(Reading time: 20 - 40 minutes)

“அவன்தா வசந்தகுமார வர்மன்! என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்! இந்த அரன்மணையோட கடைசி வாரிசு” என்று அவன் கர்ஜித்ததில் சரயூ நடுநடுங்கி போனாள்.

அவளின் பயத்தை வஞ்சத்தோடு பார்த்து ஆங்காரமாக சிரித்து, “இதோ...இது” என்று கண்களருகே சுட்டுவிரலை நீட்டி, “இந்த கண்ணுல தெரியுதே பயம்... இதைதா எதிர்பார்த்த” மீண்டும் பயங்கரமாக சிரித்தவன், “இந்த பயம் அன்னைக்கு உங்கிட்ட இருந்திருந்தா, என்னோட வசந்தை நான் இழந்திருக்க மாட்ட” கோபத்தில் முகம் தகிக்க, உதட்டில் உள்ளத்தின் மமதையை பிரதிபலித்த புன்னகை.

“உன்னை கொல்லதா காலேஜுக்கு வந்த! ஆனா உன்னோட தைரியமும், எந்தவித கவலையுமில்லாத சந்தோஷமும், சிரிக்க மட்டுமே தெரிஞ்ச இதழ்களும்.... இதுக்கெல்லா காரணமாயிருக்க உன் குடும்பம்... உன்னை பார்த்து பார்த்து வளர்த்த அப்பா, அன்பை பொழியிற அம்மா, பொறுப்பான அண்ணனு.... எல்லாமே என்னை யோசிக்க வச்சது.  உன்னை கொன்னுட்டா நீ நிம்மதியா செத்துருவ...என்னோட வசந்த் அனுபவிச்ச அவமானத்துக்கு அது ஈடாகாதே!”

“சின்ன சின்னதா உனக்கு தொந்தரவு கொடுத்து நீ கஷ்டபட்றதை அணு அணுவா ரசிக்கனும்னு மனசு துடிச்சது! அதோட முதல் கட்டமா உனக்கு நோட்ஸ் ரெடி பண்ணி தரேன்னு சொன்ன...நீயும் ஒத்துக்கிட்டு, என்னோட திட்டத்தை சுலபமாக்கின...ஆனா நான் எதிர்பார்க்காத புது பிரச்சனை சஞ்சய்! நான் நோட்ஸ் தரலைனா அவனோடத உனக்கு தர தயாராயிருந்தா... சரினு அதையும் எனக்கு சாதகமா பயன்படுத்திக்க முடிவு செய்து, நோட்ஸ் கொடுத்து உன்னோட நம்பிக்கைய சம்பாதிச்ச! அதுக்கப்றம் நான் எடுத்த எல்லா முயற்சியும் பாழ போன சஞ்சய்னால ஃப்ளாப்.  பேசாம அவனை கொன்னுட்டா என்னனு தோனவும் அவனை கண்காணிக்க ஆரம்பிச்ச....அப்போதா அவன் உன்னை காதலிக்கிறானு தெரிஞ்சது”

“சஞ்சயை நீ காதலிக்குற வரைக்கும் அமைதியா இருந்துட்டு, அப்றம் அவனை இல்லாம செய்துட்டா, காலம் முழுக்க நீ அழுவியே! நினைக்கும் போதே சந்தோஷமாயிருந்தது.  அது என்னன்னே தெரியாது? உன்னோட விஷயத்துல நான் போட்ட கணக்கு எப்பவுமே தப்பாதா போயிருக்கு.  திடீர்னு கிரண் ஆட்டத்துல நுழையுறா...அவனுக்கும் உன் மேல காதலாம்! எனக்கு ஒரே சிரிப்பாயிருந்தது.  என் கையால சாகப்போறது யாருனு, ரெண்டு பேரும் முட்டிக்கிட்டானுங்கனு தான் சொல்லனும்”

“இஸ்கான் ஃபெஸ்ட் – அப்போ ஒரு கல்யாணத்துக்கு போனோமே.... அங்கதா நான் எதிர்பார்க்காத மாற்றங்களோட இந்த ஆட்டம் சூடுபிடிச்சது.  அது யாரு கல்யாணம்?” என்று நெற்றி சுருக்கி யோசித்தவனுக்கு ஆதர்ஷ்-ப்ரியா திருமணமென்பது நினைவிற்கு வரவில்லை.

