(Reading time: 20 - 40 minutes)

“இல்லை வேதிக்! நான் எதையும் தெரிஞ்சுக்க விரும்பலை. என்னை இறக்கிவிடு!” மிகவும் கறாராய் சொல்ல

“காம் டௌன்! திடீர்னு என்னாச்சு உனக்கு? என்ன விஷயம்னே தெரிஞ்சுக்காம இவ்வளவு டென்ஷன் ஆகுற? சரி விடு! அதை பத்தி நாம பேச வேணா.... ஆனா இரண்டு நாள்ல யூ.கே. போற எங்கூட கொஞ்ச நேர பேசிட்டு கிளம்பிடு”

வேதிக் என்னதான் சமாதானம் சொன்னாலும் மனம் முரண்டியது.  ஆனாலும் இரு தினங்களில் வெளி நாடு செல்பவனிடம் பேசுவதொன்றும் குற்றமில்லையே என்ற தெளிவு பிறக்கவும்,

“கொஞ்ச நேரந்தா... பேசிட்டு கிளம்பிடுவ”

“நீ சொல்ற மாதிரியே செய்யலாம்”

அகலமான சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்திருந்த மரங்களும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சிறு குடிசைகளும், அத்தனையாய் ஆள் நடமாட்டம் இல்லாத இடம்.  சோம்பியிருக்க விடாது பசிக்காகவும் பணத்திற்காகவும் மக்களை விரட்டும் பெங்களூரில் இப்படியொரு இடமா? வியந்து போனாள் சரயூ.

அதை கவனித்தவன், “என்ன...ஆச்சரியமாயிருக்கா?”

“ம்ம்ம்....” என்றவளின் பார்வை இன்னமும் சாலையிலியே பதிந்திருக்க

“நான் இந்த பக்கம் வந்ததேயில்லை, வேதிக்! உண்மையை சொல்லனும்னா இது பெங்களூர் தானானு....”

“சந்தேகமே வேணா... இது பெங்களூர் தான்! இந்த பகுதியெல்லாம் இன்னும் டிவெலப் ஆகலை! ஆனா என்னோட ப்ரெண்ட் இங்க சகலவசதியோட பங்களாவையே கட்டிவச்சிருக்கா” என்று சொல்லிக்கொண்டே காரை நிறுத்தினான்.

அதன் பிராம்மாண்டத்தை கண்டவள், “பங்களாயில்ல... இதை அரண்மனைனு சொல்லனும்” பார்வை அந்த அரண்மனையின் அழகையும் அதை சுற்றியிருந்த பசுமையையும் ரசித்தது.

“சரியா கண்டுபிடிச்சிட்ட! என் ஃப்ரெண்டோட முன்னோர்கள் சிற்றரசர்களா இந்த சுத்துவட்டாரத்தை ஆண்ட காலத்துல கட்டின அரண்மனைதா.  நல்லா வாழ்ந்த குடும்பம், ஒரு பொண்ணால சீரழிஞ்சு போச்சு!” என்றவன் குரலில் இருந்த மாற்றத்தை கவனித்து திரும்ப, கோபத்தில் கண்களிரண்டும் இரத்தமென சிவந்திருக்க, மூக்கு விடைத்து, அவன் பற்களை நரநரவென கடித்து, ராட்சனாக மாறியிருந்தவனை காண அச்சம் உச்சத்தை தொட்டது.

வாயிலிருந்து வெளிவராமல் தொண்டைக் குழியில் ஒளிந்துகொண்ட குரலை ஒரு வழியாக கட்டுபடுத்தி, “வே...வே..திக்” என்றாள்.

மிகவும் மெலிதாக ஒலித்த அவன் பெயரே அவளின் பயத்தை விளக்க, “சாரி சரயூ! வா உள்ள போகலாம்” என்ற போது இயல்புக்கு திரும்பியிருந்தான்.

மரத்திலான பெரும் கதவுகளில் பித்தளையும் வேறு சில உலோகங்களும் கலந்து அழகு சேர்க்க...இன்னதென்று தெரியாத மிகவும் நுணுக்கமான வேலைபாடாக அமைந்து கண்களை கவர்ந்தன.  அலங்கார சீலைகளும், விளக்குகளும் பிரம்மாண்டத்தை கூட்ட, அங்கிருந்த எல்லா பொருட்களிலும் வீட்டின் செல்வ நிலை பிரதிபலித்தது.

ஏனோ உள்ளம் படபடவென அடித்துகொள்ள...ஸோஃபாவில் உட்கார்ந்திருந்தாள் சரயூ.

இவளுக்கு குடிக்க எடுத்து வந்தவன், “எடுத்துக்கோ சரயூ...காஃபிதா!” என்றுவிட்டு அவளுக்கெதிரே உட்கார்ந்து காஃபியை ருசிக்க ஆரம்பித்தான்.     

சில நொடிகள் அவனை ஆராய்ந்தவள், “ஆர் யூ ஆல்ரைட் வேதிக்?” என்று முகத்தை ஏறிட....

“ஐ ம் ஃபைன்!” காஃபியை குடிக்காமல் இவனை பார்க்க, “சொல்ற இல்ல..ஐ ம் ஃபைன், சரயூ! காஃபி ஆறுது பாரு... முதல்ல அதை குடி... அப்றம் பேசலாம்” என்று அவளை ஊக்க, காஃபியை குடித்தவளுக்கு மனதின் படபடப்பு சற்று குறைந்தது.

உள்ளே சென்று ஒரு ஆல்பத்தை எடுத்த வந்து அவளிடம் நீட்ட, வாங்கி புரட்டினாள்.

ஓரிரு குடும்ப படங்களிருக்க, மிகுதியெல்லாம் இரு ஆண் பிள்ளைகளின் சிறுவயது தொடங்கி அவர்களின் வளர்ச்சியை சிறைப்பிடித்திருக்க, பதின்ம வயது படத்துக்கு அடுத்து அவர்களில் ஒருவன் படத்துக்கு மாலை அணிவித்திருக்க... திகைத்தவள், “வேதிக்! உன் ஃப்ரெண்ட்.... ஐ ம் சாரி!” அவனுக்கான நிஜமான வருத்தமிருந்தது.

“அப்படியே இதையும் பாரு!” என்று உணர்ச்சி துடைத்த குரலில் செய்தித்தாளை அவளிடம் நீட்டினான்.

‘நியூஸ்பேப்பர்ல என்ன?’ வாங்கி படிக்க...

இன்று நடந்த போட்டி தேர்வில் கால்குலாட்டர் பயன்படுத்தி தேர்வின் விதியை மீறிய மாணவன் மூன்று ஆண்டுகளுக்கு டிபார் செய்யபட்டான் என்றிருக்க அவசரமாக பேப்பரை புரட்டி தேதியை பார்க்க, அது அவள் தேர்வெழுதிய அதே வருடம் என்றது.

எதுவோ புரிந்தும் புரியாத நிலையில், “இது...இது...” என்று நினைத்ததை கேட்க முடியாமல் இழுக்க...

புரிந்துகொண்டவனோ, “ஆமா! நீ மாட்டிவிட்ட பையனை பத்திதா பேப்பர்ல இருக்கு.  அவன் யார்னு தெரியுமா?” என்று அமைதியாக கேட்க... அது புயலுக்கு முன் வரும் அமைதியென புரியாது மருண்டு விழிக்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.