கொடுக்கவும்,

“ஆமாம்மா.. அவங்களும் நல்லா பண்ணினாங்கள்ள..? “ என்று ஓரக்கண்ணால் அவன் அப்பாவை பார்த்தான்..

அவர் பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார். காதில் விழுந்தாலும் விழாதது போல் அமர்ந்து இருந்தார்.

“ஆமாமா “ என்றவர் , அவரே “அவுங்க வீட்டிலே கூட நல்லா பழகறாங்க .. நம்ம பக்கம் போலே தான் அவங்களும்..” என்றார்.

செழியனின் அப்பா தன் மனைவியை மனதினுள் திட்டி கொண்டு இருந்தார். “அட கூறு கெட்டவளே... அவனே நம்மகிட்டே வாய புடுங்கறான்.. இது தெரியாம இவ கிறுக்கியாட்டம் உளறிட்டு இருக்கா பாரு”

உடனே அதை பிடித்துக் கொண்ட செழியன் “ ஆமாம் அம்மா.. அவங்க வீட்டிலே எல்லோருமே நல்ல டைப் தான்.. எனக்கு உங்ககிட்ட வர முடிஞ்சா, நானே அவங்க கிட்டே உங்கள அறிமுகபடுத்த  நினைச்சு இருந்தேன்.. நீங்களே பேசிட்டீங்க நீங்க அவங்ககிட்டே பேசின மாதிரி இருந்ததே. என்ன பேசுனீங்க..?

அவன் அம்மா சாதாரணமாக “ அவங்ககிட்டே மலர செழியன் கல்யாணத்திலே பார்த்தத சொன்னேன்.. அவுங்களும் உன்ன பத்தி பெருமையா பேசினாங்க.. அப்புறம் நான் அவங்க கிட்டே உங்க புள்ளைக்கு மாப்பிள்ள பார்கறீங்களான்னு கேட்டேன்.. அதுக்கு பதில் சொல்லாம அந்த பெரியம்மா அவங்க மருமகள கூப்பிடவும், உங்க அப்பா.. என்ன நினைச்சாரோ உனக்கு பொண்ணு தயாரா இருக்குன்னு சொல்லிட்டாரு.. அவுக முகமே விழுந்து போச்சு..” என்று விலா வரியாக சொல்லவும்

செழியனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

அவன் தன் அப்பாவை பார்த்து “ஏன்பா அப்படி சொன்னீங்க.. ?”

அவர் வேகமாக “அவுங்க மனசிலே எதுவும் ஆசைய வளர்த்துகிட கூடாதுல்ல.. அதான்.”

“அது எப்படிப்பா ..நீங்க அப்படி சொல்லலாம்.. அவுங்க எதாச்சும் இத பத்தி பேசி நீங்க பதில் சொல்லிருந்தா சரி.. நம்ம அம்மா தான் ஏதோ கேட்டாங்க.. அதுக்கு அவங்களே ஏதோ பதில் சொல்லிருப்பாங்க.. அத விட்டுட்டு.. இப்படி பேசினா நம்மள பத்தி தப்பா நினைக்க மாட்டாங்களா?”

“அது எல்லாம் எனக்கு தெரியாது.. அந்நேரம் எனக்கு இப்படி சொல்ல தோணிச்சு சொல்லிபுட்டேன்.. என்ன செய்யனுங்கற.. “ என்று அவனிடம் எகிறியவர்

“இந்தா பார்வதி .. இப்போ எதுக்கு உன் புள்ளகிட்ட இத எல்லாம் சொல்லிடு கிடக்க.. போய் சோலி என்ன உண்டோ பாரு “ என்று தனக்கு மனைவியிடமும் சற்று வேகமாக பேசினார்.

“ஆமா.. எங்க வாய அடக்கிடுங்க.. ஏன்மா நீங்க ஏன் சட்டுன்னு அந்த மாதிரி கேட்டேங்க.. நீங்க அந்த மாதிரி எல்லாம் பேச மாடீங்களே.. “

“அது... உங்க ரெண்டு பேரையும் மேடையில் ஒண்ணா பாக்கவும், பொருத்தமா இருந்துது.. அவுங்க பேச்சும் நம்ம பக்கமாட்டம் இருந்தச்சு.. அதான் சட்டுன்னு வாயிலே வந்துடுச்சு.. “

மீண்டும் செழியனின் அப்பா “இப்போ சோலிக் கழுதைய பார்த்துட்டு போவியா..? அத விட்டுட்டு கருக்கல்ல உக்காந்து உன் புள்ள கிட்டே வம்பளந்து கிட்டு இருக்கியே..”

செழியன் அம்மா முணுமுணுத்தபடி சென்றார். அவர் செல்லவும் தானும் எழுந்து கொள்ளப் போனவன்,

“அம்மா , நான் இன்னிக்கு டூர் போறேன்.. காலேஜ்லே ஏற்பாடு பண்ணிருக்காங்க.. ரெண்டு நாளில் வந்துடுவேன்”

“ஏன்லே. மத்த நாளில் தான் வேலைக்கு போயிடுற.. இந்த லீவ் கிடக்கப்பாவது வந்து நான் சொன்னத பத்தி என்ன எதுன்னு விசாரிக்கலாம்லே ..?”

“நாந்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே.. இப்போ படிப்பு முடியற வரைக்கும் எத பத்தியும் பேசாதீங்கன்னுட்டு.. பொறவு என்னைய குடைஞ்சா.. நான் என்ன செய்யுறதாம்..?” என்று அவனும் சற்று எகிறவும்,

இன்னைக்கு ஏற்கனவே அவன ரொம்ப எகிறிவிட்டோம்.. மேலும் அவனிடம் முறுக்கினால், அவன் திருப்பிக் கொண்டு போக வாய்ப்பு உண்டு.. எனவே தழைந்து விடும் உத்தேசத்தோடு

“சரிலே.. கடை கணக்கு பாக்கவது வரலாம்லே.. இந்த மாதிரி மொத்தமா லீவு கிடக்கும் போது மொத்த கணக்கு பாத்திட்டா வருஷ கடைசியிலே தவங்க வேண்டாம் லே..”

“எனக்கு நாலு நாள் லீவு இருக்கு.. ரெண்டு நாள் தான் ஊருக்கு போறேன்.. வந்து பார்துகிடுதேன்.. “ என்று விட்டு சென்றான்.

அவருக்கு ஏற்கனவே சற்று சந்தேகம் இருந்தது. செழியன் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வருவதற்கு காரணம் அவன் யாரையும் விரும்புகிறானோ என்று. சரியாக தெரியாவிட்டாலும் ஒரு உறுத்தல் இருந்தது.

நேற்று விழாவில் இருவரும் மேடையில் தோன்றியதும் அவரையும் அறியாமல் அவர்களின் பொருத்தத்தை பார்த்து மனம் மகிழ்ந்தது. அவருடைய வாக்கு மட்டும் மறந்து இருந்தால் அங்கேயே மலர் அப்பாவிடம் பேசி இருப்பார்.. அது நினைவு வரவே சற்று கடுமையாகவே பேசி விட்டார். அவருக்கே கொஞ்சம் உறுத்தல் தான்.

எனவே அவனின் போக்கிலே விட்டுவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.