அழைப்பு மணி ஒலித்தது. அவனாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் கதவைத் திறந்தாள்.
ஆனால் அங்கே நின்றது ஒரு இளம்பெண்.
“போன் அடிச்சா எடுக்க மாட்டியா? நேரம் காலம் பார்க்காமல் தூங்குவியா?”
என்று ஏகவசனத்தில் பேசியவாறு அவள் நின்றிருந்தாள். அவள் பேசும் தொனியே மகாலட்சுமிக்குப் பிடிக்கவில்லை.
அவளை திருமணத்தின் போது பார்த்திருக்கிறாள். அவனுடைய உறவுக்காரி என்று புரிந்தது. இந்த நேரத்தில் இவள் எங்கே இங்கே வந்தாள்? இவள் எப்போது எனக்கு அலைபேசியில் அழைத்தாள்?
“என்ன திருதிருன்னு முழிக்கிறே?”
“இல்ல. நீங்க யாருன்னு எனக்குத் தெரியலை. நீங்க எப்ப எனக்கு போன் பண்ணீங்க?”
“நான் ஏன் உனக்குப் போன் பண்ணப்போறேன்? அத்தான் தான் உன்னைக் கூப்பிட்டாராம். நீ போனை எடுக்கலையாம். ராத்திரி வர லேட்டாகுமாம். நீ சாப்பிட்டுவிடுவியாம். எத்தனை அக்கறையா நீ பட்டினியா கிடப்பியேன்னு எனக்குப் போன் பண்ணி சொல்றாரு. அவர் என்ன பண்றாருன்னு கூட தெரியாமல் நீ பாட்டுக்குத் தூங்கிக்கிட்டே இருக்கே?”
‘நீ பார்த்தியா நான் தூங்கறதை?’ அவள் மனதிற்குள்ளேயே முணுமுணுத்தாள்.
ஏற்கனவே அவன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்று தெரியவில்லை. இதில் அவனுடைய உறவுக்காரியை அவன் ஏதாவது சொல்லப்போக அது வேறு வம்பில் முடிந்துவிட்டால்? அதனால் பேசாமல் வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது என்று தோன்றியது.
‘மகா. இது என்னடி உனக்கு வந்த சோதனை?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.
“நான் யாருன்னு தானே கேட்டே?”
அவள் கேட்டபிறகுதான் அவள் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறாள் என்றே மகாலட்சுமி உணர்ந்தாள்.
ஏன் இப்படியாகிவிட்டோம்? என்று மனதிற்குள்ளேயே தன் தலையில் ஒரு கொட்டு வைத்துக்கொண்டாள்.
“எங்களை எல்லாம் உனக்கு கண்ணுக்குத் தெரியுமா?’‘
வந்தவள் யார் என்றே சொல்லிக்கொள்ளாமல் தொடர்ச்சியாக பேசினாள்.
‘உன்னைத்தான் என் கண்ணுக்கு நல்லாத் தெரியுதேன்னு சொல்ல வேண்டும் போலிருந்தது.’
“நான் மாதவன் அத்தானோட மாமா பொண்ணு. ராஜசேகர்தான் என்னோட அப்பா.”
ஒருவழியாக அவள் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்.
அவளுக்கு அவள் ராஜசேகரின் பெண் என்றதும் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவரிடம் இருக்கும் தன்மையான பேச்சு இந்தப் பெண்ணிடம் இல்லை என்று தோன்றியது.
“உங்களை கல்யாணத்தில் பார்த்தேன். ஆனால் யாருன்னு தெரியலை. நீங்க ராஜசேகர்