சித்தப்பாவோட பொண்ணுன்னு தெரிஞ்ச உடனே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. ஊரில் இருந்து வந்தீங்களா? சித்தப்பா, சித்தி எல்லாம் நல்லாருக்காங்களா?”
“இருக்காங்க இருக்காங்க. உனக்கு தெரியாதா? நானும் இந்தக் காலனியில்தான் இருக்கேன்.” என்றாள் ஒருமாதிரிக் குரலில்.
“ஓ. அப்படியா.”
“சமைச்சு வச்சுட்டியா? அத்தானுக்கு சாப்பாட்டை வேஸ்ட் பண்ணா பிடிக்காது. அத்தான் சாப்பிட்டு வந்துடுவேன்னு சொன்னாரு. அவருக்கு செய்ததை நான் எடுத்துட்டுப்போறேன்.” என்றவள் சகஜமாய் சமையல் அறைக்குள் நுழைந்தாள். சிறிது நேரத்திலேயே பாத்திரங்களுடன் வெளியேறினாள். அவளின் செயல் மகாலட்சுமிக்கு வித்தியாசமாக இருந்தது.
அவள் சமையல் அறைக்கு சென்று பார்த்தாள். பாத்திரங்கள் இறைந்து கிடந்தன. சமையலை முடித்ததும் அவள் சமையல் அறையை ஒழுங்கு செய்துவிட்டுத்தான் வந்திருந்தாள்.
அவன் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவான் என்று கூறியதால் தான் காத்திருக்கத் தேவையில்லை என்று நினைத்தவள் உணவு இருந்த பாத்திரங்களைப் பார்த்தாள். காலியாக இருந்தது. அவள் சாப்பிட்டாளா? இல்லையா? என்று கூட கேட்காமல் அனைத்தையும் எடுத்துச் சென்றிருந்தாள் அந்தப் பெண். அவள் தன் பெயரைக் கூட சொல்லியிருக்கவில்லை.
அவள் மதியமும் சரியாக உணவு உண்ணவில்லை. இப்போது பசித்தது. இனி எதையாவது செய்து சாப்பிட வேண்டுமா? என்று யோசித்தாள். அலுப்பாக வந்தது, பால் இருந்தது. பாலைக் காய்ச்சினாள். அவனுக்கு வைத்துவிட்டு குடித்தாள். படுக்கயைறைக்குச் சென்றாள்.
அவளுடைய அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். அவன் அவளுக்கு அழைத்திருக்கவில்லை.
அப்படி என்றால் அந்தப் பெண் அவளிடம் பொய் கூறினாளா? இல்லை மாதவன் அந்தப் பெண்ணிடம் பொய் கூறினானா?
அவளால் அறிய முடியவில்லை.
அவள் நீண்ட நேரம் காத்திருந்தும் அவன் வரவில்லை. அவனிடம் அவள் ஏன் இப்படி செய்தான் என்று கேட்கவேண்டும் என்றுநினைத்திருந்தாள். அவளறியாமல் உறங்கினாள்.
காலையில் குக்கர் சத்தத்தில் கண் விழித்தாள்.
‘அய்யய்யோ. இத்தனை நேரமா தூங்கிட்டேன். இதற்கு என்ன பஞ்சாயத்து கூட்டப்போறானோ தெரியலையே.’
அவள் தயக்கத்துடன் சமையல் அறைக்குச் சென்றாள்.
“இப்படியா தூங்கி விழிச்ச கையோடு வருவே? நீ ஒன்னும் எனக்கு சமைத்துப் போடனும்னு நான் காத்துக்கிட்டு இருக்கலை. நான் யாரை நம்பியும் இல்லை.” என்றான் மொட்டையாய்.
இவன் எதற்காக இப்படி பேசுகிறான் என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றாள். சொல்லப்போனால்