“நான் எங்க வீட்டுக்குப் போறேன்னு சொன்னதும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அத்தே. நான் மகாவை சரியா கவனிக்கலையோன்னு ரொம்ப வருத்தமா இருக்கு.” என்றான் வருத்தமான குரலில்.
‘அடப்பாவி. இப்படி நடிக்கிறியேடா? அப்படி வருத்தப்பட்டவன்தான் என் கன்னத்தில் அறைந்தாயா?’
வாயைப் பிளக்காத குறையாக கணவனைப் பார்த்தாள்.
“நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க மாப்பிள்ளை. கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு ஆரம்பத்தில் புகுந்த வீட்டில் பொருந்தறது கொஞ்சம் சிரமம்தான். எல்லாம் போகப்போக சரியாயிடும்.”
“,இல்லத்தை. நான் அவளுக்கு ஏதோ குறை வச்சிருக்கேன்னு தோணுது.”
“லட்சுமி. இப்படி அசட்டுத்தனமா உளரலாமா? மாப்பிள்ளை எத்தனை வருத்தப்படறாரு பாரு. கல்யாணம் ஆன பொண்ணு முதன் முதல்ல வீட்டுக்கு வரும்போது கணவனுடன்தான் வரனும். அது என்ன நான் எங்க வீட்டுக்குப்போறேன்னு சொல்றது. இனி இதுதான் உன் வீடு.”
“டக்குன்னு அப்படி மாத்திக்க முடியாதுல்ல அத்தை. எங்க வீடுன்னு மகா சொன்னதுதான் தாங்க முடியலை. அம்மா வீடுன்னு சொல்லியிருக்கலாம். இல்லை என்னையும் குடும்பத்தில் ஒருவனா நினைச்சு நம்ம வீட்டுக்குப்போயிட்டு வரலாம்னு சொல்லியிருக்கலாம். எனக்குன்னு யாரு இருக்கா? இனி இவள்தானே எனக்கு எல்லாம்.” கரகரத்த குரலில் பேசினான்.
அவன் குரலில் வளர்மதியும், சுகன்யாவும் கரைந்து போனார்கள்.
இவனுக்கு இப்படி எல்லாம் பேசத்தெரியுமா? நான் எங்க வீட்டுக்குப் போகனும்னு சொன்னதால்தான் இவன் அடித்தானா? அதற்கு முன்பு மட்டும் கொஞ்சிக்கொண்டிருந்தானா? அவளுக்கு எரிச்சலாக வந்தது. எதற்காக இவன் இப்படி நடிக்க வேண்டும்?
தன்னை அடித்ததை வீட்டினரிடம் சொல்லிவிட்டால் அவர்கள் அவனிடம் சண்டைக்கு வருவார்கள் என்று பயந்துவிட்டான் போல.
அப்படித்தானிருக்கும். இல்லை என்றால் ஏன் அவன் தன் அன்னையை அழைக்க வேண்டும். இப்போது அவள் அவனைப் பற்றி என்ன சொன்னாலும் அவளுடைய அன்னை நம்ப மாட்டாள். அப்படியே அறைந்தால்தான் என்ன? நீ ஏன் மாப்பிள்ளைக்கு கோபம் வருமளவிற்கு நடந்துகொண்டாய்? என்று அவளுக்குத்தான் திட்டு விழும்.
அது ஏன் என்று தெரியவில்லை. மருமகன் வீட்டிற்கு வந்துவிட்டால் மகள் கூட இரண்டாம்பட்சமாகிவிடுவாள். அவனை அப்படி தாங்குவார்கள். மருமகனுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது. இல்லை. மருமகனை நன்றாக கவனித்தால் அவன் தங்கள் மகளை மகிழ்ச்சியுடன் வாழ வைப்பான் என்ற எண்ணம்தான் அவர்களை அப்படி நடந்துகொள்ள வைக்கிறது.
அவன் பயந்த மாதிரி அவள் ஒன்றும் சிறுபிள்ளைத்தனமாய் இந்த விசயத்தை எல்லாம் வீட்டில் சொல்லக்கூடியவள் அல்ல. அப்படியே அவள் சொன்னாலும், அவள் வீட்டினர் அதற்காக