(Reading time: 20 - 40 minutes)

“எல்லாரும் பார்ட்டியில் பிஸியா இருந்த நேரத்தை உபயோகிக்க முடிவுபண்ணிருக்க... திடீர்னு உன்னை காணும்... இந்த தடவையும் என்னோட திட்டம் பாழாகிடுமோனு அவசரமா அதே சமயம் யாரோட கவனத்தையும் கவராம உன்னை ரிசார்ட் முழுக்க தேடின.  அப்படி ரிசார்ட்டோட ஓடைகிட்ட வந்தபோது, சஞ்சய் ஃபோனோட சத்தம் கேட்டுதா, அவன் தரையில் விழுந்து கிடந்ததை பார்த்த.  நான் கலந்த மயக்கமருந்து நல்லாவே வேலை செய்யுதுனு புரிஞ்சது.  ஃபோனை எடுத்து பார்த்தா நீதான்! உன்னை காப்பத்த வரசொன்ன.  பின்னாடியே நீயிருந்த லோகேஷனையும் அனுப்பியிருந்த.  கால் அண்ட் மெஸ்ஸெஜை அழிச்சிட்டு உடனே கிளம்பிட்ட” 

“யஷ்விதா, ஒரு ஃப்ரெண்ட் கல்யாணத்துக்காக கூர்க் வந்திருந்தா.  அவளோட கார்லதா நாங்க உன்னை தேடி வந்தோம்.  எங்களுக்கு உன்னை தேடுற சிரமத்தை கொடுக்காம நீயே வந்து கார்ல மோதிட்ட”

ரயூ!” என்று பதறியபடி காரிலிருந்து இறங்கி ஓடினான் வேதிக்.  இவர்கள் வண்டி போய்க் கொண்டிருந்த வேகத்திற்கு அவளுக்கு பலமான அடி விழ வாய்ப்பில்லை.  ஆனால் அந்த கிரண் இவனுக்கே தெரியாமல் செய்து வைத்த காரியத்தில் எங்கே அவள் உயிர் பிரிந்து விடுமோ என்ற பதற்றம் தான்.  இவன் நினைத்திருக்கும் எல்லாவற்றையும் செய்திட சரயூ உயிருடன் இருந்தாக வேண்டுமே.

சரயூவின் இரத்தக் கரை படிந்து ஆங்காங்கே கிழிந்திருந்த ஆடையும், கலைந்திருந்த கூந்தலும், ஒட்டு மொத்த பயத்தை தேங்கியிருந்த முகமுமாக அலங்கோலமாய் வந்து விழுந்தவளைக் காணவும் ஒரு பெண்ணாக பரிதவித்து போனாள் யஷ்விதா.  வேதிக் இறங்கியிருக்க, சட்டென தண்ணீர் பாட்டிலை எடுத்து கொண்டு விரைந்தாள்.

கிரணிடமிருந்து தப்பிக்க, ஓட ஆரம்பித்தவளுக்கு மனதிலெழுந்த கேள்விகளும், தான் செய்த செயல், பயம், குழப்பமென எதற்காக ஓடுகிறாள் என்று புரியாது இப்போதும் ஓட முயற்சி செய்ய... உடலின் சோர்வால் எழுந்து உட்கார முடிந்ததே ஒழிய நிற்கவோ நடக்கவோ முடியாது விழித்துக் கொண்டிருந்தாள்.

வேதிக்கின் குரலில் பயந்து நகர்ந்தவளை தடுத்து தன்னுடைய துப்பட்டாவை போர்த்தி, நீரை குடிக்க செய்து, அரவணைத்து கொண்டாள் யஷ்விதா.

சரயூவின் பயம் வேதிக்கின் இத்தனை வருட வன்மத்திற்கு குளுகுளுவென ஒரு நிறைவை தருகிறதென்றால் யஷ்விதாவின் செயல் எரிச்சலை கூட்டியது.  அதை வெளிக்காட்டி கொள்ளாது தன்னுடைய அடுத்த திட்டத்தை நிறைவேற்ற சரியான தருணத்தைத் தேடினான்.

