(Reading time: 12 - 23 minutes)
Nenchil thunivirunthaal

"வாடா! வா! நாங்க இத்தனை வருடம் இவரை கஷ்டப்பட்டு வளர்ப்போமாம்! புதுசா என்னமோ பெற்றவளோட பாசம் பொங்குதோ உனக்கு?" என்று சேலைத் தலைப்பினை அவர் முடிய பதறிப்போனான் உடையான்.

"மா! ஏன்மா இப்படி பேசுறீங்க? நான் அப்படி சொல்ல வரலைம்மா!" அவன் மாறவில்லை. மாறியது எல்லாம் உடல் தோற்றம் மட்டுமே! அவனுள் இருக்கும் பாலகன் என்றும் பாலகன் தான் என்ற குட்டு வெளிப்பட தாயின் மனம் இளகிப் போனது. அக்கறையோடு தன் மகனின் கன்னத்தினைத் தீண்டினார் தர்மா.

"டேய் கண்ணா! நான்தான்டா உன் அம்மா! நீ எனக்கு எவ்வளவுப் பெரிய வரம் தெரியுமா? உன்னால இந்த ஊரோட தலையெழுத்தே மாறப் போகுது! காலங்காலமா அவங்க பின்பற்றி வந்த பைத்தியக்காரத்தனமான நம்பிக்கையை உடைக்கப் பிறந்தவன் நீ!நீ என் இரத்தம் இல்லைத்தான்! ஆனா, என் வாரிசு! உண்மை ஒருநாள் வெளிப்படணும்னு, அது நியதி! ஆனா அதுக்காக நீ என் மகன் இல்லை யார் சொல்லுவா?" அவர் மனதிலான தாய்மை விழிகளில் பொங்கியது.

"உன் அப்பா மேலே ஆதிக்கு என்ன உரிமை இருக்கோ, அதோட சம அளவு உரிமை உனக்கும் இருக்கு! அதை அவர் ஊர் அறிய சொல்லாமல் நான் விடுவதாக இல்லை. இப்போ அவரே தானே உன்கிட்ட உண்மையை சொன்னது! நாளைக்கு ஊருக்கே சொல்லுவார்!" என்றதும் வெறுப்புற்ற அவன் பாவனையை அவர் கவனிக்க தவறவில்லை.

"அவர் செய்தது தப்புத்தான் கண்ணா! ஆனா, ஒருமுறை அவரை மன்னிக்க மாட்டியா உன் அம்மா எனக்காக?" அம்மொழிகளில் அடங்கி இருந்த உயர்ந்த அன்பு அவன் மனதினை இளக வைத்தது.

"ஆதி என்னை அம்மான்னு கூப்பிட்ட போது எந்த அளவு நான் சந்தோஷப்பட்டேனோ, அதே அளவு நீ கூப்பிடும் போது நான் சந்தோஷப்பட்டேன். ஆனா, அந்தச் சந்தோஷம் உங்க அப்பாவுக்குத் தான் கிடைக்கலைடா!" என்றதும் கலங்கின அவர் விழிகள்!

"அவர் ரொம்ப நல்லவர் உதய்! அவரை தப்பா நினைக்காதே! காலம் எல்லாத்தையும் மறக்க வைக்கும்!" ஆறுதல் கூறினார் அவர்.

"எதையும் மறக்க வைக்காதும்மா! எதையும் மறக்க வைக்காது!" வாடிப் போயின அவன் கண்கள்! தன்னையே நொந்துக் கொண்ட அவன் எண்ணங்களை ஊகிக்காமல் இல்லை தாய்மனம்.

"இத்தனை வருடத்தில், நீ என் வயிற்றிலிருந்துப் பிறக்கலை, நான் வெறும் உன்னுடைய வளர்ப்பு தாய் தான் அப்படிங்கிற உண்மையை மறக்க வைத்த காலத்துக்கா உன் மனசுல இருக்கிற கசப்பான விஷயங்களை மறக்க வைக்கிற சக்தி இல்லைன்னு சொல்ல வர?" புன்னகைத்த தாயை திகைத்துப் போய் பார்த்தான் உடையான். அம்மொழிகளுக்கு அவனிடம் எதிர்மொழி என்பது எள்ளளவுமில்லை. தன்னைக் கட்டுப்படுத்த முயன்று தோல்வியுற்றவனாய் தாயினை இறுக அணைத்துக் கொண்டான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.