(Reading time: 20 - 40 minutes)

சரயூ ஜெயிலுக்கு போய் இவனிடமிருந்து தப்பித்திட கூடாதே.  சட்டென உதித்த யோசனையோடு, “நான் போயி பார்த்துட்டு வரேன்.  நீ யஷ்விதாவோட ரிசார்ட்டுக்கு போ.  அப்றமா போலீஸுக்கு போறதை பற்றி பார்த்துக்கலாம்” என்றவன் யஷ்விதாவிடம் “கிளம்புங்க! இங்கிருப்பது சேஃப் இல்லை” என்று வலியுறுத்த யஷ்விதா சரயூவை எழுப்பி காரில் உட்கார வைத்து கிளம்பினாள்.

“ப்ளீஸ் யஷ்விதா! என்னை போலீஸ்ட்ட கூட்டிப்போ” என்று சரயூ கெஞ்ச கெஞ்ச... யஷ்விதா காரை ரிசார்ட்டுக்கு விட்டாள்.  அவளை பொறுத்தமட்டும் போலீஸுக்கு போவதோடு இது முடிந்துவிடாதே! அதை தொடர்ந்து சரயூ சந்திக்க வேண்டிய அவமானங்களும் கேட்க வேண்டிய கொடூர பேச்சுகளையும் நினைக்கவே நடுங்கியது.  வேதிக் ஏதோ செய்யட்டும்...சரயூவை சமாதானப் படுத்தி, நாளைக்கு வீட்டிற்கு அழைத்து சென்றிட வேண்டும் என்பதில் திடமாக இருந்தாள்.

காட்டிலிருந்து சரயூ வெளி வந்திருந்த வழியாக சென்று கிரணுடைய உடலை தேட ஆரம்பித்தான்.  தட்டு தடுமாறி வேதிக் அந்த இடத்தை அடைந்த போது, இரத்தத்தில் குளித்திருந்த கைகுட்டை கழுத்துக்கு கட்டியிருக்க வெகு சிரமபட்டு சுவாசித்து கொண்டிருந்தான் கிரண்.  அவனிடம் சுவாசத்தை தவிர எந்த அசைவும் இருப்பதாக தெரியவில்லை.  நிலைமையின் வீரியம் புரிய, அவனை தூக்கி வந்து அவனுடைய காரிலியே ஏற்றி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான் வேதிக்.

அவசர சிகிச்சை பிரிவில் அவனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர், முக்கியமான தமனிகளுக்கு (artery) எந்த குறையுமில்லாததால் உயிர் பிழைத்த கிரணுக்கு குரல்வலைக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கபட்டிருப்பதால் சிறிது காலத்துக்கு பேச முடியாதென்றும், இன்னும் சில மாதங்களுக்கு மருத்துவமனை வாசம் அவசியமென்றும் சொல்லி சென்றார்.

வேதிக்கிற்கு அவனை கொல்லும் எண்ணமிருக்கவில்லையே.  அதுவுமில்லாது அவனால் வேறேதும் வகையில் சரயூவை வதைக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளலாம் என்றுதான் அவனை காப்பாற்றியிருக்கிறான்.

ஹாஸ்பிடல் ஃபார்மாலிடிஸ் முடித்து கொண்டு யஷ்விதா தங்கியிருந்த ரிசார்ட்டிற்கு வந்து சேர நடுநிசியாகி இருந்தது.

அழுதழுது வீங்கிய இமைகள் தூக்கத்திற்கு ஏங்கின... ஆனால் இவள் கண்களை மூடினால் தான் கிரண் வந்து நிற்கிறானே! இன்னமும் பயத்தில் நடுங்கியபடி யஷ்விதாவோடு ஒட்டிக் கொண்டிருந்தாள் சரயூ.  அவளுடைய எந்த சமாதானமும் சரயூவை நெருங்க முடியவில்லை.

யஷ்விதா சொன்னதால் அறைக்கே வந்த வேதிக்கின் மனது அவளை கண்டு மேலும் குளிர்ந்தது.

“என்னை போலீஸ்ட்ட கூட்டிப்போ வேதிக்!” இத்தனை நேரமாக அவனிடம் பேசாதிருந்த சரயூ கேட்க... அவனுக்கு எரிச்சலாக இருந்தது. 

‘ரூல்ஸ் பேசிதா என்னோட வசந்தை கொன்னுட்ட.  அந்த கிரண் செய்த வேலைக்கு, போலீஸ்க்கே போனாலும் உனக்கு தண்டனை கிடைக்காதே! என்ன செய்யலாம்?’ யோசித்தவன் அவளருகில் உட்கார்ந்து,

“கிரண் செய்த நம்பிக்கை துரோகத்துக்கு நீ அவனை கொன்னதுல தப்பேயில்லை! அதே மாதிரி நீ போலீஸுக்கு போறதும் தேவையில்லாத ஒன்னு.  கவனமா கேளு சரயூ.... உங்க குடும்பம் கௌரவமான குடும்பம்.  இந்த கொலைக்காக நீ ஜெயிலுக்கு போயிட்டா அவங்க நிலைமையை யோசிச்சு பார்த்தியா? உங்கண்ணன் கல்யாணமே நின்னு போயிடும்.  அப்பா உன்னை சரியா வளர்க்கலையோனு கவலையில விழுந்துருவாரு. அதை பார்த்தே அம்மாக்கும் ஏதாவது ஆகிபோச்சுனா என்ன செய்வ? உங்கப்பா இல்லாத ஹாஸ்பிடலோட நிலைமை என்ன? அங்க வேலை செய்ற எத்தனை பேரோட வாழ்க்கை கேள்விக்குறியாகும்னு யோசிச்சியா? கிரணை கொன்னது தப்பேயில்லாத போது, இத்தனை பேரை எதுக்காக கஷ்டபடுத்தனும்?” எதை சொன்னால் அவளை சமாளிக்க முடியுமென சரியாக தெரிந்து வைத்திருந்தான் வேதிக். 

சாகாத ஒருவனுக்காக இவள் ஜெயிலுக்கு போக போவதில்லை... ஆனால் இவளின் இந்த குற்றவுணர்வை வைத்தே அவளுடைய நிம்மதியை குலைத்து நடைப்பிணமாக்கலாமே! அதனால்தான் கிரண் இறந்தவனாகவே இருக்கட்டுமென்ற முடிவிற்கு வந்திருந்தான்.  எப்படியும் சிகிச்சை முடித்து அவன் மருத்துவமனையிலிருந்து வெளியேற மாதங்களாகும்.  அவன் குடும்பத்திற்கு விபத்தில் சிக்கி இப்படியாகி விட்டதென சொல்லி சமாளித்து விட்டால் போதும்.  மீதத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாம்!

“இந்த விஷயம் நம்ம மூனு பேரை தவிர யாருக்கும் தெரியாது... இதுக்கு பிறகும் தெரிய போறதில்லை.  சஞ்சய், ரூபின், சௌம்யா யாருக்குமே தெரியகூடாது”

ஜெய்யின் பெயரைக் கேட்டதும், பயத்தில் மூழ்கியிருந்தவளுக்கு இதுவரையும் மறந்துவிட்டிருந்த, அவன் ஏன் வரவில்லை என்ற கேள்வியெழ.... மீண்டும் வேதிக் பேச ஆரம்பித்தான்.

“இந்த கிரண் மாதிரி நம்மை சுற்றி யாரெல்லா இருக்காங்கனு தெரியலை” போலியான வருத்தம் வழிந்த அவன் குரலில், இருப்பெண்களும் புரியாது விழிக்க... அந்த காணொலியை ஓடவிட்டான் வேதிக். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.