மாப்பிள்ளையிடம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு கிளம்புகிறவர்கள் அல்ல. யாரிடம் தப்பு இருக்கிறது என்று ஆராயாமல் எதையும் கண்மூடித்தனமாக நம்பமாட்டார்கள்.
அவன் தன் தாயிடமும், தோழியிடமும் கூறிய காரணத்தை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தாள்.
இருவரும் கிளம்பினர்.
“அண்ணா. காபி சூப்பர். நீங்க இப்படியே சமைத்துப் போட்டீங்கன்னா லட்சுமி இன்னும் ஒரு சுத்து பெருத்துப்போய் அப்புறம் ஒர்க்அவுட்னு கஷ்டப்படனும்னு நினைக்கிறேன்.” என்று கிண்டலுடன் கூறிவிட்டு கிளம்பினாள்.
கிளம்பும்போது மகளை அணைத்து உச்சியில் முத்தமிட்டாள் வளர்மதி.
“பார்த்து மாப்பிள்ளை மனம் கோணாமல் நடந்துக்கோடா.” என்றாள்.
இவளும் வேறு வழியில்லாமல் புன்னகையுடன் தலையாட்டினாள். இவளுடைய வருத்தத்தைக் காண்பித்து வீட்டினரை எதற்கு வருத்தப்படுத்த வேண்டும்?
அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும். அவனைப்புரிந்து கொள்ள சில காலம் பிடிக்கும். அதுவரைக்கும் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்.
பரவாயில்லை. தன் வீட்டினரிடம் நல்லவிதமாக நடந்துகொள்கிறானே. அந்த மட்டும் அவள் கொடுத்து வைத்தவள்தான்.
அவர்கள் திருமணத்திற்கு முன்பே கந்தசாமி கீழே விழுந்து அடிபட்டபோது இவன்தான் வைத்தியம் பார்த்திருக்கிறான். அவள் படிப்பை முடித்து வந்தபோது வீட்டில் சொன்னார்கள். அவன் அத்தனை அக்கறையுடன் கவனித்ததால்தான் அவருக்கு அத்தனை சீக்கிரம் குணமாகியது என்று கந்தசாமி பெருமையுடன் சொன்னார். அதுவும் அவனே தங்கள் வீட்டு மாப்பிள்ளையாகப் போகிறான் என்றறிந்ததும் அவருக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்.
தன்னிடம் வரும் நோயாளிகளையே இப்படி பார்த்துக்கொள்கிறவன், தனக்கு வரப்போகும் மனைவியை எப்படி எல்லாம் பார்த்துக்கொள்வான் என்று அவர் பேசும்போது அவளுக்கு நம்பிக்கை இருக்கவில்லை தான். அதற்கேற்றாற்போல்தான் அவனும் நடந்துகொள்கிறான்.
அவன் இரண்டு விதமாக நடந்துகொள்கிறான். அதில் ஏதாவது ஒன்றுதான் அவனுடைய உண்மையான குணமாக இருக்க வேண்டும்.
அவன் தன்னிடம் நடிக்கிறானா? இல்லை நல்லவன்போல் தன் வீட்டினரிடம் நடிக்கிறானா? அவளுடைய கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை.
அவர்கள் இருவரும் சென்ற உடனே அவனும் அவள் கேள்வி கேட்க வழியில்லாமல் வெளியில் சென்றுவிட்டான்.
யோசனையுடன் இரவு சமையலை முடித்தாள்.