விவரம் தெரிந்த நாட்களுக்குப் பின் முதன்முறையாய் அத்தகு நிலையில் தாயினை முதன்முதலாய் காண்கிறான் அவன். மனமே நொறுங்கிப் போனது அவனுக்கு!
"மா!" இளையவனை ஒதுக்கிவிட்டு தாயிடம் சேர்ந்தான் அவன். எக்காரணத்தினாலோ தன் மகனை நன்றியோடு ஏறிட்டார் தர்மா. ஏதும் பேசாமல் மௌனமாக உள்ளே சென்றார் அவர். தாயாரின் பிம்பம் மறைந்ததுமே மீண்டும் களத்தில் இறங்கியவனாய் தனது ஆக்ரோஷத்தினை எல்லாம் இளவல் மீது காட்ட பாய்ந்தான் ஆதி.
"எங்கேடா போன?என்ன என்னிடமே உன் விளையாட்டை காட்றீயா?" என்றுப் பாய்ந்தவனைத் தன் பலம் கொண்டு தடுத்தாள் மாயா.
"வேணாம் ஆதி! ப்ளீஸ்...சொல்றதைக் கேளுங்க!" சூழல் கைமீறி செல்லும் முன் தடுக்க முயன்றாள் அவள்.
"விடு! எங்கேயாவது வாயைத்திறக்கிறானா பாரு! பதில் சொல்லுடா!" உரத்த குரலில் அவன் கத்த,
"எங்கேயாவது தொலைந்துப் போயிடலாம்னு தான்ணா போனேன்." என்று வெடித்துவிட்டான் இளையவன். அவனதுப் பதிலில் ஆடிப்போயினர் இருவரும்.பொங்கிய கண்ணீரை கட்டுப்படுத்தியவனாய்,
"என்னால தான் எல்லாருக்கும் கஷ்டம்! என்னால தான் அம்மா அவங்க குடும்பத்தை விட்டு வந்தாங்க...நீங்க இத்தனை வருடமா உங்க அப்பாவைப் பிரிந்து இருந்தீங்க!" என்ற பதிலில் உறைந்துப் போனான் ஆதித்யா.
"என்னடா பிரித்துப் பேசுற? என்னடா பேசிட்டு இருக்க நீ?" பொறுமையிழந்தவனாய் அவன் சட்டையைப் பற்றி உலுக்கினான் அவன்.
"அதானேண்ணா உண்மை! நான் ஒண்ணும் பொய் சொல்லையே!" என்றான் கண்ணீரோடு!
"டேய்! ஏன்டா பைத்தியம் மாதிரி பண்ற? என் உடம்புல ஓடுற அதே இரத்தம் தான்டா உன் உடம்பிலும் ஓடிட்டு இருக்கு!அவங்க எல்லாரும் உனக்கும் தான்டா சொந்தம்!" ஆவேசமாக உரைத்தான் அவன்.
"இல்லை...அவங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான்...நான்..நேர்மையான வழியில பிறக்கலைண்ணா! என்னால யாருக்கும் சங்கடம் உருவாக வேணாம்னு தான் எங்கேயாவது போயிடலாம்னு கிளம்பிட்டேன்.நான் போன பிறகாவது நீங்க எல்லாரும் பழைய மாதிரி ஒண்ணா சேர்ந்துடுவீங்கன்னு எதிர்ப்பார்த்தேன்." என்றான் கண்ணீர் மல்க! அவன் நல்கிய விடை அவனது கோபத்தினைத் தூண்டிப் பார்த்தாலும், ஒரு பக்கம் அவன் மனதினையும் கரையத் தான் வைத்தது.