வாழ்க்கையை அழித்ததுதான் மிச்சம். அப்படி என்ன அவள் உனக்கு பண்ணினாளா?. உன்னுடைய கண்ணில் பட்டதுதான் தவறு. அவளை காதலிப்பதாக நினைத்து கொண்டு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து அவளுடன் வாழ்ந்திருக்கிறாய்… உன்னை விட்டு பிரிய நினைத்தவளை பயமுறுத்தி இந்த உலகத்தை விட்டே அனுப்பி விட்டாய்." என்ற குரல் கேட்டு திரும்பினான். பரத்….!
"உனக்குத் தெரிந்த மீராவைப் பற்றி நீ பேசலாம். ஆனால் என்னுடைய வாழ்க்கையை பற்றி உனக்கு என்ன தெரியும்?. நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்பது உனக்குத் தெரியுமா?. அது பற்றி பேசும் தகுதி உனக்கு கிடையாது" என்று கடினமான குரலில் கூறினான்.
'மீராவிற்கு உன்னை பிடிக்காது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவள் உன்னை ஒருபோதும் காதலிக்கவில்லை. உண்மையை சொல்லப் போனால் நீயும் அவளை காதலித்ததில்லை. அவளுடைய அழகில் மயங்கி… அந்த அழகு உனக்கே சொந்தமாக வேண்டும் என்று அவளை திருமணம் செய்து கொண்டு விட்டாய் என்று பரத் சொன்னான்.
"அதுதான் உன்னுடைய எல்லை. இனிமேல் எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த உறவு பற்றியும் காதலைப் பற்றியும் பேச உன்னை நான் அனுமதிக்கப்போவதில்லை. இந்த நிமிடமே இந்த அறையை விட்டு வெளியே சென்று விடு" என்று கோபத்தில் சத்யவிரத் கத்தினான்.
"ஏன் இவ்வளவு கோபம்?. மீரா உன்னை காதலிக்கவில்லை என்று சொன்னதைக் கேட்டு பதறுகிறாயா?. இது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். எப்பொழுது ஒரு பெண் இவனுடன் வாழ எனக்கு விருப்பமில்லை என்று விவாகரத்து கோருகிறாளோ… அப்போதே அவர்களுக்கிடையில் எதுவும் இல்லை என்பது உலகத்திற்கே புரிந்துவிடும்."
ஆமாம்… மீரா விவாகரத்து கேட்டாள்தான்… ஆனால் அவர்கள் இடையே ஒரு பிரச்சனையும் இல்லையே… அவளை மகாராணிபோல வைத்திருந்தான். அவள் மீதிருந்த காதலை நிருபிக்கும் வண்ணம் எத்தனை பரிசு பொருட்கள் வாங்கி தந்திருக்கிறான்…?