(Reading time: 20 - 39 minutes)

"எல்லாரும் வெளிய போங்க. அங்க போய் பேசிக்கலாம்", என்று மங்களம் சொன்னவுடன் எல்லாரும் வெளியே சென்றார்கள்.

"சூர்யா கண்ணா, இனி உன் அத்தை எந்த பிரச்சனையும் செய்யாமல் நான் பாத்துக்குறேன் டா. நீ மதியை சமாதான படுத்து", என்று சொல்லி அவன் தோளில் தட்டி கொடுத்து விட்டு வெளியே சென்றாள் மங்களம். 

எல்லாரும் சென்றவுடன் கதவு வரை சென்றான். அங்கே சண்முகம் மறுபடியும் வள்ளியை அடிப்பது கண்ணில் பட்டது.

"காலம் கடந்து வந்த வீரம்", என்று நினைத்து கொண்டு கதவை அறைந்து சாத்தினான். 

"இப்ப தேவை இல்லாம எதுக்கு என்னை அடிச்சிட்டு இருக்கீங்க. அண்ணன் நீயும் பாத்துட்டு இருக்க?", என்று திமிராக கேட்டாள் வள்ளி. 

"தேவை இல்லாம அடிக்கிறேனா? நீ செஞ்ச கேவலத்துக்கு யாரும் உன்னை அடிக்க வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க? உன்னை இப்பவே கொன்னு போட்டுருவேன். ஆனா ரெண்டு பேரை பெத்து வச்சிருக்கியே. அதுக்காக உன்னை சும்மா விடுறேன்", என்று வள்ளியின் தலை முடியை இறுக்கமாக பிடித்து பேசினார் சண்முகம்.

வள்ளியும் சும்மா கிடக்காமல், "நான் என்ன தப்பா சொன்னேன்? அவ அனாதை கழுதை தான? அவளை எல்லாம் கொன்னு போட்டா கூட கேக்க நாதி இல்லை", என்று சொல்லி மேலும் அரை வாங்கினாள்.

"நாதி இல்லையா? அனாதையா? அப்பன் நான் இருக்கேன் டி. இத்தனை நாள் நான் அவ மேல அன்பை காட்டினா நான் இல்லாத நேரம் அவளை நீ நோகடிப்பனு தான் விலகி இருந்தேன். ஆனா நான் அப்படி விலகி இருந்தும் நீ அப்படி தான் செஞ்சிருக்க. அது ஒரு பிள்ளை பூச்சு டி. ஒரு வார்த்தை கூட எதித்து பேசாது. இப்ப ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. அதை போய் அளிக்க  நினைக்கிறியே? நல்லா இருப்பியா? வாழ வேண்டிய பொண்ணை பத்தி தப்பு தப்பா பேசிருக்கியே, நீ அந்த மாதிரி எவன் கூடவாது போக வேண்டியது தான? நீ அப்படி போய் சேந்தா நானும் என் பிள்ளைகளும் நிம்மதியா இருப்போம்?", என்றார் சண்முகம்.

"இப்ப எதுக்கு அம்மாவையே எல்லாரும் திட்டுறீங்க? அவங்க சொல்றது சரி தான? அவ எங்கயாவது ஓடி போனா தான் எனக்கும் சூர்யா அத்தானுக்கும் கல்யாணம் நடக்கும். எனக்கு சூர்யா அத்தான் வேணும்", என்று இடையில் புகுந்து பேசினாள் தேன்மொழி.

அடுத்த நொடி அவள் கன்னத்தில் இடி என இறங்கியது சுப்பிரமணியின் கரம். மங்களமும் "இன்னும் நாலு போடுங்க. இந்த வயசில் எப்படி பேசுது பாருங்க", என்றாள்.

எப்பவுமே அன்பாக பேசும் மாமா இன்று அடித்ததில் அதிர்ச்சியாக முழித்தாள் தேன்மொழி.

"பொம்பளை பிள்ளைன்னு பாக்குறேன். இல்லைன்னா உன்னை கொன்னே போட்டுருவேன். வயசுக்கு தகுந்த மாதிரி பேசு. உன் அம்மா தான் தருதலையா இருக்கான்னா நீ அவளை மிஞ்சிறுவ போல? நீயும், உன் அம்மாவும் விளையாட என் மகன் வாழ்க்கை தான் கிடைச்சதா? நானும் கூட பிறந்த தங்கச்சி ஆச்சேன்னு நினைச்சா, அவ அந்த அளவுக்கு பேசுறா. நீ ஒன்னும் தெரியாத பச்சை மண்ணுனு நினைச்சா அவளை விட கேவலமா பேசுற? கலைமதி இந்த வீட்டு மருமக. என் மகனோட பொண்டாட்டி. அவளை விரட்டிட்டு நீ அந்த இடத்துக்கு வரணும்னு நினைக்கிறியா? உன் மனசுலயும் உன் அம்மா விஷத்தை கலந்து வச்சிருக்கான்னு இப்ப தான தெரியுது? நாளைக்கு ஒரு நாள் தான் நீங்க இங்க இருக்கணும். நாளைக்கு நைட் இந்த வீட்டை விட்டு கிளம்பலை, என் பையன் என்ன, நானே கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளிருவேன். முதலில் அம்மாவும், பிள்ளையும் பொண்ணுங்க மாதிரி நடந்துக்கோங்க", என்று தேன்மொழியையும் வள்ளியையும் பார்த்து சொன்ன சுப்பிரமணி சண்முகத்தை பார்த்து "என்னை மன்னிச்சிரு மாப்பிள்ளை. பொண்டாட்டியை இழந்துட்டு பச்சை பிள்ளையை வச்சிட்டு தனி மரமா நிக்குறியேன்னு தான் கூட பிறந்த தங்கச்சியை கட்டி கொடுத்தேன். ஆனா அவ உனக்கும், மதிக்கும் இப்படி சனியனா வந்து நிப்பானு நான் நினைக்கவே இல்லையே", என்றார். 

"நீங்க என்ன மச்சான் செய்வீங்க? சொந்த வீட்ல நடந்துருக்குற அநியாயத்தை கண்டுக்காம இருந்துட்டேனே. நான் தான் எல்லாத்துக்கும் காரணம்", என்று தலையில் கை வைத்து புலம்பினார் சண்முகம்.

"வீட்ல பெரியவங்க தான? ஒரு பொண்ணை இவ அந்த அளவுக்கு துன்முறுத்திருக்கா. அதை கண்டுக்காம இருந்துருக்கீங்க?", என்று கலை மதியின் பாட்டி, தாத்தாவையும் நாலு திட்டு திட்டினார் சுப்பிரமணி.

மதியால் தான் அவளுடைய அம்மா இறந்தாள் என்று நினைத்து தன் பேத்தியை வெறுத்து ஒதுக்கிய பாட்டி, தாத்தாவும் இப்போது தங்கள் தவறை நினைத்து வருந்தினார்கள்.

இங்கே இவர்கள் பேச்சு நடக்கையில் உள்ளே மதியை தாங்கி கொண்டிருந்தான் சூர்யா.

அவள் அருகில் அமர்ந்தவன் அவள் முகத்தை நிமிர்த்த பாடு பட்டான்.

ஆனால் முகத்தை மறைத்து கொண்டு அழுது கொண்டே இருந்தாள் மதி.

"கலை இங்க பாரு மா. ப்ளீஸ் டா அழாத", என்று அவன் சொன்ன சமாதானம் எதுவுமே அவள் காதில் ஏறவே இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.