“சரி விடு! யார் கல்யாணமா இருந்தா எனக்கென்ன? அன்னைக்குதா எனக்கு பல உண்மைகள் தெரியவந்தது.  நீ சொல்லலைனாலும் உனக்கு சஞ்சய் மேலிருக்க காதலும்... கிரணுக்கு உன்மேல இருக்க விருப்பமும், யஷ்விதாவுக்கு சஞ்சயை பிடிச்சிருக்குன்னும் புரிஞ்சுக்கிட்டு சரியான சந்தர்பத்துல அவங்களை பார்த்து பேசி... அவங்களுக்கே தெரியாம எனக்கு சாதகமா காரியத்தை நடத்திக்கிட்ட” 

“சஞ்சய்ட்ட பேசிட்டு இஸ்கானுக்கு போனப்போ நீ ரொம்ப சந்தோஷமாயிருந்தது பிடிக்காம உன்னோட வைரக் கம்மல் ஜோடிலிருந்து ஒன்றை எடுத்துட்ட! அது எங்கிட்டதா பத்திரமாயிருக்கு” என்றபடி அந்த அறையின் ஓர் மூலையில் நின்றிருந்த மேஜையிலிருந்து ஒரு சிறு பெட்டியை எடுத்து வந்து அவளிடம் காட்டினான்.

வேதிக் சொன்ன ஒவ்வொன்றையும் கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தவளின் கண்கள் தொலைந்துவிட்டாதாக நினைத்திருந்த வைரக்கம்மலை பார்த்ததும் விரிந்தன.

“இதுக்கே ஷாக் ஆயிட்டா எப்படி சரயூ? இன்னும் நிறைய இருக்கே! என்னோட திட்டங்கள் அடுத்தடுத்து தோற்கவும், ஒரு மாஸ்டர் ப்ளானை போட்டேன்.  யாருக்கும் தெரியாம, எந்த க்ளூவும் விடாம இன்னைக்கு உன்னை கூப்பிட்டு வந்த மாதிரி.... உன்னை கடத்தி பயம்னா என்னன்னு புரிய வைக்கனும்னு முடிவு செய்த”

ஏன் தன்னை கூட்டம் நிரம்பி வழியும் மார்க்கெட்டுக்கு வரவழைத்தான் என்று இப்போது புரிகிறது இவளுக்கு.

“அதுக்கு பொருத்தமாயிருந்தது நம்ம கூர்க் ட்ரிப்.  உன்னை கடத்தி கிரணுக்கு கல்யாணம் செய்து வக்கிறதா ஆசைக்காட்டவும் அந்த லூசு நான் சொன்னதுக்கு ஒத்துக்கிட்டா.  வேலை முடிஞ்சதும் அவனை கழட்டி விட்றதுக்கான எல்லா ஏற்பாட்டையும் செய்துட்டுதா உங்க எல்லாரோடவும் ட்ரிப்புக்கு ஜாலியா வந்த”

“ப்ளான்படி பார்ட்டி டைம்தா இதுக்கு சரியா இருக்கும்... எந்த வகையிலும் சஞ்சய் இடைஞ்சலா இருக்க கூடாதுனு கோக்ல மயக்க மருந்து கலந்து கொடுத்த... அதிசயத்திலும் அதிசயமா... அவனுக்கே தெரியாம எனக்கு ஹெல்ப் செய்துட்டா சஞ்சய்.  உன்னை கடத்துற அளவுக்கு ரிஸ்கில்லாம உன்னை ரிசார்ட்டிலிருந்து போகவச்சா.  ஆனா அந்த முட்டாள் கிரண், எங்கிட்ட சொல்லாம உன்னை கூப்பிட்டு போயிருக்கா.” 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.