தொடர்கதை - காரிகை - 06 - அமுதினி
மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்
சத்யாவுக்கு ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்!!! பவித்ராவா பேசியது என...தன்னுடைய அறையில் நுழைந்தவனுக்கு சந்தோசத்தை கட்டுப்படுத்த முடியாமல் கால்கள் துள்ள வானை நோக்கி கைகளை குத்தினான் உற்சாகமாக. அதற்குள் அவன் மனசாட்சியோ அவனை கேலி செய்தது. "டேய்ய்ய் அடங்கு... நீ டொனேஷன் பண்ணுனது தெரிஞ்சு அவ உனக்கு தேங்க்ஸ் சொன்னா. அவ்ளோ தான். நீ கொடுக்கற ரியாக்ஷனை பார்த்தா அவ என்னவோ ஐ லவ் யு சொன்ன மாதிரி இருக்கு" மனசாட்சியின் கிண்டலை ஒதுக்கி தள்ளினான் சத்யா.
"நீ வேற எப்ப பாரு, மனுஷனை கொஞ்சம் கூட சந்தோசமா இருக்க விடமாட்டியே... நானே எப்படி இருந்தாலும் என் குட் நைட்க்கு பதில் சொல்லமாட்டானு நினைச்சிட்டு போனா, ரெஸ்பான்ஸ் வந்ததே பெருசு பாஸ்" தன் மனசாட்சியிடம் பேசியவனுக்கு அவள் அவனிடம் பேசியதே மனதில் ஓடியது.
இரவு உணவை முடித்ததும் வழக்கம் போல அம்மாவிடம் அமர்ந்து சிறிது நேரம் பேசியவன் உறங்க செல்லும் முன் பவித்ரா இருந்த அறையின் முன்னே நின்று அந்த அறையின் கதவை மெல்ல தட்டினான். உள்ளே இருந்து வந்தாள் உமா.
"வாங்க " என்றவள் "அக்கா சார் வந்துருக்காங்க" எனவும் "சார் எல்லாம் வேணாம் உமா. மாமான்னு கூப்பிடு(?)" என்றவன் பவித்ராவை பார்த்தான்.
"இப்போ எப்படி இருக்கு பவித்ரா? டேப்லெட் எல்லாம் எடுத்துகிட்டியா? " அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள். இவன் ஏன் தினமும் வந்து இப்படி கேட்கிறான் என்று இருந்தது அவளுக்கு. அவனுக்கு தான் பதில் சொல்லாமல் இருந்தாலும் அவனும் விடாமல் வந்து கேட்பது அவளுக்கு என்னவோ போல இருந்தது. அவன் கேட்பதை எல்லாம் கேட்டும் கேளாமலும் இருக்க இயலவில்லை அவளால்.
தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் பதிலுக்கு. அதுவே சத்யாவுக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது. ஏதாவது ஒரு வகையில் பதில் வந்ததே என்று திரும்பியவன் "எஸ்கியூஸ் மீ சார் " என்ற குரலில் நின்றான். அவள் அழைப்பது தன்னை தானா என்ற சந்தேகத்துடன் திரும்பினான் சத்யா.
"கூப்டியா பவித்ரா?" ஆர்வத்துடன் சத்யா கேட்கவும் அவனது ஆர்வத்தை கண்ட பவித்ராவுக்கு ஒரு கணம் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டி கொண்டது.