“என்னாச்சு சரயூ?” என்று போலியான வருத்தத்தோடு வேதிக் அவளை நெருங்க... கண்களில் நீர் வழிய, பயத்தில் நடுங்கும் கைகள் யஷ்விதாவின் கையை அழுத்தியது.  நிலையை புரிந்து கொண்ட யஷ்விதாவோ,

“வேதிக், நீ கொஞ்ச நேரம் கார்ல உட்காரே.  நாங்க வரோம்” எனவும் அவளின் பயத்தை ரசிக்க விடாது தன்னை விலக சொன்ன யஷ்விதாவின் மீது அளவில்லா கோபமெழ.... சற்று நகர்ந்து காரின் கண்ணாடியின் வழியாக அவர்களை பார்க்கும்படியாக நின்று கொண்டான்.

“உனக்கு எந்த பிரச்சனையுமில்லை, நீ இப்போ சேஃபா இருக்க சரயூ.  கொஞ்ச நேரத்துல ரிசார்ட்டுக்கு போயிடலாம்.  அதுக்கு முன்ன என்ன நடந்ததுன்னு நீ சொல்லனும்.  அப்பதான் அடுத்து என்ன செய்யலாம்னு ஒரு முடிவுக்கு வரலாம்.  போலிஸ் கேஸ் ஃபைல் பண்றதா இல்லையானு பார்க்கனும்” யஷ்விதா பேச பேச அவள் உடல் நடுக்கம் அதிகரிக்க, “பயப்படாத சரயூ! எந்த பிரச்சனையானாலும், உங்கிட்ட வராம பார்த்துக்கலாம்.  என்ன நடந்ததனு முழுசா தெரிஞ்சாதா உன்னை சேஃப் பண்ண வசதியாயிருக்கும்.  சொல்லு சரயூ” அவளை தோளோடு அணைத்து தைரியமளிக்க சரயூ, ரிசார்ட்டை விட்டு வெளியேறியதும் அதற்கான காரணத்தையும், கிரணை சந்தித்ததையும் அதன் பிறகு நடந்தவையென எல்லாவற்றையும் கூறியிருந்தாள்.

அழுது கரைந்தவளை, அணைத்து, முதுகு நீவி அவளை சமன்படுத்த முயன்றாள் யஷ்விதா. 

அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த வேதிக், “இதுக்கப்றம் நீங்க இங்க இருக்க வேணா.  சரயூவை உன்னோட ரூம்ல தங்கவச்சிக்க.  நான் போயி பார்த்துட்டு வரேன்” என்றுவிட்டு காட்டை நோக்கி நகர்ந்தவனை தடுத்தது சரயூவின் வார்த்தைகள்.

“நான் ரிசார்ட்ட்டுக்கெல்லாம் வரலை.  என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிப்போ யஷ்விதா.  நானொரு கொலைகாரி! வீட்டுக்கு போயி யாரோட முகத்தையும் என்னால பார்க்க முடியாது.  இப்படியே போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிடுற.  ஒரு உயிரை எடுத்த உறுத்தலோடு என்னால வாழ முடியாது” என்று கதறியவளை பார்த்து யஷ்விதாவின் கண்களும் கலங்கியது. 

வேதிக்கின் செவிகளில் தேனாய் பாய்ந்தது அந்த கதறல்.  இதுதானே... இதுதானே அவன் எதிர்பார்த்தது.  தன்னுடைய நண்பனின் அவமானமும், அவனை இழந்த பெற்றோரின் கதறலும் இன்றும் கண்முன் விரிய அவளின் தற்போதைய நிலையை ரசித்தது, வேதனையால் வதங்கியிருந்த வேதிக்கின் மனது